Puttalam Online
star-person

அருணாச்சலம் – ஐந்து தசாப்தங்களாக முடி திருத்தும் சேவை

  • 20 February 2019
  • 870 views

(எம்.யூ.எம். சனூன்)

புத்தளம் பெரிய பள்ளி வீதியில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக சிகை அலங்கார நிலையம் நடாத்திவருகின்ற முதியோர் ஒருவரை சந்தித்ததில் அவரை பற்றி எழுத வேண்டும் என என் எண்ணத்தில் இழையோடியது.

செவிப்பறையை அதிர வைக்கும், வானலையை பிளக்கும் புதிய பாடல்களின் ஓசை அங்கு இல்லை. வெளிநாட்டு வாசனை திரவியங்களோ, சிகை அலங்காரம் பண்ணுவதற்கான புதிய உபகரணங்களோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆடம்பர கதிரைகளோ அங்கு காணப்படவில்லை.

சீப்புக்கள் சில, கத்தரிக்கோல், பௌடர் டப்பா ஒன்று, சவரக்கத்தி, முடிகளை தட்டி விடும் பிரஷ், தண்ணீர் போத்தல் ஒன்று, ஆப்டர் சேவுக்கு பயன்படுத்தும் சீனக்கார மருத்துவ கல் ஒன்றுடன் சிறிய கதிரை ஒன்று, நிலக்கண்ணாடி ஒன்று, சிறிய மேசை ஒன்று. இவைகள்தான் பெட்டிக்கடை என வர்ணிக்கக்கூடிய அந்த சிகை அலங்கார நிலையத்தில் காணப்பட்ட பொருட்கள் ஆகும்.

சாதாரணமாக ஒரு சலூனுக்கு சென்றால் புதிய உபகரணங்களை பாவித்து அவசரமாக சேவையை முடித்து விட்டு அடுத்த வாடிக்கையாளரை அழைக்கும் சலூன்காரர்களுக்கு மத்தியில் இவர் முற்றிலும் வித்தியாசமாக காணப்பட்டார்.

பார்வைக்கான கண்ணாடி அணியாமல் வேலை செய்த அவரை பார்த்து, நீங்கள் கண்ணாடி அணியாமல்தான் பேப்பர்கள் வாசிப்பீர்களா என்ற ஒரு வினாவினை தொடுத்து அவரின் பார்வையின் கூர்மையையும் புரிந்து கொண்டேன்.

மிக வேகமாக சீப்புடனும் கத்தரிக்கோலுடனும் லாவகமாக முடி திருத்துகின்ற அவரின் வேகத்தை ரசித்தவாறு அந்த 10 நிமிட நேர காலத்துக்குள் அவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து எனது பத்திரிகை துறை பேட்டி காணும் யுக்தியை மெதுவாக ஆரம்பித்தேன். அவரின் கத்தரிக்கோல் வேகம் எனது காதினை பதம் பார்த்து விடுமா என்ற அச்சமும் எனக்குள் எழ தவறவில்லை.

அவரின் பெயர் எம். அருணாச்சலம். வயது 67. இந்த வயதிலும் கண்ணாடி அணியாமல் மிக வேகமான முடி திருத்தும் பாணிதான் என்னை அவரை பற்றி எழுத வேண்டும் என யோசிக்க வைத்தது. மொத்தமாக 07 சகோதர அங்கத்தவர்களை கொண்ட தமது குடும்பம் புத்தளம் நகரையே பிறப்பிடமாக கொண்டதாக குறிப்பிடும் அவர் பின்னர் புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாக கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஏழாம் வகுப்புடன் தனது கல்வியினை நிறைவு செய்ததாக தெரிவிக்கும் அவர் சுமார் அரை நூற்றாண்டு காலமாக 1964 ம் ஆண்டு காலம் தொடக்கம் இந்த தொழிலை செய்தே தனது ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கியதாகவும் தெரிவித்தார்.

புத்தளம் பெரிய பள்ளி வீதியிலேயே இவர் கடைகள் மாறி மாறி இது வரையும் வாடகை கடைகளிலேயே தனது தொழிலினை மேற்கொண்டு வருகின்றார்.

முன்னாள் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் எம்.எச்.எம். நைனா மரிக்கார், இலங்கையின் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில், புத்தளம் நகரின் மரைக்கார் வம்சாவளிகளான ஸாலிஹ் மரைக்கார், அலி மரைக்கார், அப்பாஸ் விதானை போன்ற பிரபலங்களுக்கு அவர்களது வீடுகள் சென்று முடி திருத்தியதாக தெரிவிக்கும் இந்த முதியவர் இதற்காக அன்று தலா இரண்டு ரூபாய்தனை கூலியாக பெற்றதாகவும் ஞாபகம் ஊட்டினார்.

இந்த தொழிலுக்கு உங்களுக்கு யார் குரு என ஒரு வினாவினையும் தொடுத்து பார்த்தேன். சற்று கண் கலங்கியவாறு என் கல்விக்கு என தாய் குரு. என் தொழிலுக்கு என் தந்தை குரு என தெரிவித்தார். தனது தந்தை முத்துக்கருப்பன் இதே தொழிலைசெய்ததாகவும், அவரிடமே இந்த தொழிலை தான் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.தனது தந்தை மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் எனவும், எந்நேரமும் அவர் நெற்றியிலே பெரிய குங்கும பொட்டோடு காணப்படுவதால் அவரை எல்லோரும் அன்போடு பொட்டு அண்ணன் என அழைத்ததாகவும் பெருமையோடு குறிப்பிட்டார்.

இளைஞர்களை கவர்வதற்கு புதிய உத்திகளை கையாள வேண்டாமா என ஒரு புதிர் போட்டேன். வேண்டாம் அய்யா, நான் முடி திருத்திய பழையவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள். பழையவர்களில் இன்னும் சில பேர் என்னிடம் வாடிக்கையாளராக வருகின்றனர். அவர்களுக்கு எனது சேவைகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இவ்வளவும் கேட்டு விட்டு, நான் முடி திருத்திய கூலி எவ்வளவு என கேட்டேன். வெறுமனே 150 ரூபாய் என சொன்னதை கேட்டு அதிர்ந்து விட்டேன். முடி திருத்தத்துக்கும், சவரம் செய்வதற்கும் சேர்த்து 250 ரூபாய் அளவில் அறவிடும் சலூன் காரர்கள் மத்தியில் இவர் ஒரு வித்தியாசமான ஒரு யுக புருஷராகவே எனக்கு என்ன தோன்றியது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All