Puttalam Online
art-culture

”உரிமைக் குரல்” சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்

  • 26 February 2019
  • 464 views

(வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
 .
சிறுகதைகள் ஒருசமூகத்தின் நிலையை யதார்த்தமாக எடுத்துக் காட்டுகின்றன. சிறுகதை மூலமாக குறித்ததொரு விடயத்தை செறிவாகவும், தெளிவாகவும் வெளியிட முடிகின்றது. சங்க காலத்தில் செய்யுள் வடிவில் வெளியிடப்பட்டஉள்ளுணர்வுகள் – காலமாற்றத்தில் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் பரிணாமம் பெற்றன. பாத்திரப் படைப்பு, தேர்ந்தமொழிநடை, பின்னகர்வு (FLASH BACK), உரையாடல் பாங்கு, ஆசிரியரே கதைசொல்லியாக இருத்தல் போன்ற நுட்பங்களில் சிறுகதைகளை எழுத முடிகின்றது.
 .
இலங்கையில் சிறுகதைகள் எழுதுவோர் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். அதில் கினியம இக்ராம் தாஹாவும் இணைந்து, ”உரிமைக் குரல்” என்ற சிறுகதை நூலை தனது கன்னிப் படைப்பாக வெளியீடு செய்துள்ளார். சீர்திருத்தக் கருத்துக்கள் மூலம் கதைகளை எழுதும் இக்ராம் தாஹா, 144 பக்கங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் ”உரிமைக் குரல்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியினூடாக 20 சிறுகதைகளைத் தந்திருக்கின்றார்.
 .
சிறுகதைகளை எழுதுகையில் இவர் பாத்திரங்களைக் கையாளும் விதம் பாராட்டுக்குரியது. அதேபோல சில சிறுகதைகளின் முடிவுகள் மனதை ரணப்படுத்தி சிந்தனையில் சிறைப்பட்டு விடுகின்றமை அச்சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். நியமனம் என்ற சிறுகதை அத்தகையதொரு சிறுகதையாகும். அதேபோல் எதிர்பாராத முடிவுகள் மூலம் வாசகர்களான எம்மை ஆச்சரியப்பட வைக்கும் திறன் இக்ராமின் சிறுகதைகளுகளில் நிறையவே காணப்படுகின்றன. இலட்சியக் கனவு என்ற சிறுகதையும் ஆரம்பத்தில் வாசிக்கும் போது திகிலாகத் தொடங்கி ஒரு சுவாரசியத் தன்மையை ஏற்படுத்தி, இறுதியில் நகைச்சுவையாக நிறைவடைகிறது.மொத்தத்தில் வாசிப்பவர்களுக்கு ஒரு ஆர்வத்தையே தூண்டி நிற்கின்றது.
 .
சமூகத்தின் பிரச்சினைகளை மிகத் தத்ரூபமாகக் கூறி அதற்கான தீர்வுகளையும், பல சந்தர்ப்பங்களில் வாசகர்களின் முடிவுகளோடு ஒத்துப் போகும் விதமாகவும் இவரது பல சிறுகதைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. திருந்திய உள்ளங்கள், தர்மம், தீர்வு, வழிகாட்டி போன்ற சிறுகதைகள் நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்களோடு பொருந்திப் போவதை வாசகர்கள் வாசிக்கும்போது அவதானிக்க முடியும். அதேபோல இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள உரையாடல்களும் ரசிக்கத்தக்கதாகக் காணப்படுகின்றன.
 .
2010 ஆம் ஆண்டிலிருந்து காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் எமது ”பூங்காவனம்” சஞ்சிகையில் 13 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளமை இங்கே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவிடயமாகும். 2011 மார்ச்சில் வெளியிடப்பட்டபூங்காவனம் இதழ் நான்கில் இவரது ‘அன்றும் இன்றும்’ என்ற சிறுகதை வெளிவந்தது. அதுபோல் 2018 மார்ச்சில் வெளியிடப்பட்ட பூங்காவனம் இதழ் 32 இல் இவரது ‘மனிதம்’என்ற சிறுகதை வெளிவந்தது.
 .
இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் உரிமைக் குரல், இரண்டு பக்கம், திருந்திய உள்ளங்கள், வழிகாட்டி, முயற்சி, திருப்பம், தர்மம், தீர்வு, காலம் மாறிவிட்ட போதிலும், புலமைப் பரீட்சை, நியமனம் ஆகிய தலைப்புக்களிலான சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆகவே மொத்தமாகப் பார்க்கும் போது இவரது13 சிறுகதைகள் எமதுபூங்காவன இதழ்களை அலங்கரித்துள்ளன என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கலாம்.இவரது சிறுகதைகள் பூங்காவனம் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
 .
இந்தப் 13 சிறுகதைகளுடன் வாப்பாவின் வார்த்தைகள், நோன்பு வந்தாச்சு, வேலை நிறுத்தம்,நட்புக்காக ஒரு ஈமெயில், இலட்சியக் கனவு,கதைக்குள் கதை, காட்டில் ஒருஅவசர மாநாடு ஆகிய 07 கதைகளையும் சேர்த்தே நூலாசிரியரினால் ”உரிமைக் குரல்” என்ற இந்த நூல் தொகுதியாகி, உங்கள் கரங்களில் தவழவிடப்பட்டுள்ளன. இவைதவிர இந்த நூலாசிரியரினால் எழுதப்பட்டுள்ள சிறுகதைகள் ஏராளம் என்பதை நான் நன்கு அறிவேன். அவையாவும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் நூலாக வெளியிடப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்துகின்றேன்.
 .
இவர் பாடசாலைக் காலத்திலிருந்தே சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரது மாணவப் பருவத்திலேயே மாவட்ட, தேசிய ரீதியான போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களைப் பெற்றுள்ளார் என்பதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமே. எம்.ரி.எம். இக்ராம், கினியம எம். இக்ராம், இக்ராம் தாஹா ஆகிய பெயர்களில் இவருடைய பல்வேறு வகையான ஆங்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
 .
இவரதுமுதல் ஆக்கம் 1992 ஆம் ஆண்டு தினகரனில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 2000 ஆண்டுவரை தினகரன், மித்திரன், நவமணி, தினமுரசு, சூடாமணி போன்ற பல பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இடைக்காலத்தில் இலக்கியத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதிலும் 2010 ஆம் ஆண்டுமுதல் இக்ராம் தாஹா மீண்டும் தீவிரமாக எழுதத் தொடங்கியுள்ளார்.
 .
அதேபோல் மொழிபெயர்ப்புத் துறையிலும் இவரது ஈடுபாடு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. பாடாசாலைக் காலத்தில் சிங்களப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரதுஅதிகமான மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் நவமணி மற்றும் தினகரன் சாளரம் பகுதியிலும் தொடர்ந்து பிரசுரமாகியுள்ளன.
 .
இரசனைக்காக சில சிறுகதைகளை இங்கே எடுத்து நோக்குவோம்.
 .
இந்த நூலின் மகுடத் தலைப்பைத் தாங்கி பக்கம் 29 இல் அமைந்துள்ள உரிமைக் குரல் என்ற 03 ஆவது சிறுகதையானது பெண்களின் குரலாகவே ஒலிக்கின்றது.இதிலுள்ள பின்வரும் சம்பாஷனை அதனை துள்ளியமாகப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
 .
”உம்மா! உம்மா!” ஹாஜராவின் குரல் கேட்டு கிணற்றடியிலிருந்து பேகம் அவசரமாக வந்தார். தன் நானாவைக் கண்டதும்,
 .
”நானா சொகமா இருக்கீங்களா?” எனக் குசலம் விசாரித்தார்.
 .
”ம்..அல்லாஹ்வின் கிருபயால சொகம்.” என்றார் நாசிக்.
 .
”மகள் நீ மாமாக்கு டீ ஊத்தி வா’ என பேகம் மகளைப் பார்த்துச் சொல்ல, ஹாஜராவும் தாயின் கட்டளைக்கு செவி சாய்த்தவளாய் அடுக்களைக்குள் நுழைந்தாள்.
 .
”என்ன நானா சுபஹிலே அவசரமா இந்தப் பக்கம் வந்திருக்கீங்க?”
 .
”தங்கச்சி.. நீ சென்ன விசயம் பத்தி விசாரிச்சு பாத்தேன். பக்கத்தூரில ஒரு பொடியனப்பத்தி தெரிஞ்ச ஒருத்தர் சென்னாரு. நீ சரின்னு சென்னா இப்போஅந்த ஊர்ப் பக்கம் போறதால பேசிட்டு வரத்தான் உங்கிட்டஒரு வார்த்த கேட்டு போக வந்தன்.”
 .
”எங்கிட்ட எனத்தியன் கேக்கிறதுக்கு. எனக்கு இவள கரசேக்கும் வர நிம்மதியில்ல. அவள் இன்னம் படிச்சணும்னு செல்றா”
 .
”இங்க பாரு தங்கச்சி. அவள் படிச்சு கிழிச்சது போதும். பொம்புள புள்ளகள் ஆக்கவும் தைக்கவும் பழகிக்கொண்டா போதும். இதுக்கு மேல படிச்சு என்ன செய்ய?”
 .
”அதத்தான் நானா நானும் செல்றன். அவள்ட வாப்பா மவுத்தான பொறவு நானும் 9 ஆம் ஆண்டிலே ஸ்கூல் போறத நிப்பாட்டி கல்யாணம் பண்ணதானே பாத்தேன். ஒங்களுக்கே தெரியும் தானே.. அவள் புடிவாதம் புடிச்சதால ஓ.எல். வர படிச்ச வெச்சன். இனி படிச்சது போதும். அவசரமா தாருக்குச் சரி கட்டிக் கொடுத்தா ஏன்ட கடமயும் முடியும்.”
 .
இந்தச் சம்பாஷனை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கல்வி கற்கும் உரிமையை மறுப்பதாக அமைந்துள்ளது. ஆனால் கதையின் இறுதியில் ஹாஜராவுக்கு கல்வி கற்கும் உரிமையை சில யதார்த்த சம்பவங்களோடு ஒப்பிட்டு அனுமதி வழங்கப்படுவதானது சமூகத்தின் வெற்றியாகக் கொள்ளப்படலாம்.
 .
வாசகர்கள் இந்த நூலைக் கட்டாயம் வாங்கி மேலதிக விடயங்களைத் தெரிந்துகொள்வார்கள் என்று எண்ணுகின்றேன்.
 .
அதேபோல தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகத்தையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் எடுத்துக் காட்டுவதாக பக்கம் 41 இல் உள்ள ”இரண்டு பக்கம்” என்ற சிறுகதை அமைந்துள்ளது. தொலைந்த நட்பைதேடித் தருவதில் தொழில் நுட்பத்தின் நன்மையான பக்கத்தையும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தொழில் நுட்பத்தின் தீமையான பக்கத்தையும் இந்தச் சிறுகதையை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
 .
பக்கம் 126 இல் அமைந்துள்ள புலமைப் பரீட்சை என்ற சிறுகதையானது இன்றைய பெற்றோர்கள் மத்தியில் வேரூன்றியுள்ள பாரிய பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றது. தரம் ஐந்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் சதாவும் மன உளைச்சலுடன் இருப்பதோடு குழந்தைகள் மத்தியிலும் அந்த நிலையை உருவாக்கி விடுகின்றார்கள். குழந்தைகளுக்கே உரிய குறும்புத் தனங்கள் இல்லாமல் இயந்திரமாக எப்போது பார்த்தாலும் டியுஷன்.. டியுஷன்.. என்று சொல்லிக் கொண்டு ஓடித் திரியும் குழந்தைகள் ஒருகட்டத்தில் பெற்றோரையும் படிப்பையும் வீட்டையும் ஆசிரியர்களையும் வெறுத்துவிட்டு வெறிச்சோடி விடுகின்றார்கள். இத்தகைய நிலைமைகளிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கும் முகமாகவும் பெற்றோருக்கு அறிவுரைகள் சொல்வதாகவும் புலமைப் பரீட்சை என்ற சிறுகதை அமைந்துள்ளது.
 .
இறுதியாகபக்கம் 137 இல் உள்ள காட்டில் ஒரு அவசர மாநாடு என்ற சிறுகதையானது மிருகங்கள்  ஒன்றுகூடி மனிதர்கள் மிருகங்களுக்கு இழைக்கும் அநியாயங்களை அம்பலப்படுத்துவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இந்தக் கதையில் ஒவ்வொரு மிருகமும் தன் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் போது அதை வாசிக்கும் நமக்கு கன்னத்தில் அறைவதாக உணர முடிகின்றது. கட்டாயமாக இக்கதை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
 .
நூலாசிரியர் தன்னைப் பெற்றெடுத்த அன்புத் தாய் ஏ.எச். சம்சுன் நிஹாயா அவர்களுக்கும், தனதுஅன்புத் தந்தை மர்ஹூம் எம்.எம்.  தாஹா மற்றும் அன்புச் சகோதரன் மர்ஹூம் எம்.ரி.எம். நளீம் அவர்களுக்கும் நூலை சமர்ப்பணம் செய்திருப்பதானது நூலாசிரியரின் இரக்க சிந்தையையும் நன்றி மறவாத உணர்வையும் இயம்பி நிற்பதோடு எங்களையும் நெகிழ்வடையச் செய்துவிடுகின்றது.
 .
ஒரு சிறுகதைக்குச் சிறப்பூட்டும் அம்சங்களான மகிழ்ச்சி, துயரம், ஆச்சர்யம் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடு, நகைச்சுவைப் பாங்கு ஆகியவற்றைக் கோர்த்து இயன்றவரை சிறப்பாக இந்தச் சிறுகதைகளை நூலாசிரியர் இக்ராம் நகர்த்தியுள்ளார். அத்தோடு
“உயிர்த் துடிப்புள்ள பாத்திரப் படைப்புகளைக் கொண்டும், இலகுவான மொழிநடையைக் கொண்டும் சிறுகதைகளை நகர்த்திச் செல்லும் பாங்கு, இவரது சிறுகதைகளின் வெற்றி எனலாம். சமூக நோக்கோடு எழுதப்பட்டுள்ள இக்ராமின் கதைகள் இலக்கிய உலகில் நிச்சயம் பேசப்படும்” என்று நூலின் பின்னட்டைக் குறிப்பில் தியத்தலாவஎச்.எப். ரிஸ்னா குறிப்பிட்டுள்ளார்.
 .
சகோதரர், நண்பர் இக்ராமின் இந்தச் சிறுகதைகள் இனிமையாகவும் நிறைவாகவும் இருப்பதால் வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமேயில்லை. எதிர்காலத்திலும் பல காத்திரமான சமூகம் சார்ந்த சிறுகதைகளை எழுதி ஒரு சிறந்த கதாசிரியராக இலக்கிய உலகில் பரிணமிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இவருக்கு நிறையவே காணப்படுகின்றன. தன் எழுத்து முயற்சிகளைக் கைவிடாது மென் மேலும் இலக்கியப் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கின்றேன்.
 .
”உரிமைக் குரல்”என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியைத் தொடர்ந்து இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிட வேண்டும் என்று ஆழ் மனதால் பிரார்த்தித்து எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்!!!
 .
நூல் – உரிமைக் குரல்
நூல் வகை – சிறுகதை
நூலாசிரியர் – இக்ராம் தாஹா
தொலைபேசி – 0775009222
வெளியீடு – கானெம் கினியம குளொபல் சொசைடி
விலை – 400 ரூபாய்
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All