Puttalam Online
other-news

தெல்தெனிய சம்பவம் என்ன சொல்கிறது?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்

தர்ஹா நகர்,மியன்மார்,கிந்தோட்டை, என்ற சொற்கள் எமது பேசு பொருட்களாக அண்மைக் காலத்தில் இருந்தன. அவற்றின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கையில் தான் அம்பாரையில் தாக்குதலாம் என்ற கவலையான செய்தி வந்தது. அது பேசுப்பட்டுக் கொண்டிருக்கையில் சிரியாவில் பச்சிளம் பாலகர்கள் மீது கூட அட்டூழியங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.அதனால் ஓடிய இரத்த ஆறு வற்ற முன்னர் தெல்தெனியவில் அடாவடித் தனமாம் என்ற மனதைக் குடையும் செய்தி வந்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்தியா?

இந்த உம்மத்தின் அவல நிலை இது.

தெல்தெனிய சம்பவம் மூன்று “முஸ்லிம்”? குடிகார்களால் வித்திடப்பட்டது என்ற விடயம் பாரதூரமனதாகும்.

தன் பக்கத்தில் தவறுகளைக் கொண்ட சமூகம் -தன்னளவில் பலவீனமான நிலையில் உள்ள சமூகம் பலமான பிற சமுகங்கள் மீது கை வைக்கக் கூடாது என்பது முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தரும் செய்தியாகும்.

கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் தெருவில் போவோருக்கு கல் எறியக் கூடாது. People who live in glass houses shouldn’t throw stones என்பார்களே. அதனை இது ஒத்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் ஈமான், கல்வி, பொருளாதாரம், சமூக உறவுகள், பண்பாடுகள் போன்ற துறைகளில் மிகப் பலவீனமான நிலையில் இருப்பதால் அவர்களது சிறிய,பெரிய நடவடிக்கைகள் அனைத்திலும் அவர்கள் மிகவுமே ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். இதன் பொருள் நாம் பலசாலிகளாக இருந்தால் கண்மூக்குத் தெரியாமல் நடக்கலாம் என்பதல்ல.

’வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்’ என்ற நிலையில் தான் இலங்கையிலுள்ள முஸ்லிம் விரோத சக்திகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். செம்படவன் மீன்பிடிக்கும் நோக்கத்துடன் இரையுடன் கூடிய தூண்டிலை ஆற்றுக்குள் எறிந்து விட்டு தூண்டிலுடன் சம்பந்தப்பட்டு தண்ணீர் மேல் மிதந்து கொண்டிருக்கும் மிதப்பின் மீது நுணுக்காமகக் கண் வைத்திருப்பது போல் தான் இன வாதிகள் முஸ்லிம்கள் எங்கு எப்போது தவறு செய்கிறார்கள், அவர்களை முழுமையாக அழித்து விடுவதற்கு என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சின்னத் தாக்குதலுக்குக் கூட முகம் கொடுக்க முடியாத நாம் வீராப்புப் பேசி நிலமையை மோசமாக்கி விடக் கூடாது.

அவர்களை நாம் தாக்கி விட்டு அவர்களது சமூகத்தவர்கள் எமது கடைகளுக்கு பொருட்களை வங்க வர வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. கலவரங்களில் சம்பந்தப் பட்டு காயப்படும் எம்மவர்களை நாம் முஸ்லிம் அல்லாதவர்களால் நிர்வகிக்கப்படும் அரச வைத்தியசாலைகளில் சென்று தான் சிகிச்சைக்காகச் சேர்க்க வேண்டும்.அப்போது அவர்கள் எம்மை எப்படி நடாத்துவார்களோ தெரியாது.உச்சம் தலை முதல் உள்ளம் கால்வரை துவேசம் தலைகேறிய பலர் பல உயர் பதவிகளில் அமர்ந்திருப்பது நிலமையை மோசமக்கிக் கொண்டிருக்கிறது.

தர்ஹாநகர், கிந்தொட்டை, தெல்தெனிய ஆகிய மூன்று இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்குப் பின்னணியில் ‘த்ரீ வீல்’தான் உள்ளது. அதுவும் எமது சமூகத்தின் சாதாரண பொதுமக்கள் தான் அதில் சம்பந்தப்பட்டார்கள். நாம் பண்ணும் பயான்களும் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளும் அவர்களைச் சென்றடைவதில்லை.அவர்கள் ஓர் உலகத்திலும் சமூகத்தின் உலமாக்களும் புத்திஜீவிகளும் வேறு ஓர் உலகத்திலும் வாழுகிறார்கள்.சமூகத்திலுள்ள அடிமட்டத்தவர்களுக்கு சமாதான சகவாழ்வு பற்றிய செய்தி போய்ச் சேரவேயில்லை. சிறுபான்மை சமூகமாக,மிக்க கவனமாக எப்படி வாழுவது என்று அவர்களுக்குத் தெரியாது.குறைந்த அறிவு மட்டம்,முஸ்லிம் சமூத்தின் மேட்டுக் குடிகளுடன் தொடர்பற்ற வாழ்வு ஒழுங்கு இவை பெரும் துரதிஷ்டங்களாகும்.

சமூகத்தில் வறுமை,போதை வஸ்துப் பாவனை,வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் மோசடியும் தில்லுமுள்ளும் என எமது சமூகத்தின் இருண்ட பக்கங்கள் தொடரும் வரை நிலைமை சீராகுவது எப்படி?

குடித்துக் கொண்டிருந்த மூன்று முஸ்லிம்?இளையவர்கள் போதையுடன் காட்டிய சண்டித்தனம் எங்கு போய் முடிங்திருக்கிறது? ஒரு மூட்டை கடிக்க எல்லா மூட்டைகளும் கசக்கப்படுகின்றன.

ஸாலிஹ் (அலை)அவர்களது காலத்தில் இருந்த ஒட்டகையை அறுக்க வேண்டாம் என்ற அல்லாஹ்வின் கட்டளையை மீறி குதாத் என்ற ‘அஷ்கா’(தரித்திரக் காரன்) தான் அதனை அறுத்தான்.ஆனால்,அவனைத் தடுக்காத தமூது கூட்டத்தார் அனைவருமே அதனால் தண்டணையை அனுபவிக்க நேரிட்டது.அல்லாஹ் பாதுகாப்பானாக!

தீமை செய்வோரை தடுத்து நிறுத்தாத போது அனைவரும் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடுமல்லவா?

இலங்கை முஸ்லிம் சமூதைச் சேர்ந்த ஒவ்வொரு தனி மனிதனும் தன் நிலையை உணர்ந்து நாட்டு நிலைக்கு ஏற்ப இஸ்லாமிய அடிப்படையில் தன்னை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகாத வரை இனக்கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது.
உதாரணமாக:-

1. அரச வைத்திய சாலையில் மாதாந்த ‘கிளினிக்’இற்காக வரிசையில் நிற்கும் ஒரு முஸ்லிம் பெண்….
2. தனது சைக்கிளில் பாடசலைக்கு செல்லும் ஒரு முஸ்லிம் மாணவன் ….
3. இறைச்சிக் கடையில் இறைச்சி வெட்டும் முஸ்லிம்
4. முஸ்லிம் அல்லாத பயணிகளை ஏற்றிச் செல்லும் த்ரீ வீலில் முஸ்லிம் சாரதி..
5. முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் ஒரு முஸ்லிம் சிப்பந்தி…
ஆகியோரும் மற்றோரும் ஏன் எல்லோரும் உணர்வு பெற வேண்டும். இவை சில உதாரணங்கள் மட்டுமே.

நிரந்தரமான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் சீலைக்கு மேலால் சொறிவது எப்படி பயன் தரும்?.

ஈமானிய வெளிச்சத்தை கூட்டவும் அறிவுள்ள சமூகமாக மாற்றவும்,எமக்கு மத்தியிலான உறவுகளிலும் பிற சமூகங்களுடனான உறவுகளிலும் உயர் ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்கவும் அழமான காத்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே, அடி மட்டத்தை நோக்கி சமூகத்தின் பிரமுகர்களது கவனம் திரும்புவது காலத்தின் தேவையாகும்.

1. குத்பாக்கள், பயான்கள், விசேடமான பயான்கள்
2. பாடசாலை மற்றும் அஹதியாக்களது காலைக் கூட்டங்கள்
3. பத்திரிகை ஆக்கங்கள்
4. சமூக வலைத் தலங்களான ஃபேஸ்புக்,வட்ஸ் அப் ஆகியவற்றில் பதிவேற்றப்படும் துணுக்குகளும் ஆக்கங்களும்.

போன்ற ஊடகங்கள் வாயிலாக சமாதான சகவாழ்வுக்கான பிரசாரம் தீவிரப்படுத்தப் பட வேண்டும்.

பொதுமைபடுத்தல் (Generalization) பெரும் தவறாகும்.

பெளத்த சமூகத்திலுள்ள துவேஷிகள் தொடர்ந்தும் பெரும் தவறொன்றைச் செய்து வருகிறார்கள்.முஸ்லிம் சமூகத்தச் சேர்ந்த ஒருவரோ சிலரோ ஒரு தவறைச் செய்யும் போது அதனை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தையும் எடை போட்டு விடுகிறார்கள்.தெல்தெனியவில் குடிகாரன் செய்த தவறுக்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள அனைவரும் பொறுப்பல்ல என்ற சாதரண உண்மையை கூட புரிய முடியாத நிலக்கு அவர்களது மூளைகள் சலவை செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நினைக்கையின் கவலையாக உள்ளது.

அந்த சம்பவத்தில் ‘சிலமனிதர்கள்’, ‘ஒரு மனிதனை’க் கொன்றார்கள் என்று ஏன் பார்த்திருக்கக் கூடாது? இலங்கையில் இடம்பெறும் கொலைகளை முஸ்லிம்கள் மட்டுமா செய்கிறார்கள்?லசந்தவையும் வசீமையும் கொன்றவர்கள் முஸ்லிம்களா? ஏன் இப்படி யாக மன நிலை தரம் குன்றி விட்டது?

‘மரகளயா, தம்பியா’ என்று அவர்களிற் சிலர் மிகவுமே கொச்சையாகப் பேசுவார்கள்.ஒருமுஸ்லிம் போதை வஸ்து கடத்தி வந்து அகப்பட்டால் சிங்கள பத்திரிகைகள் ‘முஸ்லிம் ஜாதிகயெக்’என்று எழுதிவிடுவார்கள்.படித்தவர்களான பத்திரிகையாளர்களது நிலையே இதுவாயின் பொதுமக்களது நிலையைப் பற்றி கேட்கவே தேவை யில்லை.

என்ன செய்யலாம்?
1. அல்லாஹ்வுடனான தொடர்பை வலுப்படுத்துவது.அல்லாஹ்வின் உதவி இன்றி எதனையும் சாதிக்க முடியாது.

2. முஸ்லிம் சமூகத்தை முன்மாதிரியான ஒரு சமூகமாக மாற்றியமைக்கும் நீண்ட கால வேலைத் திட்டங்கள், அதுவும் அடி மட்டத்தை நோக்கிய வேலைத்திட்டங்கள் அவசியம்.

3. முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயம் கொண்ட சிங்கள சமூகத்தில் உள்ள உயர் பதவிகளிலும் பொறுப்புக்களிலும் உள்ளவர்களையும் மீடியாத் த்துறை சார்ந்தவர்களையும்(அபூதாலிப்கள்) அணுகி அவர்களது உதவியுடன் சமாதான வேலைத் திட்டங்களை அமுலாக்குவது.

4. முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகள் ஊடாக அரசின் மீதும் உயர் அதிகாரிகள் மீதும் அழுத்தம் கொண்டுவந்து மேற்கொண்டு கலவரங்கள் நடக்காதிருப்பதற்கும் நஷ்ட்ட ஈட்டைப் பெற்ருக் கொடுப்பதற்கும் முயற்சிகளைச் செய்வது.

5. உடனடியாக நிவரணந்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது.

6. பள்ளிகள், பாடசாலைகள்,இஸ்லாமிய இயக்கங்கள்,சங்கங்கள் மற்ரும் சிவில் அமைப்புக்கள் வாயிலாக வேலைத் திட்டங்களை அமுலாக்குவது.

7. ஒவ்வொரு தனி மனிதனும் – முஸ்லிமும் தான் பொறுப்புதாரி என்பதை நுணுக்கமாக உணர்ந்து செயல்படுவது.அதாவது விழிப்பு நிலையில் இருப்பது.

எமது முயற்சி, துஆ, அல்லாஹ்வின் உதவி, அவனது நாட்டம் எல்லாம் சேரும் போது நிகழ்வுகள் திசை மாறலாம்.

அல்லாஹ் எம்மையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!


2 thoughts on “தெல்தெனிய சம்பவம் என்ன சொல்கிறது?

  1. click here says:

    இந்துகளல்லா பொதுச்சமூகத்திற்கு இழப்பில்லையா? கரெக்ட் தி மிஸ்ட்கே. சீப் கஸ்டம் எஸ்ஸாய்ஸ்

  2. Essay says:

    //அவரது பிரிவு ஹிந்து சமுதாயத்திற்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.// அவரது பிரிவு அனைத்து சமுதாய மக்களுக்கும் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை என்று இருக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் ஜன் கலியாண் வாசகம் வைத்த ரிக்ஷாக்கள் ஓடுவதாக அஞசலியில் சொல்லிவிட்டு இந்துக்களுக்கு மட்டுமே இழப்பு என்றால் எப்படி? இந்தியா முழ்வதும் சங்கர மடத்தில் சமூக சேவைகள் எல்லாருக்கும்போய்ச் சேர, இந்துகளல்லா பொதுச்சமூகத்திற்கு இழப்பில்லையா? கரெக்ட் தி மிஸ்ட்கே. சீப் கஸ்டம் எஸ்ஸாய்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All