Puttalam Online
regional-news

புத்தளம் பெரிய பள்ளியின் புதிய பள்ளி கட்டப்பட்டு 80 வருட பூர்த்தி

  • 28 August 2018
  • 241 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ  பெரிய பள்ளியின் 80 ஆண்டு அகவையை நினைவுபடுத்தும் முகமாக பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுக்க பெரிய பள்ளி நிர்வாகம் தீர்மாணித்துள்ளது. செப்டம்பர் 21ஆம் திகதியுடன் நிகழ்வுகள் யாவும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

600 வருடங்களுக்கும் மேல் பழைமை வாய்ந்த புத்தளம் மண்ணின் அடையாளம், புத்தளம் முஹையத்தீன் ஜும்மா மஸ்ஜித் பெரிய பள்ளி தற்போதைய இடத்தில் (புதிய பள்ளி) கட்டப்பட்டு திறக்கப்பட்டு இவ் வருடத்துடன் 80 வருடங்களை கடக்கின்றது.

1400 களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மீரா உம்மா என்னும் சீமாட்டியால் சுமார் 25 ஏக்கர் நிலம் பள்ளிக்காக வக்பு செய்யப்பட்டு இன்றைய கொத்துபா பள்ளி மைதானத்தில் “மீரா மக்காம் பள்ளி” என்ற பெயருடன் அன்று ஜும்மா கொத்துபா பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்பு 1937 இல் இன்றைய பெரிய பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்த முகைதீன் தர்கா அகற்றப்பட்டு  ஊரின் அக்கால தனவந்தர்களின்  பணத்தில் அழகிய  பள்ளியாக புத்தளம் பெரிய பள்ளி கட்டப்பட்டது. சுமார் ஒரு வருட கால கட்டுமாண  பணிகளை  தொடர்ந்து 1938.09.21 அன்று புதிய பள்ளி ஊர் தலைவர்களால்  திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் புத்தளம் நகருக்கு வருகை தந்ததோடு வருகை தந்த அனைவருக்கும் விருந்தும் வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

புத்தளம் நகரின் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ள பெரிய பள்ளி தன்னகத்தே பல்வேறுபட்ட வரலாற்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 1700 களில் கண்டி மன்னனின் புத்தளம் வருகையும் புத்தளம் மக்களுக்காக பெரிய  பள்ளிக்கு வழங்கிய  அன்பளிப்புகளும் அவ்வாறான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். காலம் செல்ல செல்ல இவ்  வரலாறுகளை அறிந்த  பெரியவர்கள் மூத்தவர்களின் மறைவுகளோடு வரலாறும் அழிந்து செல்கின்றது. ஆகவே பெரிய பள்ளி மற்றும் புத்தளம் நகரின் வரலாற்றை அடுத்த சந்ததிக்கும் கற்றுக்கொடுக்கவேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்பது மறுக்கமுடியாது. அந்த கடமையை நிறைவேற்றும் ஒரு சந்தர்ப்பமாக இந்த 80 ம்  ஆண்டு நிறைவை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் முழு புத்தளம் முஸ்லிம் சமூகத்திற்குமே ஒரு தலைமைத்துவ மையமாக புத்தளம் பெரிய பள்ளி செயற்பட்டு வந்திருக்கின்றது. புத்தளம் மக்களின் இரத்தத்தில் ஒன்றரக் கலந்து ஊரிப்போயுள்ள “பெரிய பள்ளி” என்ற அந்த உணர்வே அன்றிலிருந்து இன்றுவரை பரம்பரை பரம்பரையாக புத்தளம் நகர மக்களின் ஊர் மற்றும் சமூக தலைமையாக பெரிய பள்ளி திகழ்கின்றது.

பெரிய பள்ளி சம்பந்தமான பழைய ஆவணங்கள் , புகைப்படங்கள், சம்பவங்கள் பற்றிய எழுத்துருக்கள்,  வரலாறுகள் மற்றும் பழைய மரபுகள் பொதுமக்களிடம் காணப்படின் அவைகளை தந்துதவுமாறும் பள்ளி நிர்வாகம் பொதுமக்களை  வேண்டிக்கொள்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All