Puttalam Online
politics

பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடாத்தலாமா? (பாகம்-2)

  • 13 April 2020
  • 299 views

வை எல் எஸ் ஹமீட்

================================
பிரிவு 113ம் ஜனாதிபதியின் அதிகாரமும்
—————————————————-
தேர்தல்கள் சட்டம் பிரிவு 113 இன் பிரகாரம்; ஜனாதிபதி உத்தரவிட்ட அல்லது குறித்த திகதியில் எந்தக் காரணத்துக்காகவேனும் ஏதாவதொரு மாவட்டத்தில் தேர்தல் நடக்காவிட்டால் எந்த நேரத்திலும் ஜனாதிபதி வர்த்தமானிமூலம் அந்த மாவட்டத்தில் தேர்தல் நடாத்தும்படி இன்னுமொரு உத்தரவை விடுக்கலாம்.
தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 21/03/2020 அன்று வெளியிட்ட வர்த்தமானியில் 25/04/2020ம் திகதி தேர்தல் நடாத்தமுடியாதென்றும் ஏப்ரல் 30ம் திகதிக்குப்பின் 14 நாட்களுக்குப் பிந்திய திகதியில் தேர்தல் நடாத்த திகதி குறிக்கப்படும்; எனத் தெரிவித்திருந்தது.
இவ்வாறு ஒரு வர்த்தமானி வெளியிடமுடியாது. பிரிவு 24(3) இன்படி, இந்தத்திகதியில் நடைபெற இருக்கின்ற தேர்தல் இந்தத்திகதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது; தேர்தல் இந்தத் திகதியில் நடைபெறும் என்றுதான் குறிப்பிடவேண்டும்.
எனவே, கடந்த மாதம் 21ம் திகதி வெளியிட்ட வர்த்தமானி பிரிவு 24(3) இற்கு அமைவானதல்ல. அதன் பிரகாரம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக கருதமுடியாது. எதிர்வரும் 25ம் திகதிக்குமுன் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாக வேண்டும். தவறின் அதன்பின் திகதி குறிப்பிடுகின்ற அதிகாரம் பிரிவு 113 இன் கீழ் ஜனாதிபதியின் கைகளுக்கு சென்றுவிடும். அதன்பின் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தலை ஒத்திப்போடுகின்ற எந்த அதிகாரமும் கிடையாது.

ஏப்பிரல் 25 இற்குமுன் தேர்தலை ஒத்திப்போட்டால்

———————————————
புதிய பாராளுமன்றம் கூடுகின்ற திகதியாக மே 14ஐ ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருக்கின்றார். இந்நிலையில் ஜனாதிபதி அந்தத்திகதியை மாற்றினாலேயொழிய ஆணைக்குழு மே 14ம் திகதிக்கு முந்தியதாகத்தான் ஒரு திகதியைக்குறிப்பிடவேண்டும்.
ஜனாதிபதி பாராளுமன்றம் கூடும் திகதியை, தேர்தலை ஒத்திவைக்கமுன் மாற்றினால் அதற்கு ஏற்றவிதத்தில் ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைக்கலாம். தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைத்ததன்பின் ஜனாதிபதி பாராளுமன்றம் கூடும் திகதியை மாற்றினால் ஆணைக்குழு மீண்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. அதாவது ஆணைக்குழு ஒரு முறைதான் தேர்தலை ஒத்திவைக்கமுடியும்.
அதாவது ஏப்ரல் 24ம் திகதிவரை தாமதிக்கலாம் ஜனாதிபதி பாராளுமன்றம் கூடும் திகதியை மாற்றுகின்றாரா? எனப்பார்ப்பதற்கு. அவ்வாறு ஜனாதிபதி திகதியை மாற்றாவிட்டால் மே 14இற்கு முந்திய ஒரு திகதியைக் குறித்து ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைக்கவேண்டும். அதன்பின் ஜனாதிபதி பாராளுமன்றம் கூடும் திகதியை மாற்றினால் அதற்கேற்ற விதத்தில் மீண்டும் திகதியை ஜனாதிபதிதான் பிரிவு 113இன்கீழ் மாற்றலாமேயொழிய ஆணைக்குழு மாற்றமுடியாது.
எதுஎவ்வாறிருந்தபோதிலும் ஜனாதிபதி பாராளுமன்றம் கூடும் திகதியை தற்போதைய சட்டத்தின்படி ஜூன் 2ம் திகதிக்குப்பிந்தியதாக மாற்றமுடியாது. எனவே, ஆணைக்குழுவின் கருத்துப்படி மே 28 இல் தேர்தல் நடாத்தியாகவேண்டும். ஆனால் அது நடைமுறைச் சாத்தியமில்லை; என்றும் ஆணைக்குழு கூறுகின்றது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தைக்கூட்டி சட்டத்தை மாற்றவும் விரும்பவில்லை. உயர்நீதிமன்றம் செல்லவும் விரும்பவில்லை.

சட்டத்தின் தீர்வுகள்

————————————————-
உதாரணமாக, எதிர்வரும் 24ம் திகதிவரை ஜனாதிபதி புதிய பாராளுமன்றம் கூடும் திகதியை மாற்றவில்லை; எனக்கொள்வோம். ஆணைக்குழு மே 10ம் திகதியையாவது குறித்து ஒத்திவைத்தாக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் அத்திகதியில் தேர்தல் நடாத்தும் சாத்தியமில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றம் கூடும் திகதியை ஜூன் 2இற்கு மாற்றி தேர்தல் நடக்கும் திகதியை மே 28 இற்கு மாற்றுகிறார்; எனக் கொள்வோம். அத்திகதியிலும் தேர்தல் நடாத்துவது சாத்தியமில்லையெனில் இரண்டு தீர்வுகள் இருக்கின்றன.
 
ஒன்று: ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது அல்லது உயர்நீதிமன்றம் செல்வது.
இரண்டு: தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றம் செல்வது.
 

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டுதல்

———————————————————————
அரசியலமைப்பின் சரத்து 70(7) இன்கீழ் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டலாம். அவ்வாறு கூட்டினால் பாராளுமன்றத்தின் எஞ்சிய காலப்பகுதி முடிவுவரை அதாவது ஆகஸ்ட் 31 ந்திகதிவரைதான் அப்பாராளுமன்றம் இயங்கலாம்; என சிலர் நினைக்கிறார்கள். அவ்வாறல்ல.
 
5 வருட முடிவில்தான் பாராளுமன்றம் கலைந்திருந்தாலும் 70(7) இன்கீழ் கூட்டலாம். அது முழுமையான பாராளுமன்றம். அதை மீண்டும் கூட்டமுடியாது. இது அவசர தேவைக்கான பாராளுமன்றம்.
 
இப்பாராளுமன்றத்தைக்கூட்டி அரசியலைமைப்பின் 70(5) ஐ அதாவது மூன்று மாத காலத்திற்கு பிந்தாதமல் புதிய பாராளுமன்றைக் கூட்டவேண்டும்; என்பதைத் தற்காலிகமாக ( நிரந்தரமாக திருத்தமுடியாது) திருத்தலாம்.
 
70(7) இன் கீழ் கூட்டப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கமுடியாது. அது என்ன அவசரகாலநிலைக்காக கூட்டப்பட்டதோ அந்த அவசாரகாலநிலை முடிந்ததும் அல்லது தேர்தல் நடந்ததும் தாமாக கலைந்துவிடும்.
 
இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் அல்லது கூட்டியும் 2/3 கிடைக்காவிட்டால் Doctrine of Necessity இன்கீழ் உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடலாம்.
 
சிலவேளை, ஜனாதிபதி உயர்நீதிமன்றம் செல்லாவிட்டால் ஆணைக்குழு உயர்நீதிமன்றம் செல்லலாம். ஆனால் அவ்வாறு செல்வதற்கு சட்ட ஏற்பாடு இல்லை. இருந்தாலும் ஒரு வழக்குத் தீர்ப்பு இருக்கின்றது. அந்த வழக்கு கருணாதிலக்க மற்றும் இன்னொருவர் எதிர் தயானந்த திசாநாயக்க என்பதாகும்.
 
அந்த வழக்கில் தேர்தல் ஆணையாளர் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்தை முழுமையாக பின்பற்றவேண்டும்; என்றும் அந்த சட்டத்தின் சரியான சட்டத்தின் நிலைப்பாடு எது என்று தெரியாதபோது அல்லது அந்த இடத்தில் சட்டத்தின் பரிகாரம் என்னவென்று தெரியாதபோது அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டுமென்றும் அவ்வாறு சட்டத்தை நிலைநாட்டுவதற்காக உரிய மனுமூலம் ( appropriate proceedings) ( இதற்கு நான் பாவித்திருக்கின்ற தமிழ் முழுமையாக பொருத்தமானதல்ல, பொருத்தமான தமிழும் தெரியவில்லை) நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற உத்தரவை பெற்றாவது செயற்படவேண்டும்; என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
இது வேறு ஒரு சூழ்நிலைக்கான வழக்குத் தீர்ப்பாகியபோதும் இன்று தேர்தல் நடாத்தமுடியாத சூழ்நிலையில் தேர்தலை பொருத்தமாக கையாள்வதற்கு சட்டம் தடையாக உள்ளநிலையில் பரிகாரம் என்ன என்பதை அறிய இந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All