இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ம் திகதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19 ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா,அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை பொதுத்தேர்தலும் நடந்தது. அத்துடன் தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன. தேர்தல் முடிவுகள் உடனே வெளியிடப்பப்படும். இத்தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அடுத்த பிரதமர், மோடியா, ராகுல் காந்தியா அல்லது வேறொருவரா என்பது நாளை தெரிந்துவிடும். தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்துகணிப்புக்கள் 14 இல், 12 கருத்துகணிப்புக்கள் தற்போதைய பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களுக்கு மேல் பிடித்து, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளன. ஆனால் கருத்துகணிப்புக்கள் பொய்யானவை எனக்கூறிவரும் எதிர்க்கட்சிகள் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றன. கூட்டு ஆட்சி அமைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
கூட்டணி ஆட்சி ஏற்படும் பட்சத்தில் பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாயாவதி, மம்தா, சந்திரபாபு நாயுடு உட்பட சில மாநில கட்சி தலைவர்களும் காத்திருக்கின்றனர். யார் ஆசை நிறைவேற போகிறது நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது நாளை தெரிந்து விடும்.
ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தி. மு. க. ஆதரவளிக்கின்றது. சென்னை ராயபுரத்தில் நடந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கருணாநிதியின் மகன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மத்திய அரசாங்கத்தில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி அமையும். ராகுல் அடுத்த பிரதமர் ஆவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். கருத்து கணிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. மக்கள் கணிப்பு தான் உண்மையான கணிப்பு. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. மோடியின் கட்சிக்கு ஆதரவளிக்கின்றது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்று பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். “மூன்று புதிய முகங்களான கமல்ஹாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் எல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. மீண்டும் மோடி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்” என்று தமிழிசை கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி நடப்பு மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் தான் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட்டால் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுதும் செல்ல முடியாமல் போய்விடும் என்பதால்தான் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தார் கமல்ஹாசன்.
லோக்சபா தேர்தல் முடிவுகள், நாளை வெளியாக உள்ள நிலையில், கோடிக்கணக்கில் பணம் செலவழித்த வேட்பாளர்கள் தங்கள் வெற்றிக்காக கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஜெயிக்கப் போவது யார் என தொகுதி வாரியாக, ‘பெட்டிங்’ என்ற சூதாட்டமும் களைகட்டி உள்ளது. பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளனர். தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் உள்ளனர். பலர் கடன் வாங்கியும் சொத்துக்களை அடமானம் வைத்தும் பணம் செலவழித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் வெற்றிக்காக கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அனைத்து தொகுதிகளிலும் நாளை காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 8:30 மணிக்குப் பிறகு கட்சிகளின் முன்னணி நிலவரம் தெரிய வரும். பகல் 12:00 மணியளவில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதும் யார் பிரதமர் என்பதும் தெரியவரும். நாளை இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அளிப்பதற்காக யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ய கூகுள் இந்தியாவும், பிரசார் பாரதியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.