Puttalam Online
funeral

புத்தளத்தின் தொழிலதிபர் யூசுப் ஜிப்ரி காலமானார்

  • 27 December 2019
  • 1,170 views

-முஹ்ஸி-

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…!

புத்தளத்தைச் சேர்ந்த Razana Glass House உரிமையாளர் யூசுப் ஹாஜியாரின் மூத்த மகன் தொழிலதிபர் அல்ஹாஜ் ஜிப்ரி கொழும்பில் இன்று (26/12/2019) காலமானார். அன்னாரின் ஜனாசா இன்று இரவு புத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புத்தளத்தில் பிறந்து வளர்ந்து க. பொ. த. (சா/த) வரை அங்கேயே கல்வி பயின்று, பின்னர் உயர் கல்வித் துறையில் பிரவேசித்து கணக்காளராகி வேறு பல கல்வித் தகைமைகளையும் பூர்த்தி செய்து, வெளிநாட்டிலும் தொழில் புரிந்து, பின்னர் கல்வியையும், ஆற்றல்களையும், தொழில்சார் அனுபவங்களையும் பயன்படுத்தி கொழும்பில் தொழில் முயற்சிகளை தொடங்கி சுமார் 20 வருடங்களுக்கும் மேல் அவற்றை பல்வேறு பரிமாணங்களாக்கி வெற்றிகரமாக முன்னெடுத்து, சுமார் 3000 ற்கும் மேற்பட்ட மூவின ஊழியர்களுடன் நாட்டின் முக்கிய நகரங்களையும் இணைத்தவாறு வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தி அமைதியாக வாழ்ந்தவர் மர்ஹூம் யூசுப் ஜிப்ரி. அன்னார் எமது நெருங்கிய உறவினரும் ஆவார்.

தனது வர்த்தக வியாபார முயற்சிகளுக்கு அப்பால் தனக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்தும் தனது குடும்பத்தவருக்கும் உறவினருக்கும் பலரும் அறியா வண்ணம் தேவை நாடிகளுக்கு முடிந்தவரை பல்வேறு உதவிகளையும் செய்தவர்.

புத்தளத்தின் பன்னூலாசிரயர் எம். ஐ. அப்துல் லதீப் ஐந்து நூல்களை ஒரே மேடையில் வெளியிட்ட போது பிரதம அதிதியாக சிறப்பித்து தனது பங்களிப்பை பெருமனதுடன் நல்கியவர்.

ஒரு தடவை பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் எழுதிய “புத்தளம் முஸ்லிம்களின் வரலாறும் மரபுகளும்” எனும் நூலை அவருக்கு வழங்குவதற்கு கொழும்பில் உள்ள அவரது நிறுவனத்துக்கு சென்ற போது அதை பெருமனதுடன் ஏற்றுக் கொண்டு, ஆங்கிலத்திலும் அதை வெளியிட்டு பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் என்பவற்றுக்கும் அனுப்ப வேண்டும் எனவும் அதற்காக தனது பங்களிப்பை வழங்குவதற்கும் முடியும் என்று உற்சாகப்படுத்தினார்.

எங்கு கண்டாலும் சிரித்த முகத்துடன் பேசும் அன்னார் அதே புன்முறுவல் பூத்த முகத்துடன் தனது 63 வது வயதில் வபாத்தாகி புத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரை பிழை பொறுத்து அவர் செய்த அனைத்து நற்காரியங்களையும் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

اللهم اغفر له وارحمه واسكنه فسيح جنتك يارب العالمين


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All