Puttalam Online
other-news

மரபணு பரிசோதனைகள் மூலம் அனைத்தும் உறுதியாகின

  • 21 May 2019
  • 133 views

கடந்த ஏப்ரல்  21 ஆம் திகதி உயிர்த்தெழு ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய அனைவரினதும் அடையாளங்கள் மரபணு பரிசோதனைகள்  மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதன்பிரகாரம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் தேசிய தெளஹீத் ஜாமாஅத் (NTJ)  தலைவரான மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான் ஆவார். சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் அவருடைய பிள்ளையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட குருதி மாதிரிகளூடாக மரபணு சோதனை நடத்தப்பட்டு  இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்களில் மற்றுமொருவர் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம்  அஹமட் ஆவார்.  கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் ஆவார். இவர்கள் இருவரும் இப்ராஹிம் என்பவரின் மகன்களாவர். இவர்கள் இருவருடைய மரபணு மாதிரிகளும் இப்ராஹிம் என்பவரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்பது அவருடைய மனைவி மற்றும் பிள்ளையின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த அலாவுதீன் அஹமட் முவாத் என்பவரின்  மரபணுவும் அவருடைய பெற்றோர்களின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளன.

நீர்கொழும்பு  கட்டுவப்பிட்டிய சென் செபஸ்தியன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியது அச்சி மொஹமது மொஹமது அஸ்துன் என உறுதியாகியுள்ளது. இந்த தற்கொலைக் குண்டுதாரியின் பெற்றோர்களின் குருதி மாதிரிகளைப் பெற்று மரபணு சோதனை நடத்தப்பட்டதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மொஹமட் நசார் மொஹமட் அசாத் என்பவர்  மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்குள் (Zion Church) தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது அவரின் தாயாரின் மரபணு சோதனையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெஹிவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய அப்துல் லதீப் ஜமில் மொஹமட் என்பவருடைய மரபணு சோதனை அவரின் பிள்ளையின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெமட்டகொட பகுதியில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்த பெண் பாத்திமா ஜெப்ரி , ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் என்பவரின் மனைவி என உறுதி செய்யப்பட்டுள்ளது.தெமட்டகொட வீட்டில் தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்த மூன்று பிள்ளைகளும் இவர்களுடையவை என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All