Puttalam Online
art-culture

பிரித்து வைப்போர் கூட்டம்

  • 6 March 2018
  • 213 views

பிரித்து வைப்போர் கூட்டம்
—————————————-

பிரித்துவைக்க பலர் இருக்கிறார்கள்…!
சேர்த்துவைக்கத்தான் இன்று யாருமே இல்லாமல் போய்விட்டார்கள்… வெட்டி கொத்தி வேர் அறுக்க ஆளிருக்கிறார்கள்…!
அன்பினால் இணைத்துக்கட்ட இதயமுள்ளவர்களை இன்னும் காணவில்லை…!!

இன்று முடியும், நாளை தணியும், வெறியடங்கும் எனக் காத்திருந்தால்…
election முடிந்து இத்தனை நாளாகியும் இந்த பிரித்து வைப்போர் கூட்டத்தின் பீற்றுதல்கள் அடங்கவில்லை…!

தலைவர்களை அல்ல நான் தொண்டர்களைக் கூறுகிறேன்..!!

எழுதுகிறார்கள்…
கல்லெடுத்து சுவரெழுப்பி, இருட்டு வளர்க்க இரவிரவாய் எழுதுகிறார்கள்..
திட்டு, வசைபாடல், குற்றக் குவிப்புகள்… இவனுக்கு அவன்..! அவனுக்கு இவன்…!!

ஒருவன் மெழுகுவர்த்தி தீபமேற்றினால்.. மற்றவன் கூரைகள் எரியும் என்கிறான்…!
தன் தலைவன் வீட்டையே கொளுத்தினாலும், அதனால் ஊருக்கு வெளிச்சம் என்கிறான்..!!

கீறல்களை கிணறுகளாக்கி, வதந்திகளால் வளைபின்னி, கருத்துகளை திரிப்பவர்களே… whatsapp இன் இரைச்சல்களே..
கொல்லன் பட்டறையில், நெருப்பால் முடியாததை கூட நீங்கள் வலைப்பீர்கள்..!!

எப்படி முடிகிறது…? மார்க்கத்தைக்கூட வலைப்பதட்கு உங்கள் மனது துணிகிறது?
நடு நிலை என்ற பெயரில், ஆதரவாளன் என்ற பெயரில், Fake குகள் எனும் திரைமறைவில்… காறித்துப்பும் வார்த்தைகளும் வசனங்களும்…!!

உங்களுக்கு எதிரியென்றால் அவனது தொழுகை கூட சேராது… உங்களது கட்சியென்றால் அந்த மலம்கூட நாறாது..!!

மனித வணங்கிகளே… தவறான தரவுகளை தலையில் திணித்து நல்லெண்ணங்களை நஞ்சூட்டிக் கொல்பவர்களே…!
பிரிவினையின் இடைவெளியில் பிணமாக வாழ்பவர்களே..!!
எங்களை, எங்கள் கலாச்சாரத்தை, இந்த ஊரை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்..?

நீங்கள் இருக்கும்வரை தலைவர்கள் இணையமாட்டார்கள்… நல்லவர்கள் கூட நரமாமிசம் பழகுவார்கள்..!!
இணைந்து பணியாற்றும் இன்பம் இங்கே யாருக்கும் கிடைக்காது..! இந்த ஊர் ஒற்றுமையின் கனிகளை சுவைக்காது…!

நல்லவர்களே.. அடுத்த சந்ததியை நேசிப்பவர்களே.. மௌனம் களையுங்கள்..!
இந்த பிரித்துவைப்போர் கூட்டத்தை பிய்த்தெறியுங்கள்..!!
கட்சிகளும் போட்டிகளும் சொந்தச் சிறைகளல்ல… சொல்லுங்கள்..! பல நிறப் பூக்களின் அழகே ஊருக்கு வேண்டும் உபதேசம் செய்யுங்கள்…!

இந்த நூற்றாண்டின் இன்றியமையா இபாதத்.., சேர்த்துவைக்கும் சேவை செய்யுங்கள்..!
அன்பு பூசி, அடுத்தவர் பக்கம் சொல்லி, கறைகளைக் கழுவுங்கள்…! சுவருகள் உடைத்து பாலம் போடுங்கள்…!!
சில மைத்துளிகளையேனும் சிந்திப்போராடுங்கள்…

இல்லையேல்…

பிரித்துவைப்போர் கூட்டத்தில் நாளை உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள்…!
கத்தி சின்னத்தில் கதவில் போஸ்டர் அடிப்பார்கள்..!!
ஊரில் மட்டுமல்ல உங்கள் வீட்டின் சந்தோஷங்களும் களவாடப்பட்டிருக்கும்..!!!


புத்தளம் மரிக்கார்.
05-03-2018


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All