Puttalam Online
regional-news

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 25 August 2018
  • 381 views

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

பேராசிரியர் கலாநிதி ஹஸ்புல்லாஹ் யாழ் பல்கலைக் கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த வேளை இன்று காலை வபாஃத் ஆகியுள்ளார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது குறை குற்றங்களை மன்னித்து நற்கருமங்களை மற்றும் கல்வி ,உயர்கல்வி, சமூக, தேசிய பணிகளை அங்கீகரித்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!

பேராசிரியர் கலாநிதி ஹஸ்புல்லாஹ் கல்வித் தகைமைகளால் பெருமை பெற்றவர் என்பதனை விட அத்தகைய உயர் தகைமைகளுக்கு பெருமை சேர்த்தவர் மாத்திரமல்லாது கல்வி உயர் கல்வி சமூகத்தினருக்கு சமுதாய மற்றும் தேசியப் பணிகளில் போற்றத் தக்க முன்மாதிரியுமாவார்.

தேசிய ஷுரா சபையின் பொதுச்சபை உறுப்பினராக ஆக்கபூர்வமான பல பங்களிப்புகளை ஆற்றிய அவர் சமூகத்தின் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளோடு மிகவும் நெருக்கமாக அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்பட்டவராவார்.

அண்மைக்காலமாக வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றம், வாக்காளர் பதிவு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள், வில்பத்து சரணாலயத்திற்கான நில ஆக்கிரமிப்பு, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பான பல ஆய்வுகளை அவர் செய்திருந்தோடு எமக்கு அவைகுறித்த விளக்கங்களை மாத்திரமன்றி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவூட்டிக் கொண்டிருந்தார்.

புதிய உள்ளூராட்சி சட்டமூலம், புதிய மாகாண சபை தேர்தல் சட்டம், மாகாண சபைத் தொகுதி எல்லை நிர்ணயம் என்பவற்றில் முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவத்தில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட இருப்பதனை சமூகத் தலைமைகளுக்கு அறிவுறுத்தியவர்.

மாகாணசபைத் தொகுதி எல்லைகள் நிர்ணயம் தொடர்பாக அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகம் சார்பாக நியமிக்கப்பட்ட அவர் அந்தக் குழுவின் அறிக்கை முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமானது என்பதனை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துமிருந்தார்.

நேற்று கூடிய பாராளுமன்ற அமர்வில் மேற்படி அறிக்கை மீளாய்வு செய்யப்படல் வேண்டுமென சபையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டதன் பின்னர் தான் இன்று காலை அவர் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மீண்டிருக்கின்றார்.

தனிப்பட்ட முறையில் மிகவும் அன்பாக தம்பி என்றும் ஷெய்க் என்றும் அழைத்து நீண்ட நேரமாக அவ்வப்பொழுது மேற்படி இன்னோரன்ன விடயங்கள் குறித்து என்னுடன் உரையாடும் வழமையைக் கொண்டிருந்தார்.

வேறு எந்தவொரு அறிவு ஆளுமையும் பெற முடியாத இடத்தை எனது ஆழ்மனது அந்த மகானுக்கு வழங்கியிருந்தது, அவரது மறவை தனிப்பட்டமுறையில் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கழாவையும் கத்ரையும் பொறுந்திக் கொள்கிறோம்.

அவரது ஆய்வுப் பணிகள் ஆவணங்களாக பாதுகாக்கப் படல் வேண்டும் என்பதில் என்னைப்போல் சமூகத்தின் பல்வேறு தரப்புக்களும் நிச்சயமாக கரிசனை கொண்டிருப்பர், அவரது வபாஃத்திற்குப் பின்னரும் அவரது பணியினால் இந்த தேசமும் சமூகமும் நன்மையடைவர் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை இன்ஷா அல்லாஹ்.

அவரது பிரிவால் வாடும் அன்பின் மனைவி மக்கள் உடன்பிறப்புக்கள் உறவினர் அனைருக்கும் அல்லாஹ் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் மன அமைதியையும் வழங்குவானாக!

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All