Puttalam Online
social

நீங்கா வடுக்களை ஏற்படுத்திய ஆழிப்பேரலைக்கு வயது 14

  • 26 December 2018
  • 353 views

(சாமஸ்ரீ-க.மகாதேவன்-உடப்பூர்)

இயற்கையின் கொடுமையால் உலகே மிரண்டு போயுள்ளது.விஞ்ஞானத்தில் விந்தை படைக்கும் நாடுகள் இராணுவ பலத்தில் நாட்டாமை செய்யும் வல்லரசு நாடுகள் கூட இந்த இயற்கை அனர்த்தங்களின் முன்னால் மண்டியிட்டு நிற்கின்றன.இயற்கையை வெல்லும் தகுதி மனித குலத்திற்கு இல்லாத போதும் அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் அதற்குண்டு.ஆனால் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காததன் விளைவே கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் திகதி ஆசிய நாடுகளின் கரையோரப் பகுதிகளை புரட்டிப் போட்ட கடல் கோளின் மூலம் மனித குலம் எதிர்கொண்டது.

இதன் பின்னர் கூட சில அரசாங்கங்களும் மக்களும் விழிப்புணர்வு பெறாதது துரதிஷ்ட வசமானதாகவேயுள்ளது.கடல்கோள் தொடர்பான அறிவைப் பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்தக் கடல்கோளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆசிய நாடுகளினால் அரைவாசியேனும் குறைத்திருக்க முடியும்.அதன் பிறபாதிப்பிலிருந்து மீண்டெழுந்திருக்கவும் முடிந்திருக்கும்.

ஆனால் கடல்கோள் ஏற்பட்டு இன்றுடன்(2016.12.26) பன்னிரெண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.அதிகாலை வேளையில் அகோர தாண்டவமாடிய கடல்கோளினால் ஆசிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் விழுங்கப்பட்டு இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்ட கறுப்புநாள் இன்று ஆசிய நாடுகள் எங்கும் கனத்த இதயத்துடனும் ஆறாத துயரத்துடனும் பன்னிரெண்டாவது ஆண்டாக நினைவு கூரப்படுகின்றது.2004ம் ஆண்டு 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் கரையோர மாவட்டங்களையும் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களையும் சூரையாடிச் சென்ற கடல்கோளின் பாதிப்புகளிலிருந்து மக்களால் இன்றுவரை விடுபட முடியவில்லை.

அந்தளவுக்கு ஒவ்வொருவரின் மனங்களையும் ரணமாக்கி விட்டுள்ளது.உயிர் அழிவுகள் மட்டுமன்றி உடைமை அழிவுகளையும் பாரியளவில் இக்கடல் ஏற்படுத்தியதனால் இன்றுவரை மீளமுடியாத வாழ்க்கைப் போராட்டத்திற்குள் இலங்கையின் கரையோரப் பகுதி மக்கள் சிக்குண்டு போயுள்ளனர்.உடைமை ரீதியாக ஓரளவுக்கேனும் மக்களின் நிலை மேம்பட்டுள்ள போதும் உளரீதியாக அவர்களை மீட்டெடுப்பதென்பது கவலைக்குரிய விடயமாகவே இன்றுவரை உள்ளது.

இந்தக் கடல்கோளின் பேரழிவுக்குள்ளான சகல நாடுகளிலும் உயிரிழந்து போனவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாக உள்ளனர்.அத்துடன் உயிர் தப்பியவர்களில் மிகவும் பாதிப்படையக் கூடியவர்களாகவும் உதவியற்றவர்களாகவும் சிறுவர்களே உள்ளனர்.ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அநாதைகளாக்கப் பட்டுள்ளனர்.இன்னும் ஆயிரக்கணக்கானோர் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு எதிர்காலத்தை இழந்தவர்களாக உள்ளனர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட கடல்கோளினால் உயிரிழந்தோர் காயமடைந்தோர் காணாமல் போனோர் வாழ்விடங்கள் கட்டிடங்கள் அழிவு சேதம் சொத்துக்கள் இழப்பு நன்னீர்க் கிணறுகள் தோட்டங்கள் விவசாயக் காணிகள் உவர்த்தன்மை கொண்டவையாக மாறியமை அகதிகள் உருவாக்கம் அநாதைகள் உருவாக்கம் உளவியல் பாதிப்பு பௌதீக வளம் பாதிப்பு கடல் வளம் பாதிப்பு பொருளாதார பாதிப்பு என பல இழப்புகள் ஏற்பட்டன.

உலக நாடுகளின் உதவிகளுடன் அரசும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்கொண்ட துரித புனரமைப்பு நிவாரண மீள் குடியேற்ற நடவடிக்கைகளினால் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஓரளவுக்கேனும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருந்தது.இந் நடவடிக்கைகளில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொண்டர் அமைப்புக்களின் பணி இதில் பெரும் பங்கு வகித்திருந்தது.

இதே வேளை இலங்கையில் கடல்கோள் பேரழிவு ஏற்பட்ட பின்னர் அரசினால் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.இதில் கடற்கரையிலிருந்து 100மீற்றர் தூரத்திற்குள் மக்கள் வாழ்வதற்கு தடை விதிக்கப்பட்டமையை குறிப்பிட முடியும்.பல மாதங்கள் இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் தற்போது இது கைவிடப்பட்டுள்ளது.

இயற்கை தற்போது ஆசிய நாடுகளை வஞ்சிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றது.கடல்கோள் நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் நிலச்சரிவு கடும் வெப்பமென தொடர் தாக்குதல்களை ஆசிய நாடுகளின் மேல் தொடுத்துள்ளது.இதில் எரிமலை நிலநடுக்க அபாயமற்ற நாடாகவே இலங்கை இருந்து வந்துள்ள போதும் தற்போது இலங்கையின் சில பகுதிகளில் நில நடுக்கங்கள் உணரப்படுவது அபாயத்தின் அறிகுறியாகவே உள்ளது.உலகில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்களுக்கு இலங்கையும் முகம் கொடுத்து வருகின்றது.

பருவம் தவறிய மழை வீழ்ச்சிகள் அதிகூடிய வெப்பநிலை என மாறி மாறி ஏற்பட்டு வருகின்றது.அண்மைக் காலங்களில் அடிக்கடி பெய்யும் அடைமழைகளினால் நாட்டில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டதுடன் லட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டனர்.கோடிக்கணக்கான ரூபா சொத்துக்கள் இழக்கப்பட்டன.உலகை மிரட்டி வரும் இயற்கை அனர்த்தங்களினால் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.பல லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பல கோடிக்கணக்கான ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன என்று ஐ.நா.விடுத்துள்ள இயற்கை அழிவுகள் அனர்த்தங்கள் தொடர்பான அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதில் ஆசிய நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மாறிவரும் காலநிலை மாற்றங்களிலிருந்தும் அச்சுறுத்தி வரும் இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் இலங்கையையும் மக்களையும் பாதுகாக்க அரசும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்ற போதும் அதற்கு பொதுமக்களின் போதிய ஒத்துழைப்புகள் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

தமக்கான பாதுகாப்புக்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லாமையே இதற்குக் காரணம்.கடல்கோள் தொடர்பான அறிவையும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை கொண்டிருக்காததாலேயே 2004ம் ஆண்டு டிசம்பர் 26ந் திகதி 35ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை அதற்கு இரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அதன் வலியை இன்றுவரையல்ல என்றுமே இலங்கையால் மறந்து விட முடியாது.இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நாம் கொடுக்கும் ஒத்துழைப்பின் மூலமே நாட்டையும் நம்மையும் பாதுகாக்க முடியும்.

தற்போது கடல்கோள் அனர்த்தம் தொடர்பிலான முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்ற போதிலும் அதில் பொதுமக்களின் பங்குபற்றுதலானது சொற்ப அளவிலேயே உள்ளது.இயற்கை அனர்த்தங்களை எம்மால் தடுக்க முடியாது.ஆனால் குறைக்க முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்க முடியும் என்பதை ஒவ்வொரு வரும் உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் அரசும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொண்டர் அமைப்புக்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலமே எம்மையும் எமது நாட்டையும் பாதுகாக்க முடியும்.

கடல்கோளில் இறந்தோர் விபரம்
நாடு தொகை
இந்தோனேஷியா 184135
இலங்கை 38195
இந்தியா 22769
தாய்லாந்து 5305
கிழக்கு ஆபிரிக்கக்கரை 137
மலேசியா 74
மியான்மார் 59
பங்களாதேசம் 02
மொத்தம் 250676

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All