Puttalam Online
current

ஹாஜா சஹாப்தீன் என்னும் சகாப்தம் இவ்வுலகில் முற்று பெற்றது… அவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது ஏராளம்..!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..!!!

புத்தளத்தின் கல்வி, கலை, சமூக, சமய, கலாசார மற்றும் விளையாட்டு என அனைத்து துறைகளிலும் இறுதி மூச்சு வரை சமூகத் தொண்டாற்றிய சஹாப்தீன் ஆசிரியர் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (2018.09.13) அதிகாலை  காலமாணார்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை 4.30 மணிக்கு வெட்டுக் குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

———————————

சஹாப்தீன் ஆசிரியர் மரணிப்பதற்கு சற்று முன்னர் முஹுசி  ஆசிரியரினால் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் பதியப்பட்ட கருத்து இது,

“பூரண சுகத்துக்காக பிரார்த்திப்போம்.!

புத்தளம் சமூகத் தளத்தில் ஹாஜா சஹாப்தீன் ஆளுமைக்கு தனியான இடம் உள்ளது.

மதிப்புக்குரிய ஆசான் என்பதற்கு அப்பால் சிறந்த ஓவியர், புகைப்படக் கலைஞர், கவிஞர், அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளர், விமர்சகர், பேச்சாளர், சமூக சேவையாளர், அரசியலும் அவரை விட்டு வைக்கவில்லை, தஃவா பணியில் குறிப்பாக சிங்கள மொழியில் சிங்கள அரச அலுவலர்களுக்கு சமகால பேசுபொருளாக இருக்கும் முஸ்லிம் விவகாரங்கள் குறித்து தெளிவூட்ட அவர் எடுத்த பிரயத்தனங்கள் என பல்வேறு பரிமாணங்களை அவர் தனது வாழ்க்கையில் சுமந்து கொண்டவர். அதுவே அவரின் வாழ்க்கை வரலாறுமாகும்.

சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்ற அவர் தமிழ் மொழியை சிங்கள அரச அலுவலர்களுக்கு கற்பிக்க புத்தளத்தில் ஏறி இறங்காத அரச நிறுவனங்கள் இருக்காது எனலாம். அது போல சிங்கள மொழியை நம்மவர்கள் கற்றுக் கொள்ள அக்கறையுடன் அவரை நாடுவது வழக்கம். அதற்கு அப்பால் அவரிடம் சகல மட்டத்தைச் சேர்ந்த நம்மவர்கள் சிங்கள மொழியில் கடிதங்களை தயாரிக்க காண்பிக்கும் அதீத ஆர்வம் சிலாகித்துக் கூறக் கூடியதாகும்.

இவ்வாறு பன்முக ஆளுமை மிக்க ஆசானை (70) இன்றிரவு (12.9.2018) 9.00 மணிக்கு புத்தளம் வைத்தியசாலைக்கு சென்று பார்த்த போது இதயத்தால் அழுதே விட்டேன். மருத்துவ உபகரணங்கள், வயர்கள் உடம்பு எங்கும் பொருத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார். அவரால் என்னை அடையாளம் கண்டு கொள்ளவும் முடியாது. பேசவும் முடியாது. அவர் அருகில் அமர்ந்து அனைத்துக்கும் சக்தி படைத்த அல்லாஹ்விடம் உளமுறுகி பிரார்த்தித்தேன்.

சமூக ஆர்வலர் ஹாஜா சஹாப்தீன் ஆசானுக்கும் எமக்கும் இடையிலான நட்பும் தொடர்பாடலும் சமூகத் தளத்தில் என்றுமே மறக்க முடியாததாகும். ஊர் மற்றும் மக்கள் தேவைகளுக்காக அவரை நாடும் போது நோயையும் பொருட்படுத்தாது எத்தனை கடிதங்களை எத்தகைய கொடுப்பனவும் பெறாது தயாரித்து தருபவராக இருந்தார்.

இக்கட்டான நிலையில் உள்ள சகோதரிகளுக்கு அவர் உதவ எடுத்துக் கொண்ட பிரயத்தனங்களை கண்ணுற்றுள்ளேன். சிலபோது அவருடன் இணைந்தும் பணியாற்றியும் உள்ளோம். சிங்கள மொழியில் தஃவா தொடர்பில் அவர் எடுத்த முனைப்புக்களில் பங்கெடுக்க அல்லாஹ் எமக்கும் சந்தர்ப்பம் வழங்கினான்.

இன்று(12.9.2018) மஹரகமைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் புத்தளம் வைத்தியசாலைக்கே மீண்டும் அவர் அனுப்பப்பட்டுள்ளமை எமது உள்ளத்தில் வலியையும், கணதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சாலிஹான முஸ்லிமை பார்க்கச் சென்று பல்வேறு எண்ண அலைகள் உள்ளத்தில் முட்டி மோத வைத்திய சாலையை விட்டு வெளியேறினேன்.

“ஹாஜா சஹாப்தீன் எனும் ஆளுமையிடமிருந்து நாம் கற்றுக் கொண்டதும் எமக்கு கற்றுக் கொள்ளவும் ஏராளம் உள்ளன.

பயணங்கள் முடிவதில்லை” !!

யா அல்லாஹ் அன்னாரை உன் அருள்களால் ஆகர்ஷிப்பாயாக. பூரண சுகத்தை வழங்குவாயாக.”
اللهم رب العرش العظيم
ان يشفيه شفاء عاجلا

-முஹ்ஸி-


One thought on “ஹாஜா சஹாப்தீன் என்னும் சகாப்தம் இவ்வுலகில் முற்று பெற்றது… அவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது ஏராளம்..!

  1. Mahdiya Ameen says:

    ඔව් ඔහු ගුරුවරයෙකි .එලෙසම ගුරුවරුන්ටත් ගුරුවරයෙකි ඒ අසිරිමත් ආචාර්යවරයා බහුවිධ කුසලතා වලින් හෙබි අංගසම්පූර්ණ ගුරු පෞරුෂයෙන් යුත් අසමසම ආචාර්යවරයෙකි. ඔහුගේ සිංහල හා ද්‍රවිඩ භාෂා කුසලතා තුලින් සමාජයට අතිමහත් සේවයක් ඉටු කළේය. එපමනක් නොව සමාජයේ විවිධ පැතිකඩයන් ඔස්සේ සේවාවන් සැපයූ ඔහු අද සදහටම අපගෙන් සමුගෙන සන්සුන්ව දෙනෙක් පියා ගත්තේය. انا لله و انا اليه راجعون،යා අල්ලාහ් ඔහුගේ සියලු කුසලයන් භාරගෙන ඔහුගේ සියලු පාපයන් වලට සමාවදී ඉතා උසස් වූ جنه الفردوس නම් ස්වර්ගය ලබා දෙනු මැන ආමීන්.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All