Puttalam Online
art-culture

ஒற்றையடி- மைல் 07

  • 2 January 2019
  • 320 views

நாளை Aalif Raaidh பாடசாலையின் முதல் நாளுக்குள் காலடி எடுத்து வைக்கின்றார். பிறந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் வாழ்வின் மிக முக்கிய தருணங்களில் ஒன்று என்று அவருக்கு புரிதல்கள் இருக்க வாய்ப்பில்லை. மாமன் என்ற வகையில் வாழ்க்கை என்பது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக என்னவென்று புரிய ஆரம்பித்து இருக்கின்றது.

இருபத்து ஐந்து வயது என்பது வெறுமனே காலங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல என்பது மிகத்தெளிவாக புரிய இது போன்ற சம்பவங்கள் என்னை சுற்றி நடக்க வேண்டி உள்ளது. உயர்தரம் இரண்டாம் தடவை தோற்ற கற்றுக்கொண்டு இருந்த காலங்களில் எனது மருமக்களை பாடசாலைக்கு சென்று விட வேண்டும், அப்போது கையில் ஒரு தொழில் இருக்க வேண்டும், அவர்களுக்கு சப்பாத்து வாங்கி கொடுக்க வேண்டும், மீண்டும் எனது உணவு இடைவேளையில் அவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு கூட்டி போய் விட வேண்டும் என இளவயது மாமன்களுக்கு இருக்கும் அத்தனை ஆசைகளும் எனக்குள் இல்லாமல் இருக்கவில்லை. உண்மையில் அதுதான் என் வாழ்க்கையின் அர்த்தம் என நம்பி இருந்தேன்.

வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எனது கற்றலுக்காக என் சகோதரிகள் செய்த உதவிகள் இன்றும் கண் முன்னே நிழலாடி நிற்கின்றன. அதற்கெல்லாம் செய்யப்போகும் கைமாறுதான் இந்த வாழ்க்கை.
என் பெற்றோருக்காக வாழ்ந்து குடும்பத்தை சந்தோஷப்படுத்தி வாழ்வதுதான் இந்த பிறப்பின் பயன் என நம்பி இருப்பதில் எனக்கு எந்த வித தவறும் இருப்பதாக படவில்லை. இது அவர்களுக்கான வாழ்வு, இதில் நான் எனக்கென வாழ்வதுக்கு சற்று சுதந்திரம் கொடுப்பது அவர்கள் எனக்காக வாழும் வாழ்வு என்பது எனது நிலைப்பாடு.
நாளை பள்ளிக்கூடம் செல்லும் மருமகனை கூட்டிச்செல்ல நான் ஊரில் இல்லை, வெகு சீக்கிரம் வீடு திரும்பியதும் அந்த ஆனந்தத்தை சுகிக்காமல் இருக்கப்போவதும் இல்லை.குழந்தைகள் எமது வாழ்க்கையை எத்தனை லாவகமாக மாற்றி விடுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

பிறந்ததில் இருந்து வாப்பா என்று நான் கூப்பிட்ட வாப்பா இப்போ “அப்பா” ஆகி விட்டார், உம்மா என்று அழைத்த நாள் ஞாபகத்தில் இல்லை, இப்போது உம்மம்மா! மூத்த ராத்தா-உம்மா என்றும் இளைய ராத்தா “சின்னா” என்றும் மாறிப்போனார்கள். தொலைக்காட்சி சேனல்கள் குழந்தைத்தனம் ஆகிப்போயின.
நான் மட்டும் அல்ல, எமது வீட்டில் எல்லோரும் எல்லோருக்கும் ஆலிபின் உறவு முறைகள் ஆகிப்போனார்கள். எமக்கு உலகம் ஆலிபின் உலகம் ஆகிப்போனது. ஆலிப் வீட்டை ஆக்கிரமித்துப்போனான்.

தொடர்ந்து மன்ஹா- பின் மூன்று நாட்களின் முன்னர் தனது முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடிய அமல் என வாழ்க்கை அவர்கள் வசப்பட்டுப் போனது. முத்தங்களாலும், மழலை சத்தங்களாலும் நிறைந்து வழிந்தது வீடு.
வாழ்க்கை எத்தனை அழகானது என்பது எனக்கு அமலின் கண்களை காணும் போதெல்லாம் பளிச்சிட்டு மறையும். அப்போது இதயத்தில் தோன்றும் புன்னகை நக்ஷத்திரங்களை விட குதூகலகமாக இருக்கும். “ம்ம்.. வாழ்க்கை அழகானது, அல்ஹம்துலில்லாஹ்!” என சொல்லிக்கொள்வேன்.

நாளை பாடசாலை செல்லும் ஆலிபை அள்ளித்தூக்கி முத்தமிட ஆசைப்படுவதும், கையோடு பற்றி நடந்து பெருமிதம் கொள்வதும் இயலாமல் ஆகிப்போன இந்த இரவு புது வருடத்தின் முதல் இரவாகிப்போனதில் கோடி வருத்தங்கள் எனக்கு.

மத்திய கிழக்குகளின் உச்சி வெயிலில், எங்கோ இருக்கும் குழந்தைகளுக்காக ஓடாய் தேய்ந்து உழைக்கும் இலட்சோப இலட்ச தந்தையரின் ஒவ்வொரு இரவும் இப்படித்தான் கழிந்திருக்க வேண்டும்.

இன்று பாதையில் ஒரு நபர், மேல் பொத்தான் மூன்று, கீழ் பொத்தான் ஒன்று திறந்து கிடக்க, அழுக்கு படிந்த சாரனுடன் சிவந்த கண்களுடன், எண்ணெய் வழிந்த முகத்துடன், பரட்டை தலையுடன் என்னமோ போல நடந்து செல்கின்றார். அவரது கரத்தை பற்றியவாறு ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன், அவனது முகத்தில் இருந்த அந்த பெருமிதம் அவர்தான் அவனது தந்தை என அறிவித்தபடி இருந்தது. அந்த காட்சி அப்படியே ஒரு ஓவியமாகி என் இதயத்தின் சுவரில் பதிந்து போனது. அந்த நொடி எனக்கும் என் தந்தை நினைவில் வந்து பளிச்சிட கண்கள் குளம் ஆயின.

இதயத்தின் ஆழத்தில் உள்ள அன்பின் தேக்கம் நூறு வயதானாலும் வறண்டு போவதே இல்லை. அவை என்றும் ஈரமாய் நம்மை மனிதராக்கிக் கொண்டே இருக்கின்றன.

உலகம் அழகானது நண்பர்களே,
அதுவும் குழந்தைகளால் ஆன உலகம்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

*Aalif Raaidh யாரென்று தெரியாதவர்களுக்கு அவர் எனது மூத்த மருமகன் என்பது மேலதிக தகவல். மன்ஹாவும் அமலும் மருமகள்கள் என்பது உபரித்தகவல்.

-அ.இ.லு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All