Puttalam Online
current

உப்பு உற்பத்தியாளர் போராட்டம் – புத்தளம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்க அரசு திட்டம்…?

  • 31 July 2018
  • 1,929 views

புத்தளம் முஸ்லிம்களின் 300 வருட பழமைவாய்ந்த பூர்வீகத் தொழிலான உப்பு உற்பத்தியினை நசுக்குவதற்கு அரசு முயற்சிப்பதாக தெரிவித்து இன்று காலை 9.00 மணிக்கு புத்தளம் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றி இடம்பெற்றது.

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச் சங்கத்திற்கு முன் ஆரம்பமான இப்பேரணியில் நூற்றுக் கணக்கான உப்பு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டதுடன் புத்தளம் நகரினூடாகச் சென்று புத்தளம் மாவட்டச் செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

புகைப்படங்கள்: சமூக ஊடகங்களில் பெறப்பட்டது.

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச் சங்கத்தினால் உப்பு உற்பத்தியாளர் சார்பாக பமாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்ட  மகஜர் பின்வருமாறு;

இலங்கையின் உப்பு தேவையில் 1/3 பங்கினை நிவர்த்தி செய்யும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் 9௦௦ வருடங்களுக்கும் மேலான வரலாற்றினை கொண்டவர்கள்.  அதிலும் குறிப்பாக மன்னார் வீதியில் அமைந்திருக்கும் உப்பு வாய்க்கால்கள் தனியார் நிலங்களாகவும் அதில் உற்பத்தியில் ஈடுப்பட்ட உற்பத்தியாளர்கள் தனியார்களாகவும் பல தசாப்தங்களாக இனங்காணப்பட்டு வருகின்றனர்.  இதன் உரிமையாளர்கள் தம் காணிக்குரிய  1௦௦ வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த காணி உறுதிகளை ஆவணமாக கொண்டுள்ளனர்.

195௦ தொடக்கம் தமக்கென ஒரு சங்கத்தை அமைத்து அதனூடாக தமது நலனை முன்னெடுத்து செல்கின்றனர். அக்காலப் பிரிவில் , தமது உற்பத்தியை அரச நிறுவனங்கள் ஊடாகவே சந்தைப்படுத்தி வந்தனர்.  197௦ களில் உப்பு கூட்டுத்தாபனத்தின் கீழ் இவர்கள் தனியார் உற்பத்தியாளர்களாக பதியப்பட்டு விளைவிக்கப்பட்ட உப்பு அனைத்தும் இக்கூட்டுத்தாபனத்தினூடாகவே கொள்வனவு செய்யப்பட்டன.  பின்னர் உப்பு கொள்வனவு தனியார்ப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உற்பத்தியாளர்கள் தமது சங்கத்தினை முறையாக பதிந்து அதனூடாக தமது சேவைகளை பெற்றுக்கொண்டனர்.

தற்போது 39௦ அங்கத்தவர்களைக் கொண்ட இச்சங்கமானது உப்பு உற்பத்திக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அதன் அங்கத்தவர்களுக்கு வழங்கி வருகின்றது.  இதில் சுமார் 9௦ அங்கத்தவர்கள் தமது காணி அரச காணி என்பதால் கடந்த 3௦ வருடங்களுக்கும் மேலாக புத்தளம் பிரதேச செயலகத்தில் ஆண்டு அனுமதி பத்திரம் பெற்றவர்களாக உள்ளனர்.

சுமார் 3௦௦ வருடங்களுக்கு மேலாக உப்பு நீரை சேமித்து வைக்க இவர்கள் பயன்படுத்தி வந்த நீர்த்தேக்கங்களுக்கு 2௦௦4 ஆம் ஆண்டு தொடக்கம் புத்தளம் பிரதேச செயலகம் பெரும் தொகையான பணத்தை ஆண்டுதோறும் குத்தகையாக பெற்று வந்தது.

இது ஒரு புறம் இருக்க, அண்மை காலத்தில் நமது அங்கத்தவர்களது வாய்க்கால்கள் அனைத்தும் முடிக்குரிய காணிகள் என்றும் அவை முறையாக அளக்கப்பட்டு அங்கத்தவர்களுக்கு ஆண்டு காணி அனுமதிப் பத்திரமாகவோ (Annual Permit) அல்லது 3௦ வருட நீண்ட கால குத்தகையாகவோ மீளளிக்கப்படலாம் என நாம் வடமேல் மாகாண காணி ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டோம்.

தமது காணி தமக்குரியது என்பதையும் தம்மிடம் தகுதியான மூல ஆவணங்கள் உண்டென்பதையும் உணர்ந்த எமது அங்கத்தவர்கள் தமது உரிமை தொடர்பாக பல விளக்கங்களை காணி ஆணையாளரிடம் கோரி இருந்தனர்.

இதன் பின்னணியில் 1967 தொடக்கம் 1973 வரையில் வெளியான வர்த்தமானி பிரசுரமும் அதில் எமது அங்கத்தவர்கள் காணிகள் அரச உடைமையாக்கப்பட்டு இருக்கும் விடயமும் எமக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தன.  அது வரை காலமும் நாமோ அன்றி எமது அங்கத்தவர்களோ இந்த வர்த்தமாணி அறிவித்தல் தொடர்பாக எந்த தகவல்களும் தெரியாது இருந்தோம்.  ஆனால், நம் அங்கத்தவர்கள் அனைவரும் அக்காலப்பிரிவில் இக்காணிகளில் உப்பு உற்பத்தியை மேற்கொண்டு அதனை அரச நிறுவனமான இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

இதில் விசேடம் என்னவென்றால் பிச்சை தம்பி மரிக்கார் செய்னம்பு நாச்சியா என்ற பெண்மணியின் சுமார் 6 ஏக்கர் 2 ரூட் 27 பேர்ச் விஸ்தீரணமான நிலம் மாத்திரம் தனியார் காணியாக தீர்வு செய்யப்பட்டு இருந்தது.  மேற்படி பிச்சை தம்பி மரிக்கார் செய்னம்பு நாச்சியா அவர்கள் என்ன வகையான மூல ஆவணங்களை கொண்டு இருந்தாரோ அதேவகையான ஆவணங்களே ஏனைய அங்கத்தவர்களிடமும் இருந்தது என்பதை நாம் இங்கு குறிப்பிடல் அவசியம்.

இத்தகைய சூழலில் அந்தரித்து நின்ற எமது அங்கத்தவர்கள் தமது காணி உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளவும் தம் உரிமையை நிலை நாட்டிக்கொள்ளவும் கால அவகாசம் வழங்கும்படி காணி ஆணையாளரை பலமுறை வேண்டியுள்ளனர்.

இருந்தும் இம்மாதம் 3௦ மற்றும் 31 ஆம் திகதிகளில் எமது அங்கத்தவர்கள் காணி அளக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.  இதன் வெளிப்பாடாக நேற்று எமது காணிகளில் அரச நிலம் என்று உள்நுழைந்த காணி ஆணையாளரின் ஊழியர்கள் எமது காணிகளை அளக்க தொடங்கினர்.

இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான எமது அங்கத்தவர்கள் சார்பாக, இம் மாவட்டத்தின் செயலாளரான தங்களிடம் பின்வரும் கோரிக்கைகளை நாம் முன் வைக்கின்றோம்.

  1. உடனடியாக எமது காணிகளை அளக்கும் நடவடிக்கைகளை எமது காணி ஆணையாளர் இடைநிறுத்தல் வேண்டும்.
  2. பிச்சை தம்பி மரிக்கார் செய்னம்பு நாச்சியா அவர்களது காணி என்ன வகையில் தீர்வு பெற்றதோ அதேவகையில் எமது காணிகளும் தீர்வு பெற எமக்கொரு சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.
  3. சுமார் 3௦ வருடங்களுக்கு மேலாக ஆண்டு அனுமதி பத்திரம் பெற்று வரும் எமது அங்கத்தவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு சிறந்ததொரு மாற்று தீர்வு வழங்கப்படல் வேண்டும்.

இம்மாவட்டத்தின் செயலாளரான தாங்கள் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தி எமக்கு சிறந்ததொரு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று நம்புகின்றோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All