Puttalam Online
health

கொரோனா தொற்றை இலங்கை எவ்வாறு நிர்வகிக்கிறது? உலகளாவிய உதாரணத்தை அமைத்தல்

  • 7 May 2020
  • 452 views

கொரோனாவை கட்டுப்படுத்த உச்சபட்ச நடவடிக்கைகள்-  சர்வதேச இணையதளம் பாராட்டு

-மர்லின் மரிக்கார்-

இந்து சமுத்திரத்தின் முத்து என்றழைக்கப்படும் இலங்கையானது ஆயிரக்கணக்கானோர் மத்தியில் மிகவும் பிரபல்யமானதோர் இடமாகும். தனித்துவம் மிக்க இத்தீவு முதல் தர சுற்றுலா தலங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதேநேரம் இந்நாட்டின் பொதுச்சுகாதார ஏற்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் உள்ளதோடு சுகாதார சேவை அனைத்து குடிமக்களுக்கும் முற்றிலும் இலவசமானதாகும். இங்கு கவனம் செலுத்த வேண்டிய விடயம் யாதெனில், நோய்த் தவிர்ப்பு பராமரிப்பு திட்டம் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாகும். இது தொற்று நோய்ச் சூழலிலும் சிறப்பானதும் பலமானதுமான முடிவுகளை மேற்கொள்ள பக்கதுணையாக அமைந்திருக்கின்றது.

இந்நாட்டில் ஆரம்ப பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வரையும் கடந்த 60 வருடங்களுடக்கும் மேலாக இலவச கல்வி திட்டத்தின் ஊடாகவே கல்வி அளிக்கப்படுகின்றது. ஆயிரக்கணக்கான தகுதிமிக்க சுகாதார பராமரிப்பு தொழில் வாண்மையாளர்களும் மருந்தாளர்களும் நாட்டிலுள்ள மருத்துவ பீடங்களின் ஊடாக பல தசாப்தங்களாகச் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். அவை இலவசமாகவே இடம்பெறுகின்றது. அத்தோடு நில்லாது டொக்டர்களும் மருந்தாளர்களும் பட்டப் பின்படிப்பு பயிற்சியையும் மருத்துவ கல்வியையும் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பொது சுகாதார நிறுவனக் கட்டமைப்பு காணப்படுகின்ற அதேநேரம் அரசாங்க சுகாதார பராமரிப்பு சேவை மாத்திரமலலாமல் தனியார் வைத்திய சேவையும் இருக்கவே செய்கின்றன. என்றாலும் அரசாங்கமும் பொது சுகாதார பராமரிப்பு ஒழுங்குபடுததல் ஆணைக்குழுவும் தனியார் மருத்துவ சேவை தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அதேநேரம் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வலுவான சமூக சுகாதார திட்டத்தை இந்நாடு தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இதன் பயனாக மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடக்கூடியளவுக்கு இந்நாட்டின் தாய் சேய் மரண வீதம் இப்பிராந்தியத்தில் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது. இதனை சுகாதாரத் தரவுகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இப்பிராந்தியத்தில் இலங்கையரின் எதிர்பார்க்கப்படும் உயிர்வாழும் கால எல்லையும் மிக அதிகமாகும். இந்நாட்டு மக்களுக்கு நூறு வீதம் நோய்த்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதோடு விரிவாக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு மருந்தேற்றல் அடங்கலாக அனைத்து சிகிச்சைகளும் இலவசமாகவே மக்களுக்கு அளிக்கப்படுகின்றது.

இவ்வாறு இந்நாட்டு சுகாதார சேவையின் எதிர்கால கொள்கைகளுக்கான ஒழுங்குபடுத்தல்களையும் வழிகாட்டல்களையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது உலகலாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ், சீனாவின் உஹான் நகரில் 2019 டிசம்பர் மாத இறிதிப்பகுதியில் தோற்றம் பெற்றதை் தொடர்ந்து, அதன் அச்சுறுத்தலைத் தவிர்ப்பது தொடர்பில் இலங்கை விழிப்புடன் இருக்கவும் செயற்படவும் ஆரம்பித்தது. குறிப்பாக இந்நாட்டில் சுகாதாரத் துறையினருக்கு மேலதிகமாக முப்படையினரும் பொலிஸாரும் தேசிய உளவு பிரிவினரும் மிகுந்த விழிப்புடன் வைக்கப்பட்டனர். நாட்டுக்குள் வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தையும் இத்தொற்று அச்சுறுத்தலுக்கான சாதகத்தன்மைகளையும் கண்காணிக்கவென விமான மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிபுணத்துவ குழுக்களும் விஷேடமாக அமைக்கப்பட்டன.

இவ்வாறான சூழலில் சீனாவின் ஹுபே மாகாணத்திலிருந்து சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்த 43 வயது பெண்மணியொரவர் இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளராக 2020.01.27 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அவர் உடனடியாக அங்கொட தொற்று நோய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து முழுமையாகக் குணமடைந்த அவர் சீனாவுக்கு திரும்பிச் சென்றார்.

இவ்வாறான சூழலில் சீனாவில் இவ்வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட உஹான் நகரில் சிக்குண்டிரு்நத 33 இலங்கை மாணவர்களையும் குடும்பத்தினரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் விஷேட ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டன. இதன் நிமித்தம் விஷேட விமானத்தில் மீட்பு குழுவினரை உஹானுக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்த முதலாவது நாடு இலங்கையாகும். இப்பணியை வெற்றிகரமாக மேற்கொண்ட இலங்கை விமானமோட்டி தலையிலான குழுவினரை ஜனாதிபதி வரவழைத்து பாராட்டி ஊக்கமளித்தார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் விஷேடமாக அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன. இக்கண்காணிப்பின் ஊடாக இவர்களில் எவரும் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதோடு அவர்களது இல்லங்களுக்கு அவர்கள் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

என்றாலும், பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியாகும் போது சீனாவுக்கு வௌியே தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இவ்வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியது. இதேவேளை இத்தாலியிலும் தென் கொரியாவிலும் இலங்கையர் தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பதையும் மறந்து விடமுடியாது. இந்த சூழலில் உலகலாவிய மற்றும் பிராந்திய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இம்மூன்று நாடுகளிலும் இருந்து நாட்டுக்குள் வருகை தருகின்றவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பதன் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்தது. அந்தடிப்படையில் முதலில் இரண்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. அம்மையங்களுக்கு இம்மூன்று நாடுகளில் இருந்து வருகை தருபவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்து கண்காணிக்கும் பணிகள் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு வருகைதந்தவர்கள் செல்லத் தொடங்கினர். அவ்வாறு சென்றவர்கள் தம் கண்காணிப்பு காலத்தை நிறைவு செய்தபடி தற்போது இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.இருந்த போதிலும மார்ச் 10 ஆம் திகதி இலங்கையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான இலங்கையின் முதலாவது பிரஜை இனம் காணப்பட்டார். உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் 52 வயதுடைய இந்நபர் இத்தாலி நாட்டு உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டியாக சென்றிருந்த வேளையில் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை ஆரம்ப விசாரணைகளில் உறுதியானது. அதனைத் தொடர்ந்து அந்நபர் தொடர்புபட்ட சகலரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அதேநேரம் பாடசாலைகளுக்கும் உடனடியாக விடுமுறை வழங்கப்பட்டது. அத்தோடு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதேவேளை இந்நாட்டின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் மார்ச் 12 இல் அடையாளம் காணப்பட்டார். அவர் தொடர்பு கொண்டவர்களின் ஊடாகவே இத்தொற்றுக்கு அவர் உள்ளாகியுள்ளார் என்பதும் ஆரம்ப விசாரணைகளிலேயே உறுதியானது. அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் கந்தகாடு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் மத்தியில் இவ்வைரஸ் தொற்று பதிவாகத் தொடங்கியது. இவர்கள் இத்தாலியிலிருந்து வருகை தந்திருந்தவர்களாவர்.

இந்த சூழலில் கைகழுவுதல் உள்ளிட்ட தனிப்பட்ட சுகாதார பழக்கவழக்கத்தை உச்சளவில் கடைபிடிக்குமாறும் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வீடுகளில் இருக்குமாறும் அதுவே இவ்வைரஸ் பரவுதலைத் ​தடுப்பதற்கு சிறந்த மார்க்கம் என குறிப்பிட்டு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. அத்தோடு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்களை அமைக்கும் பணிகளை முப்படையினரும் இராணுவத்தினரும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் திகதி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் (சார்க்) தலைவர்களது வீடியோ கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது, தெற்காசியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்தார். அத்தோடு வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வருகைதரும் பயணிகளைத் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்தோடு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை இணையதளத்தின் ஊடாக வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுககு ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 16 ஆம் திகதி பொதுவிடுமுறை திகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. என்றாலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுவிடுமுறையை ஒரு வாரகாலத்திற்கு நீடிக்குமாறும் நாட்டுக்குள் பிரவேசிக்கக்கூடிய சகல துறைமுகங்களையும் மூடுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த வகையில் மார்ச் 17 – 19 வரையான மூன்று நாட்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டதோடு மக்களின் நலன்கருதி சுகாதாரம், வங்கிகள், உணவு விநியோகம் மற்றும் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டது. இக்காலப்பகுதியிலும் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் புதிது புதிதாகப் பதிவாகத் தொடங்கினர்.

இதேவேளை பெப்ரவரி மாதத்தின் பின்னர் நாட்டுக்குள் வருகை தந்தவர்களில் குறிப்பிடத்தக்களவானோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பைத் தவிர்த்து மக்கள் மத்தியில் மறைந்திருக்கத் தொடங்கினர். இந்நிலையில் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி மார்ச் 1 – 15 வரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் இருந்து நாட்டுககுள் வருகை தந்தவர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. அவ்வேண்டுகோளை மீறியும் ஒரு சிலர் மக்கள் மத்தியில் மறைந்திருக்க முயற்சித்த போது அவர்கள் தொடர்பான புகைப்படங்களை ஊடகங்களில் வௌியிட்டு மக்களின் உதவியையும் பொலிஸார் கோரினர். அத்தோடு அனைத்து சாத்தியமான தொடர்புகளையும் பயண விபரங்களையும் கொண்டுள்ளவர்களைப் பதிவு செய்யும் பணிகளையும் பொலிஸார் ஆரம்பித்தனர்.

இவை இவ்வாறிருக்க , ஜனாதிபதி கடன்களை உடனடியாகத் திருப்பி செலுத்த முடியாதபடி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் துறையினர் மீது அதிக சுமையை செலுத்த வேண்டாம் என்றும் இவர்கள் கடன்களைத் திருப்பி செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமாறும் வங்கித துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்தோடு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேளையிலும் வங்கிகளைத் திறந்து பணிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

மேலும் கொரோனா தொற்று அவசர நிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் நாட்டிலுள்ள சுமார் 24 வைத்தியசாலைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கான விடுமுறையை மேலும் எட்டு நாட்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டது. இது வீட்டிலிருந்து வேலைசெய்வதற்கான காலமாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு மக்கள் கூடுவதையும் நடமாடுவதையும் கட்டுப்படுத்துவதற்காக முழு நாட்டிலும் ஊரடங்கு சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. தலதா மாளிகைப் பிரதேசத்தையும் வளாகத்தையும் தொற்று நீக்கம் செய்யும் பணிகளை விமானப்படையினர் முன்னெடுத்தனர். அத்தோடு பஸ் வண்டிகள் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் தொற்று நீக்கம் செய்யும் பணிகளும் முப்படையினரால் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டுள்ள அதேநேரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் கடந்த வாரம் முதல் மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தவிர்ந்த ஏனைய நோயாளர்களின் நலன்கருதி கடந்த புதன்கிழமை முதல் ஊரடங்கு வேளயிலும் மருந்தகங்களைத் திறந்து வைக்க சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு ஏற்ப பொலிஸார் அனுமதி வழங்கினர். இருப்பினும் அந்த அனுமதியை மக்கள் ஒழுங்குமுறையாகப் பாவிக்கத் தவறிதால் மருந்தகங்களை மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு தேவையான மருந்துகளையும் வீட்டுக்கு கொண்டு வந்து வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தொற்றுக்கு குளோரோக்குயின் மாத்திரையைப் பாவிக்கலாம் என்ற கருத்து பரவியதைத் தொடர்ந்து அம்மாத்திரையை விருப்பப்படி பாவிக்க வேண்டாமென அரசாங்கம் பொதுமக்களை உடனடியாக வலியுறுத்தியது. அத்தோடு நாட்டு மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் தேவைகள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவென முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் விஷேட செயலணியொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். அச்செயலணி மக்களுக்கு தேவையான பொருட்களை வீட்டுக்கு வீடு கொண்டு சென்று வழங்கும் விஷேட திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் சர்வகட்சி தலைவர்கள் கூட்டமொன்று கூட்டப்பட்டு கடந்த வாரம் கலந்துரையாடப்பட்டன.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு பணிகளுக்கு தம் கட்டடங்களைப் பயன்படுத்துமாறு பல முனனணி சுற்றுலா ஹோட்டல்களும் பல தனியார் கட்டடங்களின் உரிமையாளர்களும் சுயமாக முன்வந்து அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர். எனினும் மார்ச் 27 ஆம் திகதி வரையும் 106 பேர் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வைரஸ் தொற்று காரணமாக இற்றைவரையும் எவரும் இந்நாட்டில் உயிரிழக்கவில்லை.

இவ்வாறு இவ்வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுபடுத்தவென விரிவான அடிப்படையிலான நடவடிக்கைகள் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் Healthreviewglobal.com என்ற இணையதளம் எழுதியுள்ள கட்டுரையொன்றில் ‘கொரோனா தொற்றுக்கு முகம் கொடுத்துள்ள பல நாடுகளின் பிரதிபலிப்புகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். என்றாலும் இந்த உலகலாவிய தொற்றுக்கு எதிராக விரைவாகவும் ஆக்கபூர்வமாகவும் விரைவாகவும் அளிக்கப்படும் பிரதிபலிப்புக்காக இலங்கையை நாம் தெரிவு செய்ய முடிவு செய்தோம் என்றும் இந்நாடு பொது சுகாதார துறையில் மேற்கொள்ளும் முதலீட்டின் முக்கியத்துவத்தையும் நாம் அறிந்து கொண்டோம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே கொரோனாவுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தில் இன, மத. கட்சி அரசியல் பேதங்களுககு அப்பால் நாட்டு மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அனைத்து மக்களும் ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் உடனடித் தேவையாகும்.

(இந்தக் கட்டுரை 29.3.2020 அன்று தினகரன் வார மஞ்சரியில் 3 ஆம் பக்கத்தில்  பிரசுரமானது.)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All