Puttalam Online
art-culture

”இரண்டும் ஒன்று” கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

  • 5 July 2018
  • 1,114 views

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

”இரண்டும் ஒன்று” என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஆவார். இவரது முதல் தொகுதியான இந்த நூல் சிறியதும் பெரியதுமான 84 கவிதைகளை உள்ளடக்கியதாக 113 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

குருணாகலை மாவட்டத்தின் பானகமுவவைச் சேர்ந்த அல்ஹாஜ் ஏ.சீ. செய்யது அஹமது (முன்னாள் அதிபர்) – மர்ஹுமா கே.ரீ. ரஹ்மா உம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா தற்போது பஸ்யால, எல்லலமுள்ள ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றுகின்றார்.

இலக்கிய ஆர்வம்மிக்க இவர் அண்மைக் காலமாக தேசிய பத்திரிகைகளில் தனது கவிதைகளை அதிகளவில் களப்படுத்தி வருகின்றார். கவிதா உலகிற்கு அண்மையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் இவர். ”இரண்டும் ஒன்று” என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எளிமையான மொழி நடையோடு, சமூக அக்கரை கொண்டு எழுதப்பட்ட பல கவிதைகளைக் காணலாம். கடுமையான சொற்களைப் பயன்படுத்தி வாசகர்களை மிரட்டாமல் எல்லோரும் வாசித்து இரசிக்கும் வகையில் இவரது கவிதை நூல் ராஜ நடைபோடுகிறது. நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை பின்னட்டைக் குறிப்பில் கலாபூஷணம், கவிஞர், இலக்கிய வித்தகர் பி.ரீ. அஸீஸ் அவர்கள் அழகிய மொழி நடையில் தந்துள்ளார்.

முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைமதி என். அகமது யாசீன் அவர்கள், ”இக்கவிதை நூலாசிரியர் ஓர் ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக கல்வித் துறையின் பல்வேறு படிகளிலும் பாதம் பதித்தவர். ஒவ்வொரு நிலையிலும், அடுத்தவருக்கு முன்மாதிரியாக தாம் மேற்கொண்ட பணியைச் சிறப்புற நிறைவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். எனது குழுவில் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுகையில் இவரது உத்வேகமும் உழைப்பும் கருத்துக்களைத் தயங்காது முன்வைக்கும் இயல்பும் எமது இலக்குகளை அடைந்து கொள்வதில் பெரிதும் உறுதுணையாய் அமைந்தன. ஆங்கிலம், தமிழ், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளிலும் இவர் கொண்டுள்ள புலமை பாராட்டுக்குரியது. எளிமையான சொல் வடிவங்கள் கொண்டு எவரும் இலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் இவர் படைக்கும் கவிதைகள் சராசரி மனிதர்களில் கூட சிந்தனைக் கிளறலை ஏற்படுத்தக் கூடியவை. பல்வேறு நாளேடுகளிலும் வெளியான இவரது கவிதைகளின் இத்தொகுப்பானது இவரது முதலாவது அச்சுருவிலான வெளியீடாகும். எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா என்ற ஒரு படைப்பாளியின் அறிமுக நூல் இதுவென்றாலும் இலக்கியப் பாதையில் தொடரும் பயணத்தின் ஓர் ஆரம்பப் பதிவேடாக இந்நூல் அமையுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

முதலாவது கவிதையான ”எல்லாமே கவிதை” (பக்கம் 15) என்ற கவிதையில் நூலாசிரியர் தான் எழுதும்  கவிதை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

கவிதை எங்ஙனம் எனக்கேட்க இங்ஙனம் எனப் பதில் எங்ஙனம் நான் கொடுக்க.. சிந்தனையின் உச்சம்.. தூர நோக்கு.. தென்றலின் மென்மை.. பார்வையின் விசாலம்.. மனிதாபிமான போக்கு.. மார்க்கப் பற்று.. உலகப் பற்றின்மை.. வேதனையின் குரல்.. இன்பத்தின் அவஸ்தை.. உள்ளக் குமுறல்.. தேடலின் ஊடல்.. ஊடலின் கூடல்.. வினாவின் விடை.. விடையில்லா வினா.. முடிவில் ஆரம்பம்.. ஆரம்பத்தில் முடிவு.. இனிதான வலி.. வலியில் சுகம்.. சுகத்தில் சுமை.. தேடிப் பெறுவது.. தேடாமல் கிடைப்பது.. சொற்கள் செயலாக.. எண்ணங்கள் எழுத்தாக.. எனக்கு நீயாக எல்லாமே கவிதை!

”பிரார்த்திக்கிறேன் ஏக நாயனை” (பக்கம் 19) என்ற கவிதை தன்னைப் பெற்று வளர்த்த தாயின் பாசத்துக்கு பரிசாக எழுதப்பட்டிருக்கின்றது. ஒரு குழந்தை முதன்முதலாக அழும்போது மட்டுமே ஒரு தாய் சிரிக்கின்றாள். அதன் பிறகு ஒரு குழந்தைகள் அழுவதை எந்தவொரு தாயாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. ஒரு தாயானவள் பல தியாகங்கள் செய்து குழந்தையை வளர்த்து சமூகத்தில் சிறந்த பிரஜையாக வாழ வழி காட்டுகின்றார். தாயின் ஒரு துளிப் பாலுக்கு ஒரு ஜென்மம் முழுவதும் கைமாறு செய்தாலும் ஈடாகாது.

முதன் முறையாக நான் அழ

சிரித்தவர் நீர் – என் தாயானதால்
மொழி தெரியாத எனக்கு
மொழியறிவும் கற்றுக் கொடுத்து
மொழியில்லா என் மழலையில்
மொழியும் நீர் அறிந்து
முறையாய் பேணுதலாய்
எனைத் தவமாய் பெற்றீரே
வழி தெரியாத என்னை
நேர் வழிப்படுத்தியவர்
சுமைகள் பலவும் தாங்கினீரே
என்னைப் பெற்றிடத்தான்
தியாகங்கள் பலநூறு செய்தீரே

”என் வாழ்வின் அச்சாணி” (பக்கம் 22) என்ற தலைப்பில் தனது தந்தைக்காகவும் ஒரு கவிதையை வடித்திருக்கிறார். ஒரு தாய் பத்து மாதம் தன் பிள்ளையை வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தையோ பெரியவனா(ளா)கும் வரை தோளிலும் மார்பிலும் சுமக்கின்றார். ஒரு வரலாறு கற்றுத் தராத பாடத்தை தந்தையின் வாழ்க்கை முறை கற்றுத் தந்துவிடுகின்றது.

முதலும் முதன்மையுமான
மதிப்பிற்குரிய என் குருவே
மாந்தருக்கு கல்வி கற்கச்
சொல்லிக் கொடுத்த – என்
கலங்கரை விளக்கே என்
அன்புத் தந்தையே
உம் பாதத்தின் மேல் ஏற்றி
குறு குறு வென்று தத்தித் தத்தி
நடக்கவும் கற்றுத் தந்தீர்
நானும் வளர்ந்திடவே
விரல் பிடித்துப் பின்னர்
சுயமாய் நடக்கவும்
சொல்லிக் கொடுத்தீர்

”வாசிப்பை நேசி” (பக்கம் 31) என்ற கவிதை புத்தக நண்பர்களை கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உண்மையைத் தெளிவாக எடுத்தியம்புகின்றது. புத்தகத்தை நேசிப்பவன் மக்களால் நேசிக்கப்படுவான். தலை குனிந்து வாசிக்கப்படும் புத்தகம் கண்டிப்பாக இன்னொருநாள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழிகாட்டும். வாசிப்பின் மூலம் பெறப்படும் அனுபவங்கள் அலாதியானவை. வாசிப்பை நேசிக்க வேண்டும் என்று நூலாசிரியர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

கண்ணிருந்தும் குருடர்
கற்காதார்
கல்விக் கண் திறக்க
பழைய பண்பாடு வளர்க்க
புதிய பண்பாடு சிறக்க
வாசி யோசி
வாசிப்பை நேசி
வாசிப்பு
தனிமையை
பகைமையை
வென்றிடும் கேடயம்
வாசிப்பு
தம்மைத் தாம் – ஏன்
பிறரையும் தான்
புரிய வைக்கும் மகுடம்

”தற்காப்புக் கேடயம்” (பக்கம் 40) என்ற கவிதையில் குடை பற்றி எழுதப்பட்டுள்ளது. வெய்யில், மழை, பனி ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமன்றி, சில பொழுதுகளில் நம்மை தற்காத்துக்கொள்ளும் கேடயமாகவும் குடை மாறி விடுவதுண்டு. அடை மழை நேரத்தில் ஒதுங்கி இருந்தபடி, குடைக் கம்பிகளை எண்ணிக்கொண்டு சிறைப்பட்டிருந்த அனுபவம் பெரும்பாலும் நம்மெல்லோருக்கும் வாய்த்திருக்கும். அந்த நினைவுகளை மீட்டித் தருவதாக கீழுள்ள கவிதை வரிகள் அமைந்திருக்கின்றன.

வெய்யிலில் மழையில்.. எமைக் காக்கும் குடை.. எட்டுக் கால் சிலந்தி போல்.. எட்டுக் கம்பிக் குடை.. வண்ண வண்ணக் குடை.. கண்ணைக் கவரும் குடை.. அவை பற்பல நிறங்களில்.. அவை பற்பல அளவுகளில்.. காற்று வேண்டி.. கடற்கரையோரமும்.. பூப்பூவாய் பூத்திருக்கும்.. குடைகளும் நகர்ந்திடும்.. குடைகளும் கொடையாய்.. மெல்லிடையால் காக்க.. குடையும் ஓர் ஆயுதமாய்.. தற்காப்புக் கேடயமாய்!

”இரண்டு பக்கங்கள்” (பக்கம் 48) என்ற கவிதையானது நாணயத்தை மையமாக வைத்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகின்றது. விளையாட்டில் நாணயம் சுண்டிப் பார்த்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது. அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் எல்லா விடயங்களும் நல்லது –  கெட்டது, அறிவு – அறிவீனம், இருப்பு – இல்லாமை போன்றவற்றில் தங்கியிருக்கின்றது. ஆனால் சுண்டிப் பார்த்து அவற்றை விளங்கிக் கொள்வதற்கு இது விளையாட்டல்ல வாழ்க்கை என்று இங்கு ஆணித்தரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. வாழ வேண்டிய வாழ்க்கையை சந்தோசமாகவும் இனிமையாகவும் கழிக்க வேண்டும்.

ஒரே நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்
பூ தலை
இளமை முதுமை
இம்மை மறுமை
உண்மை பொய்
ஏற்றம் இறக்கம்
பிறப்பு இறப்பு
வாழ்வு தாழ்வு
மேடு பள்ளம்
குறை நிறை
யதார்த்த உலகின்
நிஜங்கள் இவை
சுண்டிவிட்டு
தெரிந்து எடுக்க
இது விளையாட்டல்ல
இது வாழ்க்கை!

யதார்த்த விடயங்களை அழகிய கவிதையாக வடிவமைக்கும் திறன் கவிஞருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது. இவரது கவிதா ஆற்றல் மென்மேலும் சிறப்புற்று மேலும் பல படைப்புக்களைத் தர வேண்டுமென வாழ்த்துகின்றேன்!!!

நூல் – இரண்டும் ஒன்று

நூலின் வகை – கவிதை 
நூலாசிரியர் – எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா
வெளியீடு – பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை – 300 ரூபாய்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All