Puttalam Online
art-culture

ரகசியங்கள்…!

  • 24 October 2019
  • 61 views

ரகசியங்கள்…!
———–

ஓர் உயர்ந்த மலையிலிருந்து
விழுந்து சிதறும் நீர் துண்டுகள் போல்….

ஆகாயத்தில் இருந்து
அடியற்று விழுகிறது
ஒரு பிழை செய்யும் ஆத்மா…

தவறுக்கு தலைகுனியும் உடலைவிடவும்…
அசுத்தத்தால் குழையும்
உள்ளத்தின் உறுதி அவமானத்திற்குரியது…

மனதின் மரணத்தை
யாரும்
நல்லடக்கம் செய்வதில்லை…

ஆயினும் அந்த ஜனாசாவின் நாற்றத்தை…
பழகும் உள்ளங்கள் உணர்கின்றன..

“fபஜ்ர்” இல்லாமல் விடியும்…
உனது அதிகாலை bed இல்…

பொய் சொல்லிப் பிரியும்
உதடுகளின் இடுக்கில்…

நெஞ்சில் முட்செடியுடன்…
நாக்கில் நந்தவனம் காட்டும் பொழுதுகளில்…

அந்தரங்க ஆழ்மனதை
கண்ணுக்குத் தெரியாத ஒரூ கத்தி வெட்டுகிறது….

திரைப்படக் காமம்
தின்று துப்பும் கண்களின் வழியே…
கல்பின் ஒழுக்கம் கறை படிகிறது…

புழுக்கள் கடித்து வீங்கும்
புண்ணான பாதங்களை… செருப்புகள் பாதுகாக்கும்…

உரத்துச் சுற்றும்
இரத்தத்தின் காய்ச்சலை..
பெனடோல் கட்டுப்படுத்தும்….

உனது உள்ளத்தின் கற்பை…
காக்கும் கவசங்கள்
எவற்றை எடுத்துக் கொள்கிறாய்..?

இன்றைக்கு மீன்…
நாளை இறைச்சி…
மறுநாள் முட்டை…

ஆனால்…
ஒவ்வொரு அதிகாலை
அதானிலும் கதரும் அந்த ஆத்மாவின் பசிக்கு
சில சுஜூதுகள்கூட நீ
தின்னக்கொடுக்கவில்லை…

மறுமையின் வறுமை…
மனதிலே அளக்கப்படுவது….

உருவத்தில் ஒற்றிருக்கும்…
ஒவ்வொரு மனிதப் pen drive வும்
Computer ல் பார்க்கப்படவிருப்பது…

ரகசியங்கள் ஒளித்துவைக்க…
இதயத்தைவிட வலிமையான
இன்னொரு இரும்புப் பெட்டி இல்லைதான்…

எனினும்..
மரணம் அந்தப் பூட்டை திறக்கும்…!

உலகமே அரங்கமான பொதுவெளியில்…
கதை…
பகிரங்கமாய் வாசிக்கப்படும்…!

60 kg சதைக்குள்ளிருந்து…
அந்த ஆத்மா மேடைக்கு வரும்…!

சுதந்திரத்துக்கும் சிறைக்கும் இடையிலான
ஒரு மெல்லிய நேர்கோட்டில்… சுத்தமாய் வாழப்பழகு…!

எண்ணங்களை கைது செய்து…
எப்போதும் விசாரி…

உள்ளத்திற்காகவும்
குளி…

மகிழ்ச்சியுடன்
மரணிக்க ஆரம்பி…

உள்ளம் சிறிதல்ல…!
உற்றுப்பார்க்காவிடில் சூரியனும் பெரிதல்ல…!


புத்தளம் மரிக்கார்
22-10-2019


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All