Puttalam Online
politics

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்? பாகம்- 8

  • 18 October 2019
  • 235 views

ரணில் அரசியலில் பலயீனப் படுத்தப்பட்டது யாரால்? எவ்வாறு?
==============================
வை எல் எஸ் ஹமீட்
2005ம் ஆண்டு புலிகள் தேர்தல் பகிஷ்கரிப்புத் தீர்மானத்தை எடுத்திருக்காவிட்டால் அன்று ரணில் ஜனாதிபதியாகிருப்பார். வரலாறு மாறியிருக்கும். இறைவன் நாடவில்லை.
யுத்தம் வெற்றித் திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முதலாவதாக மஹிந்த நடாத்தினார். முஸ்லிம், தமிழ் கட்சிகளின் பெரும் தயவுடனான தேர்தலின் வெற்றியை தனது தனிப்பட்ட வெற்றியாக தெற்கில் பிரச்சாரம் செய்தார் மஹிந்த.
யுத்தவெற்றிப் பிரச்சாரமும் கிழக்கு மாகாணசபையே மஹிந்த வெற்றிகொண்டுவிட்டார்; என்ற பரப்புரையும் மஹிந்தவின் செல்வாக்கை உயர்த்தியது. அதிலிருந்து ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரேயடியாக நடத்தாமல் கட்டம் கட்டமாக நடாத்தினார்.
ஒவ்வொரு கட்டத்தேர்தலுக்கும் யுத்தத்தில் படையினரின் முன்னேற்றம் குறித்து கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு கட்டத்தேர்தலுக்கு கிளிநொச்சியை படைகள் நெருங்கப் போகின்றன; என்ற செய்தியையே பல நாட்கள் அரச ஊடகங்களில் படாடோப விளம்பரம் செய்யப்பட்டது.
மறுபுறம் ஐ தே கட்சிக்குள் உள்வீட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவதில் மஹிந்த வெற்றிகண்டார். யுத்த வெற்றியை நோக்கிய அலையை மூலதனமாக எடுத்து மாகாணசபைத் தேர்தல்களை படிப்படியாக ஆளும் கட்சி வென்றது; என்றதன் பொருள் எதிர்க்கட்சி தோற்றது; என்பதுதானே!
யுத்த வெற்றியின் முதல் பங்காளி, கருணாவை வெளியேற்றி புலிகளை உடைத்த ரணில்; இரண்டாவது யுத்தத்தை மிகவும் தைரியமாக தலைமை தாங்கி வழிநடாத்திய முன்னாள் ராணுவத்தளபதி, மூன்றாவது புலிகள் தொடர்பாக இராணுவத்திற்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருந்த கருணா.
நாலாவது பாதுகாப்பு செயலர்; என்பதற்கும் அப்பால் ஜனாதிபதியின் சகோதரர் என்ற வகையில் மேலதிக அதிகாரத்துடன் ராணுவத்திற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கிய கோட்டா. ஐந்தாவது, ஜனாதிபதி என்றமுறையில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாது; ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய மஹிந்த.
இவ்வாறான ஒரு கூட்டு வெற்றியை தனது கட்சியின் அரசியல் வெற்றிக்காக தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொண்டார் மஹிந்த.
மறுபுறம், ஒவ்வொரு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐ தே கட்சிக்குள் இருந்துகொண்டு ஒரு கூட்டம் ரணிலின் தலைமையில் ஐ தே க வெற்றிபெறாது; ராணில் தலைமைத்துவத்தைவிட்டு வெளியேறவேண்டும்; என கோசமெழுப்புவார்கள். அத்தோடு 2005 ஜனாதிபதித் தேர்தலில் இருந்து ஒவ்வொரு கட்டமாக நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களையும் ஒவ்வொன்றாகக் கூட்டி இத்தனை தேர்தல்களை ரணிலின் தலைமையில் ஐ தே க தோற்றிருக்கின்றது; என்று கணக்குக்குக் காட்டுவார்கள்.
ஒரு புறம் வெற்றியை நோக்கி நகரும் யுத்தப்பிரச்சாரத்திற்கு மத்தியில் ஐ தே கட்சிக்காரர்களே ஐ தே க வெல்லாது; என்று சொல்லும்போது கட்சி எவ்வாறு வெற்றிபெறும். அதன்பின் அவ்வாறு கோசமெழுப்பியவர்கள் மஹிந்தவுடன் இணைந்துகொள்வார்கள்.
இவ்வாறு ஐ தே கட்சிக் காரர்களைக்கொண்டே ஐ தே கட்சியைத் தோற்கடித்தார் மஹிந்த. இந்த வரிசையில் ஐ தே க இலிருந்து வெளியேறியவர்கள்தான் கரு ஜயசூரிய, நவீன் திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க போன்றோரெல்லாம்.
இந்தப் பின்னணியில் யுத்த நிறைவைத் தொடர்ந்து இடம்பெற்ற 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை ஐ தே க யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றிபெற முடியாது. ரணில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தால் அதையே காரணமாக வைத்து அவரது தலைமைத்துவத்திற்கு இலக்குவைத்து இன்றைய ஶ்ரீ ல சு கட்சிக்கு ஏற்பட்ட, பரிதாப நிலையை ஐ தே கட்சிக்கு ஏற்படுத்தியிருப்பார் மஹிந்த.
எனவே, ரணில் யுத்தத்தை வென்றெடுத்த முன்னாள் ராணுவத்தளபதியைத் தேர்தலில் நிறுத்தியதன் மூலம் தனது தலைமைத்துவக் கதிரையைப் பாதுகாத்துக்கொண்டார். அதன்மூலம் ஐ தே கட்சியும் பாதுகாக்கப்பட்டது.
இவ்வாறு அடுத்தடுத்துவந்த பொதுத் தேர்தல், மாகாண, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் ஐ தே க தோல்வியைத் தழுவியது.
எனவே, ஐ தே க யின் தொடர் தோல்விகளுக்கு அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களே ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் ரணில் தலைமையில் கட்சி வெல்லாது; என்ற கோசமும் யுத்தவெற்றியை மிகவினைத்திறனாக சந்தைப்படுத்திய மஹிந்தவின் தந்திரமும் காரணமாகும்.
தலைமைத்துவப் போட்டி
———————————
ரணிலின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்காக அவ்வப்போது ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களில் சஜித்தும் களத்தில் குதித்தார். சிலரின் தூண்டுதலின்பேரில் தலைமைத்துவத்தை தானே கைப்பற்றிக்கொள்ள பல தடவைகள் முயற்சி செய்தார்; ஆனாலும் கைகூடவில்லை.
நிலைமை மாற்றம்
————————-
காலத்தின் நகர்வு நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்தும் யுத்தவெற்றியை சந்தைப்படுத்தவும் முடியாது. ரணிலின் தலைமைத்துவத்தை இலகுவில் மாற்றவும் முடியாது; என்பதை ஆட்சியில் இருந்த மஹிந்த தரப்பு உணர்ந்தது.
ஆட்சிக்காலம் நீடிக்கும்போது இயல்பாக மக்களுக்கு ஏற்படும் சலிப்பு, அதேநேரம் அவ்வாட்சியில் இடம்பெற்ற வெள்ளைவேன், காணாமலாக்கப்படுதல், ஊடக சுதந்திர மறுப்பு, விலைவாசி உயர்வு போன்ற பல அம்சங்கள் எதிர்காலத் தேர்தல்களை ஐ தே கட்சிக்கு சாதகமாக மாற்றலாம்; என்ற யதார்தத்தை உணர்ந்த ஆட்சித் தரப்பு, மக்களின் சிந்தனை அத்திசைகளில் செல்லாமல் இருப்பதைத் தடுத்து அவர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்கு அடையாளம்கண்ட உத்திதான் இனவாதமாகும்.
இந்நாட்டில் இனவாதம் இலகுவாக சந்தைப்படுத்தக் கூடிய மிகவும் கிராக்கியான ஒன்று; என்பதை சுதந்திர இலங்கையின் வரலாறு பலதடவைகள் ஏற்கனவே நிரூபித்திருக்கின்றது. அன்றைய ஐ தே கட்சியை உடைத்து ஶ்ரீ சு கட்சியை பண்டாரநாயக நிறுவி ஆட்சியைப் பிடிக்க கைகொடுத்த பெரும் ஆயுதம் இனவாதமாகும். அதன் பிரதான அம்சம் தனிச் சிங்கள சட்டமாகும்.
அதன் விளைவுகளை 30 ஆண்டுகால யுத்தத்தில் கண்டோம். மட்டுமல்ல, அது இன்னும் பல வடிவங்களில் தொடர்கிறது. குறிப்பாக “சுயபாசை மூலம் கல்வி” என்ற திட்டம் ஆங்கிலக் கல்விக்கு சாவுமணி அடித்ததனால் இன்றுவரை பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
மட்டுமல்ல, இனங்களுக்கிடையில் பொதுவான புரிந்துணர்வு மங்கிப் போனதற்குக் காரணம் பொதுப் பாசை தெரியாமல் போனதாகும்.
ஆனாலும் அரசியல்வாதிகளின் இலக்கு வெற்றிபெற்றது. தோல்வியடைந்தது மக்கள். இல்லையெனில் அன்று இலங்கையைப்போல் சிங்கப்பூரை கட்டியெழுப்ப லீகுவான் யூ ஆசைப்பட்டார். இன்று சிங்கப்பூர் எங்கே? நாம் எங்கே? இவற்றிற்குக் காரணம் வடிகட்டிய இனவாதமும் அதன்விளைவாக தோற்றுக்கப்பட்ட யுத்தமும்.
ஆனாலும் இலங்கை மக்கள் பாடம் படிப்பதில்லை. இனவாதத்தில் அவர்களுக்கு இருக்கின்ற சுவை தாம் வாழ்க்கையில் தோற்க அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கு ஆதரவளித்து அவர்களை வாழவைப்பவர்கள்.
இந்தப்பின்னணியில்தான் 2010ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் மஹிந்த தரப்பு இனவாதத்தைக் கையிலெடுக்க முனைந்தது.
முஸ்லிம்களின் பக்கம் திரும்பியதேன்?
————————————————-
சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இனவாதத்தின் பிரதான இலக்காக தமிழர்தான் இருந்துவந்தார்கள். 30 வருட யுத்தத்தில் தமிழர்களை கசக்கி சாறுபிழிந்தபின் தொடர்ந்தும் தமிழருக்கெதிரான இனவாதத்தில்
பேரினவாதிகள் ரசம் காணமாட்டார்கள்; என்பதை மஹிந்த தரப்பு உணர்ந்தது. மட்டுமல்லாமல் சர்வதே சமுகமும் யுத்தமுடிவைத் தொடர்ந்து தமிழர் விடயத்தில் அதீத அக்கறை காட்டியது.
எனவேதான் புதிய இலக்காக முஸ்லிம்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
( தொடரும் இன்ஷாஅல்லாஹ்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All