Puttalam Online
other-news

ஜனாதிபதியின் ஆலோசனையின்படியே ஆர்ப்பாட்டத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது – அமைச்சர் பந்துல குணவர்தன

  • 12 February 2020
  • 252 views

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் தனியான இடத்தை ஒதுக்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்: ஆர்ப்பாட்டங்கள் காரணமாக வேலை செய்யும் மக்களின் வேலை நாட்கள் குறைந்து போகிறது என்பதுடன் பலருக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன.

வீதிகளில் செல்வோருக்கு சுதந்திரமாக செல்ல முடியாது என்றால், நோயாளிகளுக்கு சுகவீனம் ஏற்படும் போது நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்றால், அவசர வேலைகளுக்கு செல்லும் போது ஆர்ப்பாட்டங்களால் தடைகள் ஏற்படுமாயின் அது நாட்டின் நல்லிருப்புக்கு பாதிப்பு என்பதுடன் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையாக அமையும்.

இதனால், ஜனாதிபதி இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டம் இடம் என்று உத்தியோகபூர்வமாக ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார்.

எவருக்காவது ஆர்ப்பாட்டம் நடத்தும் தேவை இருக்குமாயின் அரசாங்க சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தாது, எவருக்கும் தடைகளை ஏற்படுத்தாது, முன்னேறிய நாடுகளைப் போன்று காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த முழுமையான உரிமையுள்ளது.

சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போன்று உரிய இடத்தை எந்த அரசாங்கமும் ஒதுக்கவில்லை. கடந்த அரசாங்கம் இப்படியான இடத்தை ஒதுக்குவதாக கூறியது, ஆனால் ஒதுக்கவில்லை. காட்டுப் பகுதியில் அல்ல அனைவரும் பார்க்க கூடிய வகையில் காலிமுகத்திடல் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All