Puttalam Online
regional-news

உடப்பு தமிழ்க் கிராமத்தில் வாழும் முதியவர்

(உடப்பு குறூப் நிருபர்)
புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு தமிழ்க் கிராமத்தில் பல தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள்.இங்கு வாழ்ந்தவர்களை எடுத்துக் கொண்டால் ஓரிருவர் நூற்றுக் கணக்கான வயதில் வாழ்ந்து சாதனைகளை நிலை நாட்டிலுள்ளனர்.அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடப்பில் வாழ்ந்து அதன் பின்னர் இந்தியா சென்று அங்கு 108வயதில் காலமான ஒரு அம்மணியும் குறிப்பிடத்தக்கதாவார்.

அத்தோடு அண்மையில் மற்றுமொரு வயதில் மூத்த ஒரு அம்மணியை ஆண்டிமுனை கிராமத்திலுள்ள வண்ணாங்குளம் பகுதியில் சந்திக்க நேர்ந்தது.அவர் 100 வயதை கடந்தவராகவும் அவர் கடந்த (2017.06.22)திகதி தமது பிறந்த நாளை கொண்டாடியதாகவும் அவரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர்.

திருமதி.கதிரவேல்-ஆண்டிச்சி என்ற பெயரைக் கொண்ட இவர் மிகவும் திடகாத்திரமாக இருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.அவரிடம் சில உரையாடல்களில் ஈடுபட்ட போது சில தகவல்களை கண்டறியக் கூடியதாக எமக்கு  இருந்தது.பூட்டியான இவர் இரண்டு ஆண் குழந்தைகளையும் மூன்று பெண் பிள்ளைகளையும் பெற்றுள்ளார்.க.சிவகுருநாதன் க.கதிர்காமுத்தையா க.காளியம்மா க.அமிர்தவள்ளி க.கெங்காபரமேஸ்வரி என ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள் யாவரும் கல்யாணம் முடித்தவர்களாவர்.   இந்த அம்மணி பேத்தியின் பிள்ளையையும் கண்டுள்ளார்.உடப்பில் கல்யாணம் முடித்து 4ம் வட்டாரப்; பகுதியில் வாழ்ந்த இவர் கதிரவேல் என்றவரை திருமணம் முடித்தார்.உடப்பில் வாழ்ந்த பிற்பாடு 1960களில் ஆண்டிமுனை கிராமம் மக்களுக்கு அரசாங்கம் கையளித்த பின்னர் இங்கு குடியேறியதாகக் குறிப்பிட்டார்.கதிரையில் அமர்ந்த வண்ணம் அவர் தொடர்ந்து தமது தகவல்களைக் சாதாரணமாகக் குறிப்பிட்டார்.இடைக்கிடை ஜோக்காகவும் வார்த்தைகளைக் கேட்கக் கூடியதாக இருந்தது.தமது கணவரின் தொழிலைக் கேட்ட போது கணவர் கூடுதலாக சிறுகடலுக்குச் செல்வதாகவும் குறிப்பிட்டார். அங்கு அவர் சிறுகடலுக்குச் சென்று வள்ளத்தில் மீன் பிடிப்பதாகவும் அத்துடன் இறால் பிடிப்பதற்காக கூட்டுவலை என்ற உபகரணத்தைப் பயண்படுத்தி தமது ஜீவியத்தையும் நகர்தியுள்ளார்.ஆண்டிச்சி தமது தொழிலைக் குறிப்பிடும் போது தாங்கள் அந்தக் காலத்தில் கூடுதலாக விவசாயம் செய்து வந்ததாகவும் அதில் மிளகாய் கத்தரித்தோட்டம் போன்றவற்றை பயிரிட்டதாகவும் மேலும் குறிப்பிட்டார்.அந்த நேரத்தில் உடப்பு ஆண்டிமுனை கிராமங்களில் கூடுதலாக குளங்கள் காணப்பட்டதோடு ஆண்டிமுனைக் கிராமம் கூடுதலாக காடுகள் நிறைந்து காணப்பட்டதாகவும்  தெரிவித்தார்.பிற்காலத்தில் அவை மறைந்து விட்டது.தற்போது வீடுவாசல்கள் காணக்கூடியதாக உள்ளது.

தமது தாய் தந்தையரைப் பற்றி கேட்ட போது அப்பா முத்துராக்கு எனவும் அம்மா முத்துக்காளியா எனவும் குறிப்பிட்டார்.தமது பாட்டனார்கள் பரம்பரை பற்றி கேட்ட போது ஏழு தோணியில்  இந்தியா இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.உடப்பு கிராமத்தில் உள்ள காளிகோவில் பற்றி கேட்ட போது அந்தக் காலத்தில் காளிகோவில் தனி ஓலைக் கொட்டிலாகவும் அதனைச் சுற்றி எருக்கலை பற்றைகள் நிறைந்து காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.அந்தக் காலத்தில் கொலரா என்ற கொள்ளை நோய் மக்களை ஆக்கிரமித்ததாகவும் பின்னர் மக்கள் ஓட ஆரம்பித்தவுடன் மக்கள் செல்ல வேண்டாம் எனவும் காளியம்மன்  கொத்தக் கிழவன் வடிவில் உருக் கொண்டு மக்களைக் காப்பாற்றியதாகவும் உருக்கமாகக் கூறினார்.அக்காலத்தில் போக்கு வரத்து எப்படி என்று கேட்ட போது தாங்கள் வில்லுக் கருத்தை என்ற மாட்டு வண்டியில் உடப்பிலிருந்து சிலாபம் மற்றும் முன்னேஸ்வரம் சென்று வரவதாகவும் குறிப்பிட்டார்.மாலை நேரம் புறப்பட்டால் மாட்டு வண்டி சாமம் விடிய நேரத்தில் முன்னேஸ்வரத்தை அண்மித்து விடும்.அதன் பின்னர் தாங்கள் முன்னேஸ்வரத்தில் திருவிழா பார்ப்பதற்காக தங்கி வருவதுண்டு.அப்போது மூன்று தேர்கள் சுவாமி ஊர்வலத்துக்காக இழுப்பதாகவும் குறிப்பிட்டார்.இது பிற்காலத்தில் உடப்பு மக்கள் முன்னேஸ்வர திருவிழா என்றால் விடுதி பிடித்து தங்கி வருவதாக மாறிவிட்டது என்றார்.தமது வாழ்நாளில் சோவி வீசுதல் பாண்டி விளையாடுதல் தட்டுப் பாய்தல் போன்ற வற்றைக் குறிப்பிட்டார்.அந்தக் காலத்தில் தலையில் இரண்டு மூன்று குடங்கள் வைத்த வண்ணம் பெண்கள் குடி நீர் அள்ளி வந்ததாகவும் கூறினார்.தண்ணீர் எடுப்பதற்காக ஆண்டிமுனையிலுள்ள ஊற்றடி என்ற பகுதியில் ஊற்றுத் தோண்டி தண்ணீர் எடுத்து வந்ததாகக் குறிப்பிட்டார்.தண்ணீர் அள்ளுவதற்காக நீண்ட அகப்பையை பயன்படுத்தியதாகவும் சொன்னார்.

தமது காலத்தில் கடல் மீன்கள் பெரியதை சாப்பிட்டதாகவும் சொன்னார்.கடலில் பாதை எனப்படும் உபகரணம் மூலமே மீன் பிடித்து வந்ததாகவும் சொன்னார்.முந்தல் பகுதி சிறுகடல் பக்கம் ஒல்லாந்தர் வெட்டு வாய்க்கால் தற்போதும் காணப்படுகின்றது.இதன் வழியாக  பாதை மூலம் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் கொண்டு வந்து தந்ததாகவும் மேலும் குறிப்பிட்டார்.தமது காலத்தில் கூடுதலாக தாம் நடந்தே பிரயாணம் செய்ததாகவும் சொன்னார்.ஆனால் தற்பொது அது முடியாது உள்ளதாக வேதனையுடன் சொன்னார்.

(பேட்டி கண்டவர்-க.மகாதேவன்-உடப்பூர் )


One thought on “உடப்பு தமிழ்க் கிராமத்தில் வாழும் முதியவர்

  1. தேங்க்ஸ் போர் தி அடிசில் போஸ்ட்.ரேஅல்லி தங்க யு! கிரேட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All