கொழும்பு மாநகரில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்த கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ், அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்தில் இந்தக் கழிவுகள் இன்று (11) அதிகாலை கொட்டப்பட்டுள்ளன. கழிவுகள் கொண்டுசெல்லப்பட்ட லொறிகள் அறுவைக்காட்டுப் பகுதியை சூழவுள்ள மக்களால் திருப்பி அனுப்பப்பட்டமையே இதற்கான காரணமாகும். கழிவுகள் ஏற்றிச்செல்லப்பட்ட லொறிகளைப் புத்தளத்தில் இடைமறித்து எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கழிவுகள் ஏற்றிச்செல்லப்பட்ட லொறிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் நான்காம் கட்டைப் பகுதியிலிலிருந்து புத்தளம் நகர் வரை பிரதேச மக்கள் சென்றனர். இதனால் அந்த லொறிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனையடுத்து, அந்த லொறிகள் திருப்பியனுப்பப்பட்டதுடன், அதிகாலை ஒரு மணியளவில் 4 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரின் விசேட பாதுகாப்புடன் குறித்த லொறிகள் மீண்டும் பயணித்தன.
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சேரும் கழிவுகளைத் தடையின்றி அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது. இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பிரதேச மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வகைப்படுத்தப்படாத கழிவுகளை பொறுப்பேற்கப் போவதில்லை என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நானாயக்கார கூறியுள்ளார். அத்தோடு, பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Thanks: News first