Puttalam Online
regional-news

தடம் பதிக்க தயாராகும் புத்தளம் இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை

  • 3 December 2018
  • 165 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
 .
கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் இரண்டாவது புத்தளம் இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையை நடாத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
 .
அறிவு மற்றும் திறன் ரீதியான விருத்திகளை மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை இன்று சர்வதேச அளவில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடாத்தப்பட்டு வருகின்றன.
 .
மாதிரி ஐக்கிய நாடுகள் சபை எனும்போது உலகளவில் செயற்பட்டு வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையை அதே பாணியில் மாணவர்கள் பிரதிபலித்து உலக விவகாரங்களை விவாதித்து தீர்வுகளை முன்வைப்பதாகும்.
 .
இராஜதந்திர சிந்தனையாற்றல் மற்றும் செயற்பாட்டு திறமை, சமயோசித சிந்தனை, நாவன்மை, ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணங்களில் அணுகும் பக்குவம் மற்றும் தீர்வுகளை இனங்கண்டு சுட்டிக்காட்டும் ஆற்றல்களை பலப்படுத்தி வலுப்படுத்துவதோடு சமகால சர்வதேச அறிவை மேம்படுத்தும் ஓர் செயற்பாட்டு களமே மாதிரி ஐக்கிய நாடுகள் சபை ஆகும்.
 .
இலங்கையில் முதன்முறையாக தலைநகரத்திற்கு வெளியே ஆங்கிலம் மற்றும் தமிழ் இரட்டை மொழிகளில் இந்த களத்தை கடந்த வருடம் புத்தளத்தில் ஓர் மாணவர் குழு அமைதி தொண்டர்கள் அமைப்பின் அனுசரணையோடு நடத்தி முடித்தார்கள்.
 .
எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டு காலஞ்சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதியான ஊனா மேக்குளே அம்மையாரின் வருகை மற்றும் அவர்கள் இந்நிகழ்வை சிலாகித்து குறிப்பிட்டமையும் முழு இலங்கையின் கவனத்தை இந்நிகழ்வின் பக்கம் ஈர்த்திருந்தது.
 .
அதுமாத்திரமல்லாமல் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை வளாகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்று மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியோடு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 .
இலங்கையில் முதன்முறையாக SCHOOL OF PUTTALAM YOUTH
MODEL UNITED NATIONS என்ற சர்வதேச அறிவு தொடர்பான நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டு வந்தன.
 .
அந்த வகையில் இந்த இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை இம்மாதம்  29 மற்றும் 30 ம் திகதிகளில் புத்தளத்தில் இடம்பெறவுள்ளது.
 .
சமூகத்தின் குரலை சர்வ மயமாக்கும் அரங்கம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த நிகழ்வு இம்முறை மாவட்ட அளவில் வியாபித்து மும்மொழிகளிலும் இடம்பெறவிருக்கின்றமை முக்கியமான அம்சமாகும்.
 .
இதன் முதல் கட்டமாக கரைதீவு மற்றும் கற்பிட்டி பாடசாலைகளில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை செயலமர்வுகளை நடத்தியதோடு சிலாபம் நஸ்ரியா கல்லூரி, மாதம்பை மிஸ்பா கல்லூரிகளிலும் அறிமுக நிகழ்வு மற்றும் செயலமர்வுகளை நடாத்தி புத்தளம் இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தனது பரப்பெல்லையை வியாபித்துள்ளது.
 .
இம்முறை இந்த இளைஞர்கள் மாநாடு புதிய சில அம்சங்களை உள்ளடக்கியதாக இலங்கையின் முக்கிய இராஜதந்திரிகளின் பிரசன்னத்துடன் இடம்பெறவிருக்கின்றமை மீண்டும் ஒரு முறை கவனயீர்ப்பை பெற்றுக்கொள்ளும் நிகழ்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All