Puttalam Online
social

ஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…??

  • 14 August 2018
  • 295 views

Prof. M.S.M. ANES

முஸ்லிம் தனியார் சட்டம், அல்லது முஸ்லிம் குடும்பச் சட்டம் இலங்கையில் மட்டுமல்ல அறபு நாடுகளிலும் ஏனைய பல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக மாற்றமடைந்து வந்துள்ளது.

காம்பியா, மியுரிட்டேனியா, மாலி போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகள் குறிப்பாக ஆபிரிக்க நாடுகள் இம் மாற்றங்களை ஏற்காமல் இன்றுவரை பழைமையான செந்நெறி மரபுசார் சமய சட்டங்களை நடை முறைப்படுத்தி வருகின்றன இந்நாடுகள் பலதார மணத்தை ஏற்றிருக்கும் நாடுகள்.

திருமணம், விவாக விலக்கு, பலதாரமணம் என்பனவற்றை அந்நாடுகள் தனிப்பட்ட விடயங்களாக, மக்கள் விருப்பத்திற்கு விட்டிருக்கின்றன.

அதாவது அரசாங்கத்தின் பொதுச் சட்டமுறைமைக்குள் அவை கொண்டு வரப்படவில்லை. ஆனால், டியூனிசியாவிலும், மொறோக்கோவிலும், துருக்கியிலும், எகிப்திலும், இன்று ஓரளவு சவூதியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சவூதி தவிர மேற் சொல்லப்பட்ட நாடுகளில் உச்சபட்சமான பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

உலமாக்களின் ஆதரவோடு டியூனிசியாவிலும், துருக்கியிலும் நவீன சட்டங்களுக்கும், தேவைகளுக்கும், பெண் உரிமைச் சிந்தனைகளுக்கும் ஏற்ற வகையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இம்மாற்றங்கள் சில நாடுகளில் ஷரிஆவின் வரையறையோடும், சில நாடுகளில் ஷரீயாவிற்கு முரண்பாடற்ற வகையில் பொது நியாயங்களுக்கும், உரிமைகளுக்கும் முக்கியமளித்து மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

அதனால் இலங்கையில் இப்போது, பரபரப்பாகப் பேசப்படும் மாற்றம் பற்றிய முரண்பட்ட கருத்துக்கள் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
இலங்கை மியுரிட்டேனியாவோ, காம்பியாவோ அல்ல. தென்னாசிய நாடுகளில் படிப்பறிவிலும், சமூக அரசியல் முன்னேற்றங்களிலும் குறித்தளவு வளர்ச்சி பெற்ற நாடு. முஸ்லிம் கல்வி வளர்ச்சியும் 1880 களில் இருந்து ஆரம்பமாகின்றது. பெண்கல்வி வளர்ச்சியும் உச்ச நிலையில் உள்ளது.

சில மதரஸாக்கள், நளீமியா நிறுவனம் போன்றவற்றிலிருந்தும் முன்னேற்றமான கருத்துக்களைக் காண முடிகின்றது.

இந் நிலையில், இன்று நடைபெறும் வாக்குவாதங்களும் தர்க்கங்களும் எந்தளவு சரியானவை..? இஸ்லாமிய குடும்ப அமைப்பை ஷரியாவுக்கு முரணற்று அதை சட்ட பூர்வமாகப் பாதுகாப்பதும், பெண்கள் சார்பில் இதுவரை நடந்து வந்த அலட்சியங்களையும், கெடுபிடிகளையும் தவிர்த்து சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…??


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All