Puttalam Online
regional-news

எப்போதும் மக்களுக்கு நெருக்கமாக இருந்த எங்கள் பேராசிரியர்!

  • 25 August 2018
  • 301 views

Siraj Mashoor

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் திடீர் மரணம் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. பல பொழுதுகள் அவரோடு ஒன்றாக இருந்து இயங்கிய, பேசிய, விவாதித்த, பயணம் செய்த தருணங்கள் நினைவின் ஆழத்திலிருந்து மேலெழுகின்றன.

எப்போதும் மக்களுக்கு நேருக்கமான பேராசிரியராகவே இருந்தவர் அவர். அதுவே அவரது சமூக ஈடுபாட்டின் முதன்மையான அடையாளமாக இருந்தது.

மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த அவர், வடக்கு முஸ்லிம்களது பிரச்சினையை விரிந்த சர்வதேசப் பரப்பிற்கு சென்று சேர்த்தவர். அது தொடர்பாக பல ஆய்வுகள், கள விஜயங்கள் செய்தவர். உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் குரலெழுப்பியவர். வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பை (NMRO) சக செயற்பாட்டாளர்களோடு சேர்ந்து உருவாக்கியவர்.

சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் சார்பில் பங்கெடுத்தவர். கிழக்கு முஸ்லிம்களது காணிப் பிரச்சினைகள் பற்றி நேரடியாகக் களத்துக்குச் சென்று ஆய்ந்தறிந்தவர். எந்தவொரு சமூகப் பிரச்சினையிலும் சீரியஸாக தன்னை ஈடுபடுத்துபவர். Kandy Forum அமைப்பிலும் ஆர்வத்தோடு இயங்கினார்.

இது போன்று அவருக்கு பல பரிமாணங்கள் உள்ளன. அதனால்தான் மனதுக்கு நெருக்கமான நமது பேராசிரியர் என்று உரிமை கொண்டாட முடிகிறது. பல தடவைகள் இப்படிச் செய்யுங்கள், அப்படிச் செய்யுங்கள் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். எல்லா விடயங்களிலும் உடன்பட முடியாவிட்டாலும், அவரது ஆலோசனைகள் பெறுமதி மிக்கவை.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது அக்கரைப்பற்றுக்கு வந்திருந்தார். அவர் ஊருக்கு வந்தால் வழக்கமாகத் தங்கும் அவரது மாணவரின் வீட்டிலிருந்து என்னை அழைத்து தனது feedbackஐ, அபிப்பிராயங்களைக் கலந்துரையாடினார். குறைகளை சுட்டிக் காட்டினார். முன்மாதிரியான அரசியலைச் செய்யுமாறு சொல்லி வாழ்த்தினோர். ஊரோடு சுருங்கி விடக் கூடாது என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் ராஜனி திரணகமவின் நினைவு நிகழ்வு நடந்த அன்று நானும் அவரும் பஸ்ஸிலே அருகருகே இருந்து பல விடயங்களை மனம் திறந்து பேசினோம். அந்தப் பயணத்தை மறக்க முடியாது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது அவர் பேராதனையிலிருந்து அடிக்கடி அங்கு வருவார். பல பொதுப் பிரச்சினைகளில் ஒன்றாகச் செயற்பட்டதன் காரணமாக, நாங்கள் மாணவர் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவரும் தூண்டுதல் என்று வேண்டுமென்றே பொய்க் குற்றம் சுமத்தினார்கள். இதற்கு சிரேஷ்ட விரிவுரையாளர் நஸீர் அஹமட் சேர் சிறந்த சாட்சி.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வந்திருக்க வேண்டியவர். அதற்கு அவர் விண்ணப்பித்தபோதும், பல்கலைக்கழகத்தின் உள் அரசியல் அவரைப் பழிவாங்கியது. அது ஒரு வகையில் பேரிழப்புதான்.

கடைசியாக, மாகாண தொகுதி எல்லை நிர்ணயத்தில் அவர் மிகுந்த அறிவு நேர்மையுடன் செயன்பட்டார். அதற்காக எல்லை நிர்ணயக் குழுவின் ஏனைய அங்கத்தவர்களோடு முரண்பட்டார். அதைச் சீர்செய்யும் வகையிலான பல Lobbying முயற்சிகளில் ஈடுபட்டார். நேற்று பாராளுமன்றத்தில் அந்த வாக்களிப்பு அவருக்கு திருப்தியை அளித்திருக்கிறது.

பொதுவாக நாடளாவிய ரீதியிலும், குறிப்பாக அம்பாரை மாவட்ட தொகுதி நிர்ணயம் தொடர்பிலும் பல விடயங்களை அவரோடு கலதுரையாடக் கிடைத்தது.

அவர் பற்றி எவ்வளவோ எழுதலாம். எதை எழுதுவது, எதை விடுவது என்று தெரியவில்லை. பல்கலைக்கழக சமூத்துள் தனித்துத் துலங்கிய அரிதான அறிவாளுமைகளுள் அவரும் ஒருவர். Organic Intellectual ஆக இயங்கியவர்.

அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக. அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.

(அவரது ஜனாஸாவில் கலந்து கொள்ள மன்னார் சென்று கொண்டிருக்கையில் எழுதிய அவசரக் குறிப்புகள் இவை.)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All