Puttalam Online
regional-news

இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் 30 வது வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு

  • 14 February 2020
  • 950 views

ரூஸி சனூன் புத்தளம் 
 
இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் வரலாற்றில் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்பும் அதற்கு பின்பும் அதனை ஆய்வு செய்கின்ற போது ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பிறகு பெரும் சுதந்திரத்தை நாம் இழந்திருக்கின்றோம். அத்தகையதொரு இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம் என புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் 30 வது வருட நிறைவு மற்றும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். முனீர் (மதனி) தலைமையில் வியாழக்கிழமை (13) காலை கல்லூரியின் ஷாமில் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இஸ்லாஹிய்யாவின் முகாமைத்துவ சபை தலைவரும், மதுரங்குளி எக்ஸ்லன்ஸ் சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் அதிபருமான எச்.அஜ்மல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முகாமைத்துவ சபை உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி, புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ரஸ்மி, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.ரியாஸ்(தேவ்பந்தி) உள்ளிட்ட பெற்றார்கள் மற்றும் மாணவிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இஸ்லாஹிய்யா மாணவிகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிங்கள மொழியிலே அதி சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியை லியன ஆராச்சி இதன் போது பிரதம அதிதியினால் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை பல்துறை சார்ந்த சாதனைகளை நிலை நாட்டிய மாணவிகளுக்கும் இதன்போது விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நகர பிதா கே.ஏ.பாயிஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்கின்ற நிலைமை உலகளாவிய ரீதியாக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட நமது நாட்டிலே இந்த 21 தாக்குதலுக்கு பிறகே அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டது. பெரும்பான்மை சமூகமே இவ்வாறு இதனை நோக்க துவங்கியிருக்கின்றன.

இந்த நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களில் பெரும்பாலானவர்கள் மத்ரசா கல்வியை ஐ.எஸ்.ஐ.ஸ். தீவிரவாதத்தை போதிக்கும் கல்வியாக பார்க்க துவங்கினர்.

பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் இந்த தாக்குதலுக்கு  பின்னர் அரபு மத்ரஸாக்களில் என்ன நடைபெறுகின்றது என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள் அதுமாத்திரமல்ல மத்ரசாக்களில் சிறுவர் உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றங்களை சுமத்தினர்.

ஆனால் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியானது இத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உட்படாமல் மாறுபட்ட ஒன்றாக இருப்பது பாராட்டத்தக்கது.

மத்ரஸா விவகாரங்கள் மாத்திரமின்றி பல்வேறு விடயங்களிலும் நாம் இருக்கின்ற காலம் பிரச்சினைக்குரிய காலமாக இருக்கின்றது.ஆகவே நமது எண்ணங்கள், செயல்பாடுகள் யாவற்றிலும் கவனம் செலுத்தி பெரும்பான்மையின மக்களின் மனங்களை மாற்றி அமைக்க நாம் அனைவரும் முன்வரவேண்டும்.

இந்த கல்லூரியில் 30 வருட காலத்துக்குள் 600 மாணவிகள் கல்வி கற்று வெளியேறி இருப்பதானது சமூகத்துக்கும், நாட்டுக்கும் தேவைப்படுகின்ற ஒரு சிறந்த பாடத்திட்டம் இங்கு அமுல் படுத்தப்படுகின்றது என்பதை தெட்டத் தெளிவாக எங்களுக்கு காட்டி இருக்கின்றது எனக்கூறினார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All