Puttalam Online
current

22.03.2019 – இரும்பும் உருகிய நாள்..! (புகைப்படங்கள் இணைப்பு)

  • 22 March 2019
  • 1,318 views

புகைப்படங்கள் – ஹஸ்னி அஹ்மத்
22.03.2019 நம் ஊரின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய நாள். ஒவ்வொரு பெண்ணும் விம்மி புடைத்து அழுத நாள்!

அப்படி என்ன செய்து விட்டோம்.. மணிக்கணக்கில் கால் கடுக்க வாக்கு சாவடியில் காத்திருந்து இம்மண்ணில் நல்லாட்சி ஏற்பட வேண்டுமென வாக்களித்த குற்றமா? இல்லை, ஆரோக்கியமான சூழலில் வாழ ஆசைப்பட்ட குற்றமா? நம் சந்ததி நோய் , நொடியின்றி சொந்த மண்ணில் வாழ வழி செய்ய வேண்டும் என மண்டை பிளக்கும் வெயிலில், வீதியில் இறங்கிய குற்றமா?

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தாய் உள்ளங்கள் எல்லாம் தம் உதிரங்கள் வாங்கிய அடியில் சீறி எழுந்து நின்றன. கண்களில் என்னவோ கண்ணீர் தான், ஆனால் உள்ளங்களின் கொதிப்பு, சூரியனை வெட்கமுற செய்திருக்க வேண்டும்.

Police என்றாலே கால்கள் இடம்பெயர்க்க தெரியாதவர்கள்.. இன்று நேருக்கு நேர் நின்று தம் உரிமைக்காக ஆக்ரோஷமாக முழங்கி நிற்க கண்டேன். தடுக்கப்பட்ட போதெல்லாம் நடு வீதியில் உட்கார்ந்து உன்னால் முடிந்ததை செய் என வழிவிடக் கண்டேன். இது நம் தாய் மண்ணின் வீரப்பெண்களை இவுலகிற்கு அறிமுகம் செய்த நாள். முக்கியமாக எனக்கு!

வயதான பெண்மணிகள் நடக்க முடியாது, தடுமாறி, உட்கார்ந்து எழும்ப முடியாது தவித்து நின்ற போது “லத்தி” களின் அகங்கார கர்ஜனை! வெட்கம் கெட்ட ஆண்மை! பெண்ணிடமா.. அதுவும் வயது போன அஞ்சா நெஞ்சங்களிடமா உன் வீரத்தை காட்ட வேண்டும். வெட்கி தலை குனிய வேண்டிய நீ.. இன்னும் நெஞ்சு நிமிர்த்தி நிற்க வழி செய்துள்ள தாய் நாட்டின் பிரஜைகள் நாம்.

20 பேர் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி, 06 பேர் சந்திக்க அனுமதி, 05 பேர் சந்திக்க அனுமதி.. எத்தனை வாக்குறுதிகள்.. தேர்தலின் போது அரசியல்வாதிகள் அள்ளி கொட்டுவார்கள் என தெரியும்.. அதனால் நாம் அவர்களை நம்பவே இல்லை.. ஆனால், அரச அலுவர்களாக, உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளே, உங்களை நம்பினோம்.. இப்போது நீங்களுமா?

உங்களை எல்லாம் மதித்து, கௌரவித்து.. நம் பாதுகாப்பின் அரண்களாய் நம்பி இருந்தோமே.. என எண்ணும்  போதே, அவமானம் உடம்பை கூனிக்குறுக செய்கின்றது. இன்று ஜனாதிபதி போய் விடுவார்.. வந்த வாலுகள் நிழலாய் தொடர்ந்திடும்.. நீங்கள் எம்மோடு நிற்க வேண்டியவர்கள் அல்லவா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு எம்மை ஏறிட்டு பார்க்கப்போகின்றீர்கள்.. ஓஹ்.. உங்களுக்கு தான் மனம் என்றொன்றே இல்லையே!

Shame on you Mr. President.. வாழ்க்கையில் மாறா வடுவொன்றை ஒவ்வொரு புத்தளம் வாழ் நெஞ்சிலும் ஏற்படுத்தி சென்றுள்ளீர்.. இனி எந்த கையும் உமக்கு புள்ளடி இட துணியாது.. ஒரு துணிவில்லா ஆத்மாவை தலை மகனாய் தெரிவு செய்ததற்கு நாம் அனுபவிக்க தான் வேண்டும். அனுபவம் தரா அறிவை வேறு எதுவும் தராது.

போராடுவோம்.. போராடுவோம் இறுதி வரை போராடுவோம்.. இன்னுமின்னும் வீருண்டு எழ எமக்கு சந்தர்ப்பம்.அளிக்கும் நிகழ்வுகளே இவை!

எம் ஊரின் உப்பின் பெறுமதி யாருக்கு புரியாவிட்டாலும் இம்மண்ணில் பூத்த ஒவ்வொரு ஆத்மாவும், மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்று தெரிந்திருக்கும் ஒவ்வொரு இரத்த துளியும்… போராடும். நாம் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே செல்கின்றோம். எம் தோள்களின் வலு அதிகரித்தே செல்கின்றது.

நாம் எமது அடுத்த செயற்பாட்டிற்காய் ஆர்வமுடன் காத்திருக்க பாதையமைத்த நாளே, நீ வரலாற்றில் மிக அழுத்தமாய் எழுதப்படுவாய்!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All