Puttalam Online
art-culture

சித்திரை (சார்வரி) புதுவருடப்பிறப்பும் உடப்பு மக்களும்

  • 15 April 2020
  • 317 views

(கலைச்சுடர்-க.மகாதேவன்-உடப்பூர்)

வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் மிகவும் அந்நியோன்னியமாக வாழும் தமிழர்களில் உடப்பு மக்களைக் குறிப்பிடலாம். தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடப்படும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய சம்பிரதாயங்களை உள்வாங்கியதாக அமையப்பெற்றது.தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகள், அதேபோல சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இதில் பறைசாற்றப் படுகின்றதை யாவரும் அறியலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (13.04.2020) திங்கட்கிழமை முன்னிரவு 7 மணி 26 நிமிடத்தில் அபரபக்க ஷஷ்டி திதியில் மூல நஷத்திரத்தின் 4 ம் பாதத்தில் பரிகம் நாமயோகத்தில் வனிசக் கரணத்தில் துலா லக்கினத்தில் கும்ப நவாம்சத்தில் புதன் கால வோரையில் குரு சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய கோழி உண்டித் தொழிலும் சூக்கும பஷி நடைத் தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய சார்வரி வருஷம் பிறக்கின்றது.

சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேடராசிக்குள் பிரவேசிக்கும் காலம் கொண்டாடப்படுவதாகும்.எமது தமிழ் வருடங்கள் அறுபது (60) உண்டு. இந்த அறுபது வருடங்களில் இவ்வருடம் 34வது வருடத்தைக் குறிக்கின்றது.ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர் (நாமம்) கொண்டு மழை காற்று பயிர்வளம் போன்ற இயற்கைக்கால பலாபலன்களை மாற்றி அமைப்பன. இவ்வருடங்களின் ஆரம்பம் (பிறந்தநாள் அதாவது பிரம்மா உலகப்படைப்பு ஆரம்பித்த நாள் என்பது புராண ஐதீகம். இதையே புதுவருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றோம்.இந்நாளில் எம்மவர்கள் தமது பாவங்கள் தோஷங்கள் நீங்க வேண்டி ஆலயங்களில் அர்ச்சகர் இல்லங்களில் மருந்துவகை, பூவகை, வாசணைத்திரவியம் போன்றவை போட்டுக் காய்ச்சிய மருத்து நீரை தலையிலே தேய்த்து ஸ்நானம் செய்து உலகின் கண்கண்ட தெய்வமாய் மிளிரும் சூரியபகவானுக்கு வீடுகளில் பொங்கலிட்டு புஜை செய்து புத்தாடை அணிந்து ஆபரணங்கள் அணிந்து ஆலய வழிபாடு செய்து குரு பெரியார் ஆசிகள் பெற்று அறுசுவை உணவு உண்டு மங்களகரமாய் நித்திரை செல்ல வேண்டும்.

இது எம்மவரின் பாரம்பரிய மரபாகும். உடப்பு தமிழ் மக்கள் புது வருடப்பிறப்பன்று அதிகாலை எழுந்து தமது வீடுகளில் கோலம் இட்டு புதுப்பானையில் (மண்பானை) பொங்கலிட்டு அதன் பின்னர் சமய முறைப்படி பூஜையறையில் பொங்கலை படைத்து வழிபடுவது வழக்கமாகும். உடப்பிலுள்ள ஸ்ரீபார்த்தசாரதி அம்மனின் ஆலயத்தில் விஷேடு பூஜையில் கலந்து கொள்வது முக்கிய அம்சமாகும். அன்றைய தினங்களில் பொது ஸ்தாபனங்களிலும் பொங்கலிட்டு பூஜை செய்வது எமது ஊர் மரபாக உள்ளதைக் குறிப்பிடலாம். மங்களகரமான இந்நாட்களில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வது அந்த வருடம் முழுநாளும் எம்மவர் மனங்கள் மகிழ்வு பெறும் என்பதும் எம்மவரின் ஐதீகமாகும். நமது முன்னோர்கள் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர். ஒன்று சௌரமானம்.சௌரம் என்றால் சூரியன்.சூரியன் மேட ராசியிலிருந்து மீன ராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டது.

சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப்பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும்.இந்த வருடப்பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர்.மற்றது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும்.ஒரு பூர்வ பக்கப் பிரதமை முதல் அடுத்து வரும் அமாவாசை வரையுள்ள 30திதிகள் கொண்ட காலப்பகுதி சாந்திர மாதம் ஆகும்.இவ்வாறு ஒரு வருடத்தில் 13  அமாவாசைகள் வருகின்றன. சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும்.இதை வசந்தகாலம் என அழைப்பர்.

இலங்கை வாழ் சைவ இந்து மக்களும் பௌத்த சிங்கள மக்களும் ஒருமித்துக் கொண்டாடும் தனிச்சிறப்புப் பெற்றது புதுவருடப்பிறப்பு.அதனால் இது ஒரு தேசிய தின விழாவாகும். பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல் பெரியோரை வணங்கி ஆசி பெறுதல் பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருதல் ஆச்சரியமானதே. புத்தரை வழிபட்டாலும் அவர்களும் பிள்ளையார் முருகன் பத்தினித்தெய்வம் என கடவுள் நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள். உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்து நீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம். தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, வில்வம், வேம்பு, அறுகு, பால், கோரோசனை, கோசலம, கோமயம, பச்சைக்கற்பூரம,  குங்குமப்பூ, மஞ்சள், மிளகு,  திற்பலி, சுக்கு, விஷ்ணு கிராந்தி சீதேவியார் செங்கழுநீர் போன்ற மருத்துவக்குணம் கொண்டவற்றை சுத்த ஜலம் விட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய கஷாயமே மருத்து நீர் எனப்படும்.உடப்பு மக்கள் இந்த மருத்து நீரை ஸ்ரீபார்த்தசாரதி ஆலயத்திலிருந்து பெற்றுக் கொள்வார்கள். இந்த மருத்து நீரை மக்கள் முதல் நாளே தமது வீடுகளுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்று மருத்து நீர் வைத்து நீராடி புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.எமது கண்கண்ட தெய்வமாகவும் உலக இயக்க நாயகனாகவும் விளங்கும் சூரியனை அடுத்து வழிபடுதல் வேண்டும்.இல்லங்களில் சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கிப் படைத்து உண்பது வழக்கம்.சிங்கள மக்கள் ‘கிரிபத்’என்று பால்ப் பொங்கல் பொங்குவார்கள்.புது வருடம் பிறக்கின்ற நேரத்தில் கோவில்களில் சங்கிராந்தித்தீர்த்தம் இடம்பெறும்.

இதே நேரம் பாடசாலைகள் வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களிலும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுண்டு.வழிபாடுகள் முடிவடைந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று புதுவருட பலகாரங்கள் உண்டு மகிழ்வர்.புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பொழுது பழைய கடன்கள் ஏதும் இருந்தால் அவற்றைத் தீர்த்துக்கொள்வர்.நல்ல சுப வேளையில் பெற்றோர் கணவர் மற்றும் கைராசியுள்ளவர்களிடம் ஏனையவர்கள் கைவிஷேடம் பெற்றுக் கொள்வது ஒரு நல்ல பண்பாகும்.மேலும் சுப வேளையில் வியாபார ஸ்தலங்களில் பிள்ளையார் சுழிபோட்டு புதுக்கணக்கை தொடங்குவார்கள்.இதே நேரம் வங்கிகளிலும் புதுக்கணக்கை ஆரம்பிக்கும் போது பரிசுகளையும் வழங்குவார்கள்.பிள்ளைகள் சுபவேளை பார்த்து பாடத்தைப் படிக்கத் தொடங்குவார்கள்.மாதா பிதா குரு ஆகியவர்களை விழுந்து கும்பிட்டு ஆசிபெறுதல் மற்றொரு சிறந்த பண்பாகும்.சித்திரைமாதம் சிறுமாரி என மழை பெய்யத் தொடங்கும்.மலர்கள் பூத்துச் சொரியும்.பயிர்கள் செழிக்கும்.வசந்த ருதுவென சோழகக் காற்று வீசத்தொடங்கும்.வேப்பம்பூ சொரியும்.

தேசிய விளையாட்டுக்களில் போர்த் தேங்காய் அடித்தல் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு விளையாட்டாகும். இன்றைய காலகட்டத்தில் இவ்விளையாட்டு அருகி விட்டது. தற்போது வழுக்குமரம் ஏறுதல் கிளித்தட்டு, தயிர்முட்டி அடித்தல், மாட்டுவண்டிச் சவாரி, மஞ்சுவிரட்டுதல், தலையனை அடித்தல்; கயிறு இழுத்தல், போன்றவை தேசிய விளையாட்டுக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. உடப்புக் கராமத்தில் முட்டி உடைத்தல் யானைக்கு கண் வைத்தல் கிடுகு இழைத்தல் தேங்காய் துருவுதல் பனீஸ் உண்ணல் தெப்பம் வலித்தல் நீச்சல் போட்டி மரதன் ஓட்டம் கயிறு இழுத்தல் போன்றவையும் இடம்பெறும். இவ்வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இந்நிகழ்வுகள் இடம்பெற மாட்டாது. அண்மைக்கிராமமான பிங்கட்டிய வாழ் சகோதர மக்களில் உழவர்கள் சிலர் புதுவருடத்தன்று புதுவிதைப்புச் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.
(அன்று பிற்பகல் நாடி 23 விநாடி 20( மணி 3.26 ) முதல் அன்று முன்னிரவு நாடி 43விநாடி 20(மணி11.26)வரை விஷ புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் யாவரும் வைகறையில் துயிலெழுந்து மருத்து நீர் தேய்த்து சிரசில் இலவமியிலையும் காலில் விளாவிலையும் வைத்து ஸ்நானஞ் (குளித்து) செய்து பட்டுப் போன்ற வெண்மையான பட்டாடையாயினும் வெள்ளைக்கரை அமைந்த புதிய பட்டாடையாயினும் தரித்து முத்து வைரம் இழைத்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தனம் குங்குமம் பூசி நறுமலர் சூடி குலதெய்வ வழிபாடு செய்து தான தருமங்கள் செய்து குரு பெற்றோர்களை வணங்கி ஆசிபெற்று வருவது பயன் தரும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All