Puttalam Online
current

நமது மற்றுமோர் ஆசான் அஸ்தமித்தார்

நமது மற்றுமோர் ஆசான் அஸ்தமித்தார்

எம் ஐ எம் அப்துல் லத்தீப் புத்தளத்தின் மற்றுமோர் ஆளுமை. கல்விப் புலத்தில் ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பணியாற்றியவர். சிறந்த சமூக சேவையாளர். பன்னூல் ஆசிரியர். புத்தளம் வரலாற்றுத் தடயங்களை தேடி சேகரித்து பதிவிடுபவர். எமது கலாசார பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டியவர் நேற்று மாலை எம்மைவிட்டும் பிரிந்தார். இன்று வெள்ளிக்கிழமை அன்னாரின் ஜனாஸா புத்தளம் பகா மையவாடியில் காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

1996 மார்ச் 20, 21, 22 தினங்களில் புத்தளம் மாநகரில் இடம்பெற்ற அகில இலங்கை தப்லீக் இஜ்திமா இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படவேண்டியது. இலட்சக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் புத்தளத்தில் ஒன்றுகூடிய நிகழ்வு அது.  அப்துல் லத்தீப் ஆசிரியர் அவர்கள் இந்த நிகழ்வுகளை ‘புத்தளம் கண்ட மாபெரும் தப்லீஃ இஜ்திமா’ என்ற தலைப்பில் 278 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக 1998 இல் வெளியிட்டுள்ளார்.

அப்துல் லத்தீப் ஆசிரியர் அவர்கள் தனது தேடல்களை தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாது சமூகத்துக்கு கொண்டு சேர்ப்பதில் பெரும் பணியாற்றியவர். வடபுல முஸ்லிம்களின் இடப்பெயர்வுக்குப்பின் புத்தளம் மன்னார் தொடர்புகளை ஆராய்ந்து தினகரன் வாரமஞ்சரி, நவமணி போன்ற தேசிய நாளிதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதியது மட்டுமன்றி அதனை மேலும் விரிவாக்கி 2003 இல் ‘புத்தளம் – மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும் என்ற ஆய்வு நூலை அவர் எமக்குத் தந்தார்.

மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்கள் ஒரு பன்னூல் ஆசிரியர். புனித இஸ்லாம் கூறும் தொப்பி, தலைப்பாகையின் கண்ணியம் என்ற அவரது நூல் 2001 இல் வெளியாகியது. 2007 இல் ஹிஜாபும் மேற்குலகும் என்ற நூலை வெளியிட்டார். ‘புனித பூமியில் பதிந்த சுவடுக்கள், ‘அல் அக்ஸா அழைக்கிறது’, ‘உண்மையான உலக அழிவு’, ‘(40) நாற்பது பற்றிய பதிவுகள், ‘முஹம்மத் (ஸல்) அற்புதக் கவியாரம்’ ஆகிய அவரது நூல்கள் 2015 இல் வெளியாகின.

சமூகக் கல்வி வரலாறு பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றிய அன்னார் 1990 இல் ஆசிரியர் பணியினின்றும் ஓய்வு பெற்றபோது வரலாறு போதிக்கும் ஆசிரியர்களுக்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கும் உதவுமுகமாக கைநூல் போன்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  இதுவே அவரது நூலாக்க முதல் முயற்சி. இம்முயற்சி பூர்த்தியாகாத நிலையிலேயே அவர் எம்மைவிட்டு புரிந்துள்ளார். ஒன்பது நூல்கள் வெளியாகிய போதும் முதல் முயற்சி இன்னும் தொடரும் ஆதங்கத்தை சுட்டிக்காட்டி இம்மாதம் ஒன்பதாம் திகதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. முகநூலில் அவர் பதிந்த கடைசி எழுத்துக்களும் அவையே.

சமூகக் கல்வி ஆசான் என்ற வகையில் இலங்கையின் தேசிய நாளிதழ்களில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் வகையில்அவர் பல கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்துடன் வரலாற்று நிகழ்வுகள் புத்தளத்தின் பாரம்பரிய கலாசார மரபுரிமைகள் தொடர்பான பல கட்டுரைகளும் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. புத்தளத்து ஆற்றுப் பயணம், ‘எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே என்ற கூற்று எவ்வாறு தோன்றியது – ஓர் ஆய்வும் தகவலும்’, ‘வந்தாரை வாழ வைக்கும் புண்ணிய பூமி புத்தளம்’, போன்றன அவற்றுள் சில.

சிறந்த சமூக சேவையாளரான அப்துல் லத்தீப் அவர்கள் புத்தளம் 1400 ஆண்டு விழா கமிட்டி (1967/68) இஸ்லாமிய முன்னணி இயக்கம் (IFM), பராஅத் குழு, புத்தளம் மீலாத் ஷரீப் கமிட்டி, புத்தளம் ஸாஹிரா கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம், உடையார் வெளி, வட்டுக்காவெளி விவசாய சங்கங்கள் அச்சமலையாறு உப்பு உற்பத்தியாளர் சங்கம், புத்தளம் வர்த்தகர் சங்கம், புத்தளம் அஞ்சல் அலுவலக ஆலோசனை சபை என நமது நகரின் பல்வேறு சமூக அபிவிருத்தி சங்கங்களில் செயற்குழு உறுப்பினராக மட்டுமன்றி இவற்றின் பல்வேறு சங்கங்களில் ஒரே சமயம் கெளரவ செயலாளராகவும் மிக சிரமத்துடன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் நகரில் 1991, 1999 ஆம் ஆண்டுகளில் தேசிய மீலாத் விழா இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் கொண்டாடப்பட்டபோது எமது பாரம்பரிய கலாசார மரபுரிமைகளை புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் பொருட்காட்சி குழு உறுப்பினராக இருந்து பல அரிய பொருட்களை பெற்றுக்கொள்ள முயற்சித்து காட்சிப்படுத்துவதில் அரும்பணியாற்றியதை எமது சமூகம் என்றும் மறவாது.

சிறந்த மார்க்க பக்தியுடைய அப்துல் லத்தீப் ஆசிரியர் அவர்கள் தப்லீஃ பணியிலும் தம்மை அர்ப்பணித்தவர். அகில இலங்கை ஷரீஆ கவுன்சில் புத்தளம் கிளையின் உதவி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். புத்தளம் அஹதியா ஆலோசனை சபை உறுப்பினர்.  ஹஜ், உம்ரா பயணிகளுக்கு வழிகாட்டியாக பணிபுரிந்தவர். தனது புனிதப் பயணத்தில் பைத்துல் முகத்தஸ் வரை அன்னார் பயணித்திருக்கிறார்.

எழுத்துத்துறையில் ஆர்வம் காரணமாக நூல் வெளியீட்டுடன் மட்டும் தன்னை அவர் மட்டுப்படுத்தவில்லை. பத்திரிகை நிருபரான இவர் புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்க தலைவராகவும் பொருளாளராகவும் புத்தளம் நவமணி வாசகர் வட்ட உப தலைவராகவும் புத்தளம் சிந்தியா கலை இலக்கிய வட்ட போஷகர்களில் ஒருவராகவும் சேவையாற்றியுள்ளார்.

சமாதான நீதவான் அப்துல் லத்தீப் அவர்களின்  சேவைகளை கெளரவித்து இலங்கை அரசாங்கம் கலா பூஷணம் பட்டத்தை வழங்கியது. அத்துடன் புத்தளம் சமூக அமைப்புக்கள் பல இவரை பாராட்டி கெளரவித்துள்ளதுடன் ‘அறிவுச்சுடர்’ கல்வி மேம்பாட்டு அமைப்பினால் ‘சமூகச் சுடர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 


One thought on “நமது மற்றுமோர் ஆசான் அஸ்தமித்தார்

  1. Mohamed SR Nisthar says:

    என் பக்கத்து வீடு, உங்கள் மகளின் வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் ஏதோ கதைக்கும் சத்தம் கேட்டது. நான் வழமையாக புத்தளம் வரும் போது நமது அன்பு சுகவிசாரிப்பான ” எப்படி லத்தீப் காக்கா சொஹம்மா ஈக்கிறிங்களா” என்று கேட்க முடியாமல் போனது. உங்கள் இறப்பு செய்தி கேட்டு என் மருமகன் மூலம் உங்கள் மகனுக்கு என் கவலையை தெரிவித்திதேன். “எல்லாம் இனிதே நடக்கும்” இது அல்லாஹுவின் வாக்குறுதி. Good bye Latheef Kaakkaa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All