Puttalam Online
current

புத்தளத்தில் டிப்பிங் பொயின்ட் (Tipping Point) மாதிரி சார்க் மாநாடு

  • 11 February 2020
  • 527 views

எம்.யூ.எம்.சனூன்
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் முயற்சியால், புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில், இளைஞர் சமூக மறுசீரமைப்பாளர்கள் அமைப்பின் ஒத்துழைப்போடு  “பயத்தை நம்பிக்கையாலும், தீவிரவாதத்தை சமாதானத்தாலும் மாற்றீடு செய்வோம்” (Replace Fear with Hope and Terror with Peace) எனும் தொனிப்பொருளில் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட “டிப்பிங் பொயிண்ட் – Tipping Point”
மாதிரி சார்க் மாநாடு சனிக்கிழமை (08) முழு நாளும் புத்தளம் நவீன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

07 ம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இதன் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும், உள்ளூர் இளைஞர்களுக்குமிடையிலான கால்பந்தாட்டப் கண்காட்சிப்போட்டியும், பெண்களுக்கான கூடைப்பந்து மற்றும் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.

மிலேனியம் வருடத்தின் ஆரம்பத்தில் மெல்கம் க்ளேடிவேல் என்பவரால் உலகிற்கு பிரபலப்படுத்தப்பட்ட Tipping Point (சிறிய விடயத்தை மேற்கொண்டு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தல்) கருத்தியலானது எந்தவொரு நபரையும், அமைப்பையும் தற்போதைய உலகிற்கேற்ப மேம்படுத்தக்கூடியது.

இந்த கருத்தியலுக்கமைய உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு நோக்கங்களில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்காசிய நாடுகளில் இளைஞர் வலுவூட்டல் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தகையதொரு பாணியிலே இளைஞர், யுவதிகளின் ஆளுமையை மேம்படுத்தும் நோக்கிலும், பயங்கரவாத சிந்தனைகள் இளைய சமுதாயத்தை ஆட்கொள்ளாமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நகர எல்லைக்குள் மாத்திரமின்றி நகரை சூழவுள்ள கல்பிட்டி, வண்ணாத்திவில்லு மற்றும் புத்தளம் பிரதேச சபைகளையும் நாட்டின் ஏனைய சில பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 400 ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் இலங்கை நாட்டிலும், சார்க் வலய நாடுகளிலும் காணப்படுகின்ற பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு இணைந்து பணியாற்றக்கூடிய சந்தர்ப்பம்  இளைஞர்களுக்கு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட செயலாளர், ஆளுனரின் செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள பிரதி ஆணையாளர், இரானுவ மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பாதுகாப்பு அமைச்சின் விஷேட பரிந்துரைக்கமைய வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் ருவன் பெரேரா கலந்து கொண்டார்.

அத்தோடு ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பாசிர் மொஹிதீன்  கலந்துகொண்டதோடு வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All