Puttalam Online
other-news

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீதான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றம்

  • 19 December 2019
  • 242 views

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீதான குற்றவியல் பிரேரணை நிறைவேற்றம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுவார் என கருதப்படுகிறது.

இந்நிலையில் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தக தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக புகார் எழுந்தது. அத்துடன் தன் மீதான புகாரை விசாரிக்க தடை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த புகார்களின் அடிப்படையில் டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது.இலங்கை நேரப்படி இன்று அதிகாலை (19) பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பில் 229 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 198 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்தனர். இதனையடுத்து பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீதான கண்டன பிரேரணை நிறைவேறியது.

எனினும் 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே, டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியும். செனட் சபையில் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் இது தோற்கடிக்கப்பட்டு டிரம்ப் பதவி காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்க செனட் சபையில் அடுத்த மாதம் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

அமெரிக்காவில் இரு ஜனாதிபதிகள் மீது இதுவரை குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. 1868ல் அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் 1998ல் அதிபர் பில் கிளின்டன் ஆகியோர் மீது பிரதிநிதிகள் சபையில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் இவர்களுக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அவர்களின் பதவி தப்பியது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All