Puttalam Online
current

இலங்கையை சைக்கிளில் வலம்வரும் புத்தளத்தின் சாதனை வீரர்கள்

  • 16 April 2019
  • 803 views

(Mohamed Muhsi)

புத்தளம் இளைஞர்கள் சாமிஹ் ரஸீம், நபீஹ் மஹ்மூத் முனீர் ஆகியோர் இலங்கையை வலம்வரும் துணிச்சல் மிகு சைக்கிள் சவாரியினை அண்மையில் முன்னெடுத்தனர்.

சாமிஹ் ரஹீம் புத்தாக்க சிந்தனை, புதுமைகளின் பால் அக்கறை, தன்னம்பிக்கை, துணிச்சல் என்ற பண்புகள் கொண்ட ஆளுமை. புத்தளம் சாஹிரா கல்லூரியில் க. பொ. த. உ/த பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் கற்றவர்.

அவரது நண்பர் நபீஹ் மஹ்மூத் முனீர் புத்தளம் சாஹிரா கல்லூரியில் க. பொ. த. சா/த பயின்று, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் க. பொ. த. உ/த விஞ்ஞானப் பிரிவில் கற்றவர். அமைதியான அசாதாரன துணிவு மிக்க ஆளுமை.

இருவரும் புத்தளம் நகரிலிருந்து 10.4.2019 புதன்கிழமை பி. ப. 5.00 மணிக்கு இரு துவிச்சக்கர வண்டிகளில் புறப்பட்டு 11.4.2019 வியாழன் அதிகாலை 2.00 மணிக்கு கொழும்பு தெஹிவலையை அடைந்தனர். அங்கிருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்ட அவர்கள் இருவரும் இரவு 10.00 மணிக்கு மாத்தறையை அடைந்தனர். அவர்கள் 12.4.2019 வெள்ளி காலை 6.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு கதிர்காமம் போய்ச் சேர்ந்தனர்.

13.4.2019 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் இரவு 9.00 மணிக்கு அக்கறைப்பற்றை சென்றடைந்தனர். 14.4.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் கிண்ணியாவுக்கு இரவு 9.00 மணிக்கு போய் சேர்ந்தனர். 15.4.2019 திங்கட்கிழமை அங்கிருந்து புல்மோட்டை சென்று, அதனை கடந்து முல்லைத்தீவு போய், அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு இரவு போய் சேர்ந்தனர்.

16.4.2019 செவ்வாய்க்கிழமை யாழில் இருந்து மன்னார், தலைமன்னார் பயணமாகும் அவர்கள் 17.4.2019 புதன்கிழமை ஒரு வார சைக்கிள் சவாரியின் பின்னர் மீண்டும் புத்தளம் திரும்பவுள்ளனர்.

19 வயதுடைய இவ்விரு இளைஞர்கள் தமது இப்பயணத்தின் போது நிச்சயம் பல விடயங்களை கற்றிருப்பர்.பல அனுபவங்களைப் பெற்றிருப்பர், பல ஆளுமைகளை சந்தித்திருப்பர். அக்கரைப்பற்றில் அங்கு சமய சமூக நிகழ்வுக்காக சென்றிருக்கும் இவர்களின் உறவுகளை சந்திக்கக் கிடைத்தது இவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்வில் புதுமைகளை ரசிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் ஏராளம்.

அது போல் இவர்களையும் நாம் காண்கிறோம். ஆனால் இவர்கள் தமது இந்த சைக்கிள் சவாரி பற்றி எத்தகைய பிரச்சாரமும் செய்யாததே இவர்களிடம் காணப்படும் தனித்துவமான பண்பாகும். என்றாலும் நாம் இவர்களது இந்த துணிச்சல்மிக்க செயலை வரவேற்போம். வாழ்த்துவோம். பாராட்டுவோம். கெளரவிப்போம்.

“சாமிஹ் ரஸீம், நபீஹ் மஹ்மூத் முனீர்” புத்தளத்தின் சைக்கிள் சவாரி சாதனை வீரர்கள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All