Puttalam Online
regional-news

“பல்சர் பவர்” கால்ப்பந்தாட்ட தொடரில் புத்தளம் லிவர்பூல் சம்பியன்

(ரூஸி சனூன் புத்தளம்) 
 .
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் பூரண ஒத்துழைப்போடு மதுரங்குளி டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி பிரைவட் லிமிட்டட் நடாத்திய அணிக்கு தலா 09 பேர்களை கொண்ட கால்ப்பந்தாட்ட
தொடரில் புத்தளத்தின் பிரபல கால்ப்பந்தாட்ட கழகமான லிவர்பூல் சம்பியனாகியுள்ளது.
 .
தொடரின் இரண்டாம் இடத்தினை புத்தளம் தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது.
 .
இத்தொடரில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணிக்கு சம்பியன் அல்லது இரண்டாம் இடத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் இறுதி போட்டியில் நடுவரின் தீர்ப்பினை உதாசீனம் செய்து வீரர்கள் வெளிநடப்பு செய்ததால் அவர்களுக்கான இந்த வாய்ப்பு கை நழுவி போனது.
 .
இந்த போட்டி தொடரானது சனிக்கிழமை (22) முழு நாளும் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
 .
புத்தளம் லீக்கில் கட்டுப்பட்ட 11 அணிகளில் 10 அணிகள் இந்ததொடரில் பங்கேற்றன. சகல போட்டிகளும் விலக்கல் முறையில் 30 நிமிட நேர கால அவகாசத்தில் இடம்பெற்றன.
 .
தொடரின் முதலாவது அரை இறுதி போட்டியில் லிவர்பூல் அணியும், நியூ ஸ்டார்ஸ் அணியும் போட்டியிட்டதில் லிவர்பூல் அணி 02 : 01 கோல்களினால் வெற்றியீட்டி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 .
தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணியும், தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணியும் போட்டியிட்டதில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி 01 : 00 கோல்களினால் வெற்றியீட்டி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 .
பரபரப்பான இறுதி போட்டி மாலை 5.30 க்கு ஆரம்பமானது. லிவர்பூல் அணியும், கல்பிட்டி பேர்ல்ஸ் அணியும் இந்த இறுதி போட்டியில் பங்கேற்றன.
 .
இடைவேளைக்கு முன்னதான முதல் 15 நிமிடங்களில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி 01 கோலினை செலுத்தி முன்னிலை வகித்தது.
 .
இரண்டாவது பாதியில் 05 வது நிமிடத்தில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி கோல் காப்பாளர் இழைத்த குற்றத்துக்காக பிரதம நடுவரினால் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதோடு லிவர்பூல் அணிக்கு பெனால்டி உதைக்கான சந்தர்ப்பத்தையும் வழங்கினார்.
 .
எனினும் இந்த தீர்ப்பினை ஆட்ஷேபித்த கல்பிட்டி பேர்ல்ஸ் அணி வீரர்கள் நடுவரோடு முரண்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர். லீக் நிர்வாகிகள் இதன் போது தலையிட்டு பேச்சுவார்த்தை நடாத்தியபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
 .
இதனையடுத்து பிரதம நடுவரினால் லிவர்பூல் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு போட்டி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் நிமித்தம் இரண்டாவது அரை இறுதியில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணியோடு போட்டியிட்டு தோல்வி அடைந்த தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணியினருக்கு இரண்டாம் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியது.
 .
போட்டிக்கு பிரதம நடுவராக எம்.ஆர்.எம். அம்ஜத், துணை நடுவர்களாக ஏ.ஏ.எம். பஸ்ரின், ஏ.ஓ.அசாம்,ஏ.ஏ. கியாஸ் ஆகியோர் கடமையாற்றினர்.
 .
சம்பியனாகிய லிவர்பூல் அணிக்கு வெற்றிக்கிண்ணத்தோடு 15 ஆயிரம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடம் பெற்ற தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணத்தோடு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டதோடு வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
 .
தொடரில்  கூடிய கோல்களை செலுத்தியமைக்காக லிவர்பூல் வீரர்  எம்.முசக்கீரும், ஆட்ட நாயகனாக லிவர்பூல் வீரர் எம்.ரஸ்வானும்,சிறந்த கோல் காப்பாளராக லிவர்பூல் வீரர் பெரோஜும் தெரிவாகி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 .
ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நிகராதிபதி கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டார். இறுதி பரிசளிப்பு நிகழ்வில் டேவிட் பீரிஸ் நிறுவன முகாமையாளர் நிப்புன், எசைட் லைன் லீசிங் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ருவான் உள்ளிட்ட லீக் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
 .
பஜாஜ் பல்சர் என்.எஸ். 200 இன் மோட்டார் சைக்கிள் சாகசங்களும் இதன் போது நிகழ்த்தப்பட்டன.
 .
குறிப்பு :
கூடிய கோல்களை செலுத்தியமைக்காக லிவர்பூல் வீரர் எம்.முசக்கீர் தனக்கான விருதினை புத்தளம் நகர சபை உறுப்பினர் தில்ஷானிடமிருந்து (வெள்ளை நிற சேர்ட்) பெறுகிறார்.
 .
ஆட்ட நாயகனுக்கான விருதினை லிவர்பூல் வீரர் எம்.ரஸ்வான் புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரியும், லீக் உப தலைவருமான பீ.எம். ஹிஷாமிடமிருந்து (சிவப்பு நிற சேர்ட்) பெறுகிறார்.
 .
சிறந்த கோல் காப்பாளருக்கான விருதினை லிவர்பூல் வீரர் பெரோஜ் (கருப்பு நிற அங்கி) லீக் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆசாத்திடமிருந்து பெறுகிறார்.
 .
WAK


One thought on ““பல்சர் பவர்” கால்ப்பந்தாட்ட தொடரில் புத்தளம் லிவர்பூல் சம்பியன்

  1. Irsath says:

    Naduwarin thirpu sattappady nalla waruwinga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All