Puttalam Online
international-affairs

கண்ணீர் தேசத்தின் மக்கள் – களிப்பில் இன்று.

  • 14 December 2019
  • 474 views

பச்சை பசேல் என்கின்ற அந்த பூமியின் மக்கள், வீடிழந்து, நாடிழந்து, எரிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டும், ஈமான் இழக்காது இன்னும் இசுலாமியர்களாய், துன்பங்கள் பலவற்றை உலகில் பல் வேறு அகதி முகாம்களில் அனுபவித்துக் கொண்டு, அனுதினமும் அழுகின்றார். அவர்களின் கண்களுடன் சேர்ந்து எத்துனையோ ஈமானிய இசுலாமியக் கண்ணீர் துளிகள் வடிந்து கொண்டிருந்ததற்கு ஒரு வடிகால் விரைவில் கிடைக்கப் போகிறது இறைவன் நாடினால்!

இந்தப் பூகோளத்தில் எத்துனையோ இசுலாமிய நாடுகள் இருக்க அந்த சின்னஞ் சிறிய ஆஃபிரிக்க மண்ணில், அத்துனைக்கும் அறிமுகமில்லா, ஆரவாரமும் இல்லா நாடான காம்பியாவிற்கு தான் ரோஹிங்கிய இசுலாமியர்களின் மீது அரசியல் எல்லை ரீதியான கவலைத் தொற்றிக் கொண்டது. காரணம், அடிமைத் தனத்தின் வலியும் அகதிகளின் வலியும் என்னவென்று அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அந்தக் கருப்பின மக்களின் கண்ணீரும் இந்த ரோஹிங்கயர்களின் கண்ணீரும் ஓர் நிறம் என்பது, அதை அனுபவித்த காம்பியாவிற்கு தான் வலியின் உக்கிரம் புரிந்திருக்கிறது.

ஆம். நெதர்லாந்தின் உலக நீதி மன்றத்தில் ரோஹிங்கிய இசுலாமியர்களுக்காக உலக நீதி மன்றத்தில் வழக்கை காம்பிய அரசின் சார்பாக சட்ட அமைச்சர் அபூபக்கர் மர்ரி தம்பதாவ் வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த நேயம் மதம் சார்ந்தது மட்டும் அல்ல, மனிதம் சார்ந்தது. ஏற்கனவே ரூவாண்டாவின் மீது இதே காரணத்திற்காக (1994ல் ருவாண்டாவில் நடந்த இன அழிப்பு) உலக நீதி மன்றத்தில் அபூபக்கர் மர்ரி வழக்கு தொடர்ந்தவர் ஆவார். மனிதர்கள் மிருகங்களாக ஆட்சிக் கட்டிலில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், கண்டங்கள் தாண்டிய ரோஹிங்கிய இசுலாமியர்கள் மீதான காம்பியாவின் காதல் போற்றப்பட வேண்டியது.

யார் இந்த அபூபக்கர் மர்ரி தம்பதாவ்?!

இங்கிலாந்தில் சட்டம் பயின்று தனது குட்டி நாடான காம்பியா ஜாமிஆ என்கிற கொடுங்கோலனின் ஆட்சியில் தவித்த பொழுது அதை அகற்ற களம் கண்ட கருப்புச் சிங்கம். அதன் பின்னர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட தன் நாட்டை விட்டு வெளியேறி 2003 தான்சேனிய மனித உரிமைக் கழகத்துடன் இனைந்து ருவாண்டாவில் மனிதர்களை மிருகங்களை போன்று வேட்டையாடிய அகஸ்டின் பிஜிமுங்கிற்கு எதிராக உலக நீதி மன்றத்தில் வாதாடி 20 வருடங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுத்த மனித நேயர்.

செவ்வாய் கிழமை காம்பியாவின் சட்ட அமைச்சர் அபூபக்கர் மர்ரி தம்பதாவ், மியான்மர் பிரதமர் ஆங் சான் சூ கீயை இன்றைக்கு உலக நீதி மன்றத்தின் விசாரனைக் கூண்டில் ஏற்றி வழக்கை ஆரம்பித்து வைத்துள்ளார்.

நெதர்லாந்தில் 15 நீதி அரசர்கள் உட்பட மியான்மாரால் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதிகள் இரண்டு பேருமாக ஜெர்மனி வழக்கறிஞர் முனைவர் கிளாஸ் கிராஸ் வழக்கை ஆங் சான் சூ கீ சார்பாக சந்திக்க, காம்பியாவின் சட்ட அமைச்சர் அபூபக்கர் மர்ரி தம்பதாவுடன் பிரபலமான இலங்கை தமிழரான இலங்கை இனப் படுகொலைக்கு எதிராகப் போராடிய ஐநா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த நவநீதம் பிள்ளை கை கோர்த்துள்ளார்.

இதுவரை நடந்த மியான்மர் இரானுவத்தின், ரோஹிங்கிய இசுலாமியர்களுக்கு எதிரான அத்துமீறல்களையும், அயோக்கியத் தனங்களையும் உலக நீதி மன்றத்தின் நீதி அரசர்கள் முன் விளக்கிய அபூபக்கர் மர்ரி மற்றும் நவநீதம் பிள்ளை ஆகியோரின் குற்றச் சாட்டை மிகச் சர்வ சாதாரணமாக பொய் என்று மியான்மர் ரோஹிங்கிய இனப் படுகொலைக் குற்றவாளியின் ஆதரவாளர் ஆங் சான் சூ கிய் கூறியுள்ளார்.

ஆனால், உலகமே அறிந்த ஓர் இன அழிப்பிற்கான கொட்டத்தை மிக இலகுவாக பொய்யென்று கூறினால் விடுமா உலக நீதி மன்றம்?! அமைத்திருக்கிறது ஒரு புலன் விசாரனைக் குழுவை, அது அத்துனை விடயங்களையும் தோண்டி எடுத்து மியான்மரில் நடந்த கற்பழிப்புக்கள், கயமைத் தனங்கள், கொலைகள், கொள்ளைகள், மனிதர்களை உயிரோடு எரித்த கொடுமைகள், உயிருடன் மண்ணில் போட்டு புதைத்த கொடூரங்கள் என அத்துனையையும் ஒன்று விடாமல் புட்டு புட்டு வைக்கப் போகிறது. தற்பொழுது அகதிகளின் குரலாக ஒலிக்கும் அபூபக்கர் மர்ரியுடன் ஏற்கனவே மியான்மரின் கொடுங்கோன்மையை தோலுரிக்க துடித்துக் கொண்டிருந்த 59 மற்ற உலக மனித உரிமை அமைப்புக்களும் இனைந்து கொண்டது.

என் சகோதரர் அபூபக்கர் மர்ரி தம்பதாவுடன் இனைந்து போராடும் நவநீதம் பிள்ளை ஆகியோருக்கு இந்த வழக்கில் வெற்றியை இறைவன் கொடுக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணமான மியான்மர் புத்த மத வெறியன் வீராத்துவை உலக நீதி மன்றம் கண்டறிந்து அவனை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க தீர்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கு களம் அமைத்து கொடுத்த ஆங் சான் சூ கியிற்கும் இழிவை இறைவன் கொடுக்க வேண்டும். இதுவே எம் போன்றோரின் எதிர் பார்ப்பாக உள்ளது. கண்ணீர் தேசத்து மக்களின் கவலை போக்கும் மருந்தாகவும் அமையும்.

இந்த வழக்கின் போக்கு செவ்வாய் மற்றும் புதன் கிழமை பங்களாதேஷ் காக்ஸ் பஜார் எனும் இடத்தில் அகதிகள் முகாம்களில் தங்கி இருக்கும் பல்லாயிரக் கணக்கான ரோஹிங்கிய இசுலாமியர்களுக்கு நேரடியாக பார்ப்பதற்குண்டான வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட பொழுது, ஆனந்தக் கண்ணீரோடு தங்களின் நீதிக்காக போராடும் சகோதரர் அபூபக்கர் மர்ரி தம்பதாவிற்காக துஆக்களில் ஈடுபட்டுள்ளனர். யா அல்லாஹ்! என் சகோதரர் அபூபக்க மர்ரியும் சகோதரி நவநீதம் பிள்ளையும் இந்த வழக்கில் வெற்றி அடைய அருள் புரிவாயாக என்கிற பிரார்த்தனையோடு, எதிர் காலத்தில் இன்னும் இன அழிப்பிற்காக திட்டமிடும் வஞ்சகர்களையும் இதே போன்று உலக நீதி மன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பல்லாண்டு கணக்கில் சிறைத் தண்டனை பெற்றுத் தர இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக என பிரார்த்தித்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

(ராய்ட்டர்ஸ், ஏபி நியூஸ், அல் ஜசீரா, வாசிங்டன் போஸ்ட் மற்றும் ஏஎஃப்பி செய்திகளுடன் முனீப் அபு இக்ரம்)

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All