Puttalam Online
other-news

மீண்டும் பிரதமராகிறார் மோடி. தமிழகத்தில் தி மு க பெரும்பான்மை

  • 24 May 2019
  • 76 views

இந்தியாவின் பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன.  இதில் 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ஏனைய  2 இடங்களுக்கு  ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும்.  91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டு தேர்தலாகும். அந்த  வகையில் இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி மே 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்தன.

இந்த தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதா, ராகுல் காந்தியின் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அடி கூடிய  437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இம்முறை  இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, நேற்று  (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு  எண்ணிக்கை ஆரம்பமாகியது. முடிவுகளும் வெளிவரத்தொடங்கின. காலை 8.30 மணிக்கு அதாவது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பெரும்பாலான முடிவுகள் வந்துவிட்டன. அதாவது 542 தொகுதிகளில்  533 தொகுதிகளின்  முடிவுகள் வெளிவந்துள்ளன.  அந்தவகையில் பாரதிய ஜனதா கூட்டணி 350 இடங்களில் வெற்றியீ ட்டி உள்ளது. 1 தொகுதியில்  முன்னணியில் உள்ளது. அதன் முடிவு விரைவில் வெளிவரும். ராகுல் காந்தியின் காங்கிரஸ் கூட்டணி 83 இடங்களில் வெற்றியீட்டியுள்ளது. 2 இடங்களில் முன்னணியில் உள்ளது. ஏனையவை 100 தொகுதிகளில்  வெற்றி. 6 தொகுதிகளில்  முன்னணி வகிக்கின்றன.

அறுதிப்பெரும்பான்மை மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது. எனவே இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியாவின் பிரதமராக  இருக்கிறார் மோடி. தேர்தலுக்கு பின்னைய பெரும்பாலான கருத்துக் கணிப்புக்களும் இதனையே தெரிவித்தன.  எதிர் வரும் 26 ஆம் திகதியன்று   நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக டில்லி பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியின் மகன்  ராகுல் காந்தி வயநாடு, அமேதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவற்றுள் வயநாடு தொகுதியில் மட்டுமே வெற்றியீட்ட முடிந்தது. நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார். அங்கு 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்று 4.75 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ராஜிவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தி தான் போட்டியிட்ட ராபரேலி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் அமேதி தொகுதியில் ராகுல் குடும்பத்தை சேர்ந்தவர்கள்  வேட்பாளர்களாக நிற்பது வழக்கம். இங்கு 1980 இல் இந்திரா காந்தியின் மகன்  சஞ்சய் காந்தி  தெரிவு  செய்யப்பட்டார். விமான விபத்தில் இவரது மறைவுக்கு பின்னர் 1981 ல் சஞ்சய் காந்தியின் சகோதரர் ராஜிவ் காந்தி  தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து 1984, 1989, 1991 ஆகிய வருடங்களில் ராஜிவ் வெற்றி பெற்று எம்.பியானார். 1996 ல் ராகுல் குடும்ப நண்பர் கேப்டன் சதீஷ்சர்மா எம்பியானார். 1998 ல் ஒரு முறை பா.ஜ.வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து 2004, 2009, 2014 ல் ராகுலே எம்.பி. யானார். இந்த முறை ராகுலை தோற்கடித்து ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல்கள நிலவரங்கள் பிரகாரம் கருணாநிதியின் தி.மு.க. பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது. இங்கு அணைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகியுள்ளன. தி.மு.க. 37 இடங்களில் வெற்றியீட்டிய நிலையில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றியீட்டியுள்ளது.   38 தொகுதிகளில் 37 திமுக வசம் சென்ற நிலையில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஓபிஎஸ் எனப்படும் பன்னீர்செல்வத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.

தமிழகத்தில் இடம்பெற்ற சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம்  தி.மு.க. 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க. 9 தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All