Puttalam Online
art-culture

சித்திரை (விளம்பி) புதுவருடப்பிறப்பு

  • 18 April 2018
  • 564 views

இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடப்படும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய சம்பிரதாயங்களை உள்வாங்கியதாக அமையப்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகள், அதேபோல சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இதில் பறைசாற்றப்படுகின்றதை யாவரும் அறியலாம். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7 மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.

சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேடராசிக்குள் பிரவேசிக்கும் காலம் கொண்டாடப்படுவதாகும். எமது தமிழ் வருடங்கள் அறுபது(60) உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர்(நாமம்)கொண்டு மழை காற்று பயிர்வளம் போன்ற இயற்கைக்கால பலாபலன்களை மாற்றி அமைப்பன.இவ்வருடங்களின் ஆரம்பம் (பிறந்தநாள் அதாவது பிரம்மா உலகப்படைப்பு ஆரம்பித்த நாள் என்பது புராண ஐதீகம்) இதையே புதுவருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றோம்.

இந்நாளில் எம்மவர்கள் தமது பாவங்கள் தோஷங்கள் நீங்க வேண்டி ஆலயங்களில் அர்ச்சகர் இல்லங்களில் மருந்துவகை, பூவகை, வாசணைத் திரவியம் போன்றவை போட்டுக் காய்ச்சிய மருத்து நீரை தலையிலே தேய்த்து ஸ்நானம் செய்து உலகின் கண்கண்ட தெய்வமாய் மிளிரும் சூரியபகவானுக்கு வீடுகளில் பொங்கலிட்டு புஜை செய்து புத்தாடை அணிந்து ஆபரணங்கள் அணிந்து ஆலய வழிபாடு செய்து குரு பெரியார் ஆசிகள் பெற்று அறுசுவை உணவு உண்டு மங்களகரமாய் நித்திரை செல்ல வேண்டும். இது எம்மவரின் பாரம்பரிய மரபாகும்.மங்களகரமான இந்நாட்களில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வது அந்த வருடம் முழுநாளும் எம்மவர் மனங்கள் மகிழ்வு பெறும் என்பதும் எம்மவரின் ஐதீகமாகும்.

நமது முன்னோர்கள் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர். ஒன்று சௌரமானம். சௌரம் என்றால் சூரியன். சூரியன் மேட ராசியிலிருந்து மீன ராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டது.சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப்பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும். இந்த வருடப்பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர்.மற்றது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும். ஒரு பூர்வ பக்கப் பிரதமை முதல் அடுத்து வரும் அமாவாசை வரையுள்ள 30திதிகள் கொண்ட காலப்பகுதி சாந்திர மாதம் ஆகும்.இவ்வாறு ஒரு வருடத்தில் 13 அமாவாசைகள் வருகின்றன. இந்தச் சாந்திரமானம் ஆந்திரப்பிரதேசங்களில் வாழும் தெலுங்கு மக்கள் கைக்கொண்டு வருகின்றனர்.

அடுத்து மலையாள தேசமாகிய கேரளாவில் மகாபலிச்சக்கரவர்த்தி பிறந்த தினமான ஆவணி மாதத்து திருவோண நட்சத்திரமே மலையாள புதுவருடப்பிறப்பாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றது.இது இற்றைக்கு 1175வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. இதனை கொல்லம் வருடமென அழைக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இரண்டு அயனங்களாகவும் ஆறுருக்களாகவும் பிரிக்கப்பட்டன. சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும்.இதை வசந்தகாலம் என அழைப்பர்.

இலங்கை வாழ் சைவ இந்து மக்களும் பௌத்த சிங்கள மக்களும் ஒருமித்துக் கொண்டாடும் தனிச்சிறப்புப் பெற்றது புதுவருடப்பிறப்பு. அதனால் இது ஒரு தேசிய தின விழாவாகும். பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல் பெரியோரை வணங்கி ஆசி பெறுதல் பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருதல் ஆச்சரியமானதே. புத்தரை வழிபட்டாலும் அவர்களும் பிள்ளையார் முருகன் பத்தினித்தெய்வம் என கடவுள் நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள். உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்து நீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.

தாழம்பூ, தாமரைப்பூஇ மாதுளம்பூஇ துளசிஇ வில்வம்இ வேம்புஇ அறுகுஇ பால்இ கோரோசனை, கோசலம, கோமயம, பச்சைக்கற்பூரம, குங்குமப்பூ, மஞ்சள, மிளகு,  திற்பலி, சுக்கு, விஷ்ணு கிராந்தி சீதேவியார் செங்கழுநீர் போன்ற மருத்துவக்குணம் கொண்டவற்றை சுத்த ஜலம் விட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய கஷாயமே மருத்து நீர் எனப்படும்.கோவில்களிலிருந்து மருத்து நீரைப் பெற்றுக் கொள்ளலாம். புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்று மருத்து நீர் வைத்து நீராடி புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.எமது கண்கண்ட தெய்வமாகவும் உலக இயக்க நாயகனாகவும் விளங்கும் சூரியனை அடுத்து வழிபடுதல் வேண்டும்.இல்லங்களில் சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கிப் படைத்து உண்பது வழக்கம். சிங்கள மக்கள் ‘கிரிபத்’என்று பால்ப் பொங்கல் பொங்குவார்கள். புது வருடம் பிறக்கின்ற நேரத்தில் கோவில்களில் சங்கிராந்தித்தீர்த்தம் இடம்பெறும்.பல கோவில்களில் அன்று தேர்த்திருவிழாவும் இடம்பெறும்.உதாரணமாக மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவில் யாழ் மக்கள் வெள்ளம் போல அலை மோதுவார்கள்.

இதே நேரம் பாடசாலைகள் வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களிலும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுண்டு. வழிபாடுகள் முடிவடைந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று புதுவருட பலகாரங்கள் உண்டு மகிழ்வர்.புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பொழுது பழைய கடன்கள் ஏதும் இருந்தால் அவற்றைத் தீர்த்துக்கொள்வர்.நல்ல சுப வேளையில் பெற்றோர் கணவர் மற்றும் கைராசியுள்ளவர்களிடம் ஏனையவர்கள் கைவிஷேடம் பெற்றுக் கொள்வது ஒரு நல்ல பண்பாகும்.

மேலும் சுப வேளையில் வியாபார ஸ்தலங்களில் பிள்ளையார் சுழிபோட்டு புதுக்கணக்கை தொடங்குவார்கள்.இதே நேரம் வங்கிகளிலும் புதுக்கணக்கை ஆரம்பிக்கும் போது பரிசுகளையும் வழங்குவார்கள். பிள்ளைகள் சுபவேளை பார்த்து பாடத்தைப் படிக்கத் தொடங்குவார்கள். மாதா பிதா குரு ஆகியவர்களை விழுந்து கும்பிட்டு ஆசிபெறுதல் மற்றொரு சிறந்த பண்பாகும். சித்திரைமாதம் சிறுமாரி என மழை பெய்யத் தொடங்கும். மலர்கள் பூத்துச் சொரியும்.பயிர்கள் செழிக்கும்.வசந்த ருதுவென சோழகக் காற்று வீசத்தொடங்கும்.வேப்பம்பூ சொரியும்.

இந்தியாவிலுள்ள தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வேப்பம் பூவுடன் சர்க்கரை சேர்த்து வேப்பம்பூப் பச்சடி செய்வார்கள்.இனிப்பும் கசப்பும் கலந்தது தான் மனித வாழ்க்கை என்பதை விளக்க வேப்பம்பூப் பச்சடி உணவில் அன்று கட்டாயம் சேர்ப்பார்கள்.தேசிய விளையாட்டுக்களில் போர்த்தேங்காய் அடித்தல் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு விளையாட்டாகும்.இன்றைய காலகட்டத்தில் இவ்விளையாட்டு அருகி விட்டது.தற்போது வழுக்குமரம் ஏறுதல்இ கிளித்தட்டுஇ தயிர்முட்டி அடித்தல், மாட்டுவண்டிச் சவாரி, மஞ்சுவிரட்டுதல், தலையனை அடித்தல், கயிறு இழுத்தல், போன்றவை தேசிய விளையாட்டுக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. சித்திரை வருடப்பிறப்பு அன்று மதுரை மீனாட்சியம்மன் ஆலய கோபுரக் கலசத்திற்கு நேராக சூரியன் வானில் தோன்றுவது அதிசயமானது.உழவர்கள் புதுவருடத்தன்று புதுவிதைப்புச் செய்வார்கள். (சாமஸ்ரீ-க.மகாதேவன்-உடப்பூர்)

(அன்று அதிகாலை 3.00மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை புண்ணிய காலமாகும்.இப்புண்ணிய காலத்தில் யாவரும் வைகறையில் துயிலெழுந்து மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றையிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானஞ்(குளித்து) செய்து நல்ல சிவப்பு நிறமுள்ள புதிய பட்டாடை ஆயினும் சிவப்பு கறுப்புக்கரையமைந்த புதிய பட்டாடையாயினும் தரித்து பவளம் நீலக்கல் இழைத்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தனம் குங்குமம் பூசி நறுமலர் சூடி குலதெய்வ வழிபாடு செய்து தான தருமங்கள் செய்து குரு பெற்றோர்களை வணங்கி ஆசிபெற்று வருவது பயன் தரும்.

கைவிஷேடம்(2018.04.14)சித்திரை01ந் திகதி சனி பகல் 12.15முதல் 2.10வரையும் இரவு 06.21 முதல் 08.13 வரையும் (2018.04.16)சித்திரை03ந் திகதி திங்கள் பகல் 12.30முதல்02.02வரையும் இரவு 06.13 முதல் 07.24 வரையும் மேற்கொள்ளலாம்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All