Puttalam Online
art-culture

தீபாவளிப் பண்டிகை விரதம்

  • 5 November 2018
  • 774 views

(சாமஸ்ரீ-க.மகாதேவன்-உடப்பூர்)
.
இந்துக்களாகிய நாம் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம்.ஆண்டு முழுவதும் எங்கள் மத்தியில் விரதங்களும் விழாக்களும் பண்டிகைகளும் பவனி வருவதைப் பார்க்கின்றோம்.இவை மனமகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் உள்ளத் தூய்மையையும் வெளிப்படுத்துவன.இறை உணர்வைத் தூண்டுவன.உயர்ந்த கலாசாரப் பண்பாட்டின் உயிர் நாடியாகவும் சிறந்த ஆன்மீக தத்துவத்தைப் போதிப்பதாகவும் அமைகின்றன.

இந்துக்களின் சமய புராணங்களும் இதனை வலியுறுத்தி நிற்கின்றன.இந்துக்களால் கொண்டாடப்படும் கொண்டாட்டங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.பொங்கல் பண்டிகை சித்திரை வருடப்பிறப்பு கலை சம்பந்தமான கொண்டாட்டங்கள்.சிவராத்திரி நவராத்திரி என்பன சமயத்தோடு சம்பந்தமான கொண்டாட்டங்கள் கந்தஷஷ்டி தீபாவளி என்பன சரித்திர சம்பந்தமான கொண்டாட்டங்கள்.தீய குணங்களை அழித்து அறியாமை இருளினை அகற்றிய ஆன்மா ஞானஒளி பெறுதலே தீபாவளி ஆகும்.

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று இத்தீபாவளிப் பண்டிகை தீப அலங்காரப் பண்டிகையாக இல்லங்கள் தோறும் மங்களகரமாக கொண்டாடப்படுகின்றது.தீபங்கள் ஏற்றப்படும்போது இருள் விலகி விடும்.தீபம் விளக்கு ஆவளி-வரிசை நம்மிடம் உள்ள காமம் கோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய இருள்களை வரிசைப்படுத்தி இறைவனுடைய திருநாமம் என்னும் தீபத்தினால் எரித்து ஆன்மஒளி பெற வேண்டும் என்பது இதன் தாற்பரியம்.தீபாவளியைப் பொறுத்தவரை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பலரும் கொண்டாடியதற்கு சான்றுகள் உண்டு.

இந்தியாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மொகலாய மன்னர்கள் தங்கள் காலத்தில் விமரிசையாக தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.மொகலாய மன்னர் அக்பர் மனைவி ஜோடாபாய் இந்த மதத்தை சேர்ந்தவளாக இருந்ததனால் தீபாவளி பண்டிகையை முதலில் கொண்டாடத் தொடங்கியதாக கூறுகின்றனர்.மேலும் ஜகாங்கீர் நூர்ஜகானும் தீபாவளியை கோலாகலத்துடன் கொண்டாடி ராஜாமான்சிங் அரண்மனைக்குச் சென்று வான வேடிக்கை பார்த்து மகிழ்ந்து இனிப்புப் பலகாரங்களை ருசித்து விட்டு திருப்புவதாக வரலாற்று ஆசிரியர் ‘அபுல்பசல்’தனதுஅயின்-இ-அக்பரி’என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தீபாவளியன்று கட்டாயம் எண்ணெய் தலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.தலைக்கு எண்ணெய் வைப்பதில் கூட சாஸ்திரங்கள் உண்டு.ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் நீராடினால் மனவருத்தத்தையும் திங்கட்கிழமை உடலுக்கு ஒளியையும் செவ்வாய்க்கிழமை மரணத்தையும் புதன்கிழமை செல்வத்தையும் வியாழக்கிழமை உடல் நலத்தையும் வெள்ளிக்கிழமை வறுமையையும் சனிக்கிழமை விரும்பியவற்றை அடைதலையும் அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனால் பெண்கள் செவ்வாய் வெள்ளி எண்ணெய் ஸ்நானம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்கிழமைகளில் எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டி நேரிட்டால் அதற்கு பரிகாரமுமம் கூறப்பட்டுள்ளது.ஞாயிறு எண்ணெயுடன் புஷ்பங்களையும் செவ்வாய் சிறிது மண்ணையும் வெள்ளி கோசலத்தையும் சேர்த்துக் கொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.மேலும் ஷஷ்டி ஏகாதசி துவாதசி சதுர்த்தசி அட்டமி பிரதமை பௌர்ணமி அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம் கேட்டை திருவோணம் திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் நீராடலாம் என்றும் அப்பயங்க ஸ்நானம் என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அறநூல்களில் காலை 8.30மணிக்கு முன்பும் மாலை 5.00மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்பது விதியாயுள்ளது.ஆனால் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் அதாவது தீபாவளியன்று அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்கக்கூடிய பாவம் சேரும் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது அதாவது ‘யஸ்யாம் ஹதச் சதுர்தச்யாம் நரகோ விஷ்ணுநாநிசி தஸ்யாமப்யஞ் ஜனம் கார்யம் நரைந் நரக பீருபி’ என்ற வரிகள் இதனை விளக்குகின்றது.

தவிர நரக சதுர்த்தசியன்று அதிகாலையில் சூரியன் சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புண்ணிய தினம் அன்றும் அந்நாளில் நீராடிப் புத்தாடை அணிந்து லக்ஷிமி நாராயணனைப் பூஜிப்பது சிறப்பான பலனைத் தரும் என்று வி;ஷ்ணு புராணம் தெரிவிக்கின்றது.தீபாவளியன்று எண்ணெயில் லக்ஷ்மி தேவியும் ஜலத்தில் கங்காதேவியும் உறைகின்றனர் என்பதை ‘தைலே லக்ஷ்மி ஜலே கங்கா தீபாவளி தினே வஸேத்’என்று துலா மகாத்மிய புராணத்தின் புகழ் பெற்ற வாசகம் கூறுகின்றது.இதற்கு விஷ்ணு புரானத்தில் ஒரு வரலாறும் உண்டு.

நரகாசுரனுடன் பகவான் போரில் இருந்த சமயம் அரக்கர்கள் லக்ஷ்மிதேவியைக் கவர்ந்து செல்ல முயன்றதாகவும் உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது.இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் புரிந்தது தேவர்களுடன் யமதர்மராஜனும் இவர்களைப் பணிந்து போற்றிய பொழுது தேவி யமனிடம் ‘இப்பண்டிகையை முறையாக கடைப்பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக் கூடாது’என்று ஆணையிட யமதர்மராஜனும் ஏற்றுக் கொள்ள தேவி மகிழ்ந்து ;இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபன அட்சதைகளால் பதினான்கு தர்ப்பணம் செய்து மகிழ்விப்பார்கள்’என்று வரம் அளித்தாள்.

இதுவே தற்போது யமதர்ப்பண தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.எண்ணெய்க் குளியல் தற்காலத்தில் பலர் கடைப்பிடிப்பதில்லை.எமது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பது பலன் கொடுக்கும்.தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய் மிளகு சீரகம் இஞ்சி மஞ்சள் தட்டிப்போட்டு தலை உடல் எல்லாம் தேய்த்துக் கொள்ள வேண்டும்.மிளகாய் வாய்வை அடக்கும்.மிளகு சீரகம் ஜீரணத்துக்கு உதவும்.இஞ்சி பித்தத்தை தணிக்கும்.மஞ்சள் குளிர்ச்சியைத் தரும்.எண்ணெய் மயிர்க்காலில் அழுந்தத் தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும்.

நீரினுள் ஆல் அரசு புரசு அத்தி மாவிலங்கம் பட்டை போட்டு சுடவைத்து அந்த மருத்துவக் குணம் கொண்ட நீரில் ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை மெய்யன்போடு துதிக்க வேண்டும்.சிலர் மஞ்சள் பூசிய புத்தாடைகளை அணிவார்கள்.பின் பலகாரங்களை உண்பார்கள்.எண்ணெயில் பொரிந்த பட்சணங்கள் உண்பது சிலருக்கு சமிபாடு அடைவதில்லை.அதற்காக தீபாவளி லேகியம் அதாவது சுக்கு மிளகு திப்பிலி அதிமதுரம் பரங்கிக்கிழங்கு சித்திரத்தை இஞ்சி பெருங்காயம் இலவங்கம் உலர்ந்த திராட்சை பனைவெல்லம் நெய் தேன் போன்ற பொருட்களை பக்குவப்படுத்தி மருந்து உருண்டைகளாக்கி அதனை அவசியம் எல்லோருக்கும் உண்ணக் கொடுப்பது வழக்கம்.எண்ணெயில் பொரித்த பட்சணங்களை மிகுதியாக உண்டாலும் இந்த தீபாவளி லேகியம் அதனை ஜீரணிக்கச் செய்து விடும்.

புனிதமான தீபாவளித் திருநாளில் தீய நெறிகளைக் கைவிட்டு தூய உணவை உண்டு களித்திருக்க வேண்டும்.மது அருந்துதல் மாமிசம் உண்ணுதல் பலவித கேளிக்கைகளில் ஈடுபடுதல் அசுர குண இயல்புகளாகும்.கடவுளை மறந்து வாழ்பவர் பலவித துன்பங்களை அனுபவிப்பர் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே நரகாசுரன் வரலாறு திகழ்கிறது.எனவே தீபாவளியன்று மது மாமிசம் உண்பதை நிறுத்தி இறை பக்தியோடு வாழ வேண்டும்.

தீபாவளியன்று மாலை வீட்டின் முன்புறம் தீபம் ஏற்றி வைத்தால் யமதர்மராஜன் திருப்தியடைந்து அந்த வீட்டிலுள்ளோர் அகால மரணமடைய விடமாட்டார் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது.எனவே அமாவாசையும் கேதார கௌரி நோன்பு இறுதி நாளும் தீபாவளியும் ஒருங்கமைந்த இந்தத்திருநாளில் நம் மனத்திலே உள்ள தீய குணங்கள் என்ற நரகாசுரனை அழித்து உள்ளத்தில் ஞான தீபத்தை ஏற்றி அஞ்ஞான இருள் அறியாமை அகன்று வாழ்வில் வளம் பெருக வேண்டும் என்று எல்லாம் வல்ல கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு நற்கதி பெறுவோமாக.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All