Puttalam Online
uncategorized

ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் மாநாட்டில் நகரபிதா பாயிஸ்

  • 13 July 2019
  • 171 views

முஸ்லிம்களாகிய எங்களுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதற்கோ அல்லது இதுதான் இஸ்லாம் என்று கூறி அதனை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திப்பதற்கோ ஞானசார தேரருக்கோ அல்லது வேறு எவருக்கோ அதிகாரமும் இல்லை உரிமையும் இல்லை. நாம் எந்த மார்க்கத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்பதும், எந்த கொள்கையை – எவ்வாறு நாம் பின்பற்ற வேண்டும் என்பதும் எங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிட எவருக்கும் அனுமதிக்க மாட்டோம்.

கடந்த 09/07/2019 அன்று ஒடிடோரியத்தில் காசிமியா அரபிக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா ஆலிம் அவர்களின் தலைமையில் நடந்த சர்வ மத மாநாட்டில் புத்தளம் நகரபிதா கே. ஏ பாயிஸ் இவ்வாறு முழங்கினார். புத்தளத்தில் இயங்கும் 39 அரபு மதரஸாக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த மாநாட்டில் மதரஸாக்களில் அதிபர்களும் பெளத்த,
ஹிந்து,கிறிஸ்தவ, மத குருமார்களும்,பொலிஸ், பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளும் அனைத்து இனங்களின் புத்திஜீவிகள், கல்விமான்கள், நகரசபை உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. நவவி அவர்கள் உட்பட  சில அரசியல் மற்றும் ஊடக பிரபலங்களும் இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய நகர பிதா பாயிஸ் கூறிதாவது.

கடந்த காலங்களில் இந்த மண்ணில் வாழும் அனைத்து இனங்களையும் நாம் மதித்து கண்ணியமாகவும் விட்டுக்கொடுப்புடனும் வாழ்ததன் காரணமாகவே இந்த நாட்டில் எவ்வளவோ இனவாத பிரச்சினைகள் வந்தபோதும் எமது மக்கள் சிங்களவர்,தமிழர்,முஸ்லீம் என்ற பேதமின்றி நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்கின்றனர். மலேசியா, பாகிஸ்தான்,சவுதிஅராபியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதால்
நாம் அந்த நாடுகளை முஸ்லீம் நாடுகள் என்று ஏற்றுக் கொள்கின்றோம், அதேபோல் ஸ்ரீ லங்காவில் பெளத்தர்கள் அதிகமாக இருப்பதால் இதனை நாம் பெளத்த நாடு என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் சிறுபான்மையாக வாழக்கூடிய எங்களுக்கு இந்த நாட்டில் என்ன உரிமை இருக்கின்றது? இந்த நாட்டில் நாங்கள் யார்? எங்களது வகிபாகம் என்ன?
என்பதை இந்த நாடு தெளிவுபடுத்த வேண்டும்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஐந்து வருடம் தொடர்ந்து வாழ்பவருக்கு பிரஜா உரிமை கொடுக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர்கள் அந்த நாட்டு பாஸ்போட்டுடன் இந்த நாட்டிற்கு வந்து நாங்கள் அமெரிக்க பிரஜை, பிரித்தானிய பிரஜை ஜெர்மனி பிரஜை என்று கூறுகின்றனர். அப்படி என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றை கொண்ட, இந்த மண்ணிலே பிறந்து இந்த மண்ணிலே மரணிக்கும் நாம் யார்?  இந்த நாட்டில் எமக்குரிய பங்கு என்ன?  என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

நாங்களும் இந்த நாட்டவர்கள் என்று இந்த நாடும் பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொண்டால்தான் சிறுபான்மை மக்களுக்கு இந்த நாட்டில் அன்புவரும், இந்த நாட்டை நேசிக்க ஆரம்பிப்பார்கள், இந்த நாட்டின் பாரம்பரிய கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பார்கள். இல்லையென்றால் அல்லது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டால் சிறுபான்மை மக்களின் நாட்டுப்பற்றை 100% எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? முஸ்லிம்கள் தாம் வாழும் நாடுகளின் கலாச்சாரங்களை மார்க்கத்திற்கு விரோதமில்லாத முறையில் தமது மத காலாச்சாரங்களுடன் சேர்த்து பின்பற்ற வேண்டும். இந்தோனேசியா உலகின் அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடு.
அங்கு ஸலாம் சொல்லும்போது இரு கைகளையும் கூப்பி ஸலாம் சொல்லுவார்கள் இது அவர்களின் கலாச்சாரம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானசார தேரர் சொல்வதுபோல் நாங்கள் சூபி முஸ்லிமாக வாழ முடியாது. அப்படியான கொள்கைகளை பின்பற்றக்கூடியவர்கள் புத்தளம் பகுதியில் சொல்லும்படியாக யாரும் இல்லை. நாட்டில் ஒரு சில இடங்களில் இந்த கொள்கை இருக்கின்றது என்பதற்காக நாமும் அதனை பின்பற்ற வேண்டிய எந்த தேவையும் எமக்கு இல்லை.
பெளத்த மதத்திலே சூனியம் செய்வினை காய் வெட்டுதல் மந்திரித்தல் என்பதற்காக ஒரு சிலர் தேவாலய வழிபாடுகளை பின்பற்றுகின்றனர். அதுபோல்தான் முஸ்லிம்களில் இந்த சூபி குழுவினர். அவர்களின் கொள்கை தான் சரியானது என்றோ அவர்களை பின்பற்றினால்தான் இந்த நாட்டில் இனவாதிகள் எம்மை சம்ரதாய முஸ்லிம்கள் என்று ஏற்றுக்கொள்வார்கள் என்றால், நாம் அதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடவும் தயாராகவே உள்ளோம் என்றும் ஆணித்தரமாக குரல் எழுப்பினார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக GA (மாவட்ட செயலாளர்) அவர்களும், கெளரவ அதிதியாக நகரபிதா பாயிஸ் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சிங்கள மொழியில் பேசியது குறிப்பிடத்தக்கது.
நகரபிதா தமது சிங்கள உரைக்கு மத்தியில் தமிழிலும் பேசினார்.

அதே நேரம் தலைமை தாங்கிய மதிப்பிற்குரிய அப்துல்லா ஆலிம் அவர்கள் மட்டும் தமிழுக்கு உயிர் கொடுத்து தனித் தமிழில் உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது. பல விடயங்களை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்திய ஹஸரத் மதரஸா என்பது தமிழில் பாடசாலை என்றும், சரிஆ என்பது தமிழில் சட்டம் என்றும், அல்லாஹ் என்பது தமிழில் கடவுள் என்றும் அர்த்தம். இங்கு அரபு மொழி தெரியாமையே பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டினார். இந்த நாட்டின் அனைத்து மதரஸாக்களின் தலைவரான ஒரு உலமா உரையாற்றும்போது மேலைநாட்டு உடையை பெரும்பான்மை பெண்கள் ஒரு ஸ்டைளுக்காக அணிய முடியும் என்றால், முஸ்லிம் பெண்கள் தமது பாதுகாப்பிற்காக அபாயா அணிவதில் என்ன தப்பு?
அவரவர் உடையை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்  சிங்கள மக்கள் அணியும் உடை பெரும்பாலும் அது சிங்கள கலாச்சார உடை கிடையாது என்றும் குறிப்பிட்ட அவர் அபாயா என்பது முஸ்லிம்களுக்கு கட்டாயம் இல்லை என்றும் அல்லாஹ் எமக்கு கட்டளையிட்டதுபோல் மறைக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளை மறைப்பதே கட்டாயமானது என்று குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளர் பேசும்போது அரபு மொழி இந்த நாட்டின் தடை செய்யப்பட மொழி அல்ல என்றும்
என்றாலும் அங்கீகரிக்கப்பட்ட மூன்று மொழிகளுக்கு சமனாக சில முஸ்லீம் பிரதேசங்களில் அரபு மொழியும் இருப்பதாகவும் அதனை குறைத்துக்கொள்வது தற்போதைய கால சூழலுக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். அத்துடன் அரபு மொழி பயன்படுத்தும் விடயத்தில் முஸ்லிம்களின் மனதை நோகடிக்கும் எந்த ஒரு முன்னெடுப்பையும் இந்த மாவட்டத்தில் தான் செய்யவில்லை என்றும், நான் அதிகாரத்தில் இருக்கும் வரை இந்த புத்தளத்தில் இனவாத முரண்பாடுகளுக்கு இடம் கொடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இங்கு போலிஸ் அத்தியட்சகர் உரையாற்றும்போது இந்த மண்ணில் அனைத்து இன மக்களும் பேதங்கள் இன்றி வாழ்வது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும், இந்த நிலையை உருவாக்கிய தலைவர்களை தான் மதிப்பதாகவும், தான் அதிகாரத்தில் இருந்து விலகும்வரை இந்த பிரதேசத்தில் இனவாத செயல்பாடுகளுக்கு துளியளவும் இடம் கொடுக்கப்போவதே அல்ல என்றும் அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்கும் விடயத்தில் தான் பின்னிற்கப் போவதில்லை என்றும், அமைதியான இந்த மண்ணில் அடாவடித்தனங்களுக்கு இனி ஒருபோதும் இடமில்லை என்றும் கண்டிப்பான குரலில் பேசினார்.

உளவியல் விரிவுரையாளர் மன்சூர் அவர்கள் உரையாற்றும்போது. இந்த நாட்டின் முஸ்லிம்களின் வரலாறு, சிங்கள மக்களுடனான பிரிக்க முடியாத உறவு, ஊடுருவிய பிற நாடுகளின் கலாச்சாரங்கள், பிரிவினைவாத நோக்கிலான சிந்தனைகள் என்பவற்றை ஆக்கப்பூர்ர்வமான முறையில் தெளிவுபடுத்தினார்.

ராவய பத்திரிகையின் பணிப்பாளர் விக்டர் ஐவன் அவர்கள் உரையாற்றும்போது இங்கு நடப்பது அனைத்தும் அரசியல் நாடகம் என்றும்,  மக்கள் சில தீய அரசியல் சக்திகளின் அதிகாரப்பசிக்கு இரையாகுவதாகவும்,  இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் இனவாத சிந்தனைகள் இல்லை என்றும்
குறிப்பிட்டதோடு, அரசியல் சம்மந்தமான சில ஆழமான கருத்துக்களையும் தனது நீண்ட நேர உரையில் மக்களுக்கு தெளிவு படுத்தினார்.தவிர இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல பிரதிநிதிகளும் இங்கு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் உரையாற்றினர்.

Thanks

Uwais Abusaleh


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All