Puttalam Online
health

கொவிட் – 19 : புகைபிடிப்பவர்கள் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்து

  • 7 May 2020
  • 250 views

-மர்லின் மரிக்கார்-

இன்றைய நவீன டிஜிட்டல் அறிவியல் யுகத்தில் கொவிட் – 19 என்கிற கொரோனா வைரஸ் மிகவும் பயங்கரமான தொற்று நோயாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. வெற்றுக்கண்களுக்கு புலப்படாத இவ்வைரஸ் மனித ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் தாக்கம், பாதிப்பு காரணமாக முழு உலக மக்களதும் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதோடு பொருளாதார ரீதியிலான சவால்களும் தலைதூக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. இவ்வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உற்பத்தி துறையில் ஸ்தம்பித நிலை ஏற்படக்கூடிய நிலைமையும் நிலவவே செய்கின்றது.

இவ்வாறான நிலையில் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் பதிவாகத் தொடங்கிவிட்ட இவ்வைரஸ், நேற்று வரையும் (01.04.2020) உலகில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளதோடு சுமார் 38 ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஆனாலும் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேரளவில் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில் உலகமும் முழுவதும் பெரும் பீதி நிலவும் இன்றைய சூழலில் இலங்கையில் இவ்வைரஸ் தொற்றுக்கு நேற்று வரையும் 143 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் 18 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இவ்வாறு மனித ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வைரஸ் தொற்று சுவாசத் தொகுதியைப் பிரதானமாகப் பாதிக்கும் ஒரு நோயாகும். குறிப்பாக ‘இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் சுவாசத் தொகுதியில் தடித்த சளி வளர இது வழிவகுக்கும். அதுவே சுவாச நெருக்கடி ஏற்பட முக்கிய காரணமாக அமையவதாக இவ்வைரஸ் தோற்றம் பெற்ற சீன நாட்டு தொற்று நோயியல் நிபுணர்கள் கண்டுபிடித்து அறிவித்திருக்கின்றனர்.

அந்த வகையில் கொரோனா வைரஸானது நுரையீரல் அடங்கலான சுவாசத் தொகுதியையே முக்கியமாகப் பாதிக்கக்கூடியதாக விளங்குகின்றது. அதனால் புகைப்பிடித்தல் பழக்கம் கொண்டவர்கள் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தல் மிக அதிகமாகும். அதன் காரணத்தினால் தான் உலக சுகாதார ஸ்தாபனம் புகைப்பிடித்தல் பழக்கம் கொண்டவர்கள் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியப்பாடு மிக அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு இப்பழக்கம் கொண்டவர்களுக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அதன் தாக்கமும் பாதிப்புக்களும் கூட மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் அந்த ஸ்தாபனம் தெரிவித்திருக்கின்றது.

ஏனெனில் புகைபிடிப்பவர்களின் நுரையீரல் உள்ளிட்ட சுவாசத் தொகுதி புகைபிடிக்கும் பழக்கமற்றவர்களின் சுவாசத்தொகுதியை விடவும் பலவீனமாக இருக்கும். அது இப்பழக்கம் கொண்டவர்களை இவ்வைரஸ் தொற்றிக்கொள்ளப் பெரும் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது. அதனால் தான் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இதன் அச்சுறுத்தல் மிக அதிகம் என மருத்துவ நிபுணர்களும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதேநேரம், இந்த கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் கடத்தப்படும் பிரதான ஊடகமாக கைகள் விளங்குகின்றது. அதனால் ‘புகைபிடிக்கும் போது கைகளை அடிக்கடி வாயின் அருகே கொண்டு செல்ல நேரிடும். விரல்கள் உதடுகளில் தொடுபடும். புகைபிடிக்கும் பொருட்களை பரிமாறுவதும் கைகளால் தான் இடம்பெறும். இவை இவ்வைரஸ் உடலுக்குள் செல்ல வசதியாக அமைந்து விடுகின்றன’ என்று இலங்கை உள நல மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் தான் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் இன்றைய காலகட்டத்தில் புகைப்பிடித்தல் பழக்கத்தைக் கைவிடுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றன.

இந்த சூழலில் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி டப்ளியூ. ராஜபக்‌ஷ, ‘கொவிட் – 19 வைரஸுக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் அதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் சிகரெட் விற்பனையைத் தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.

அதேநேரம் புகைபிடித்தல் பழக்கம் கொண்டவர்கள் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானால் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து விபரித்துள்ள டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ ‘கொரோனா தொற்றினால் ஏற்படும் தீவிர சுவாசத் தொகுதி பாதிப்பு அறிகுறிகள் புகைபிடிக்காதவர்களை விடவும் புகைபிடிப்பவர்களுக்கு 2.5 மடங்கு அதிகம் என்றும் இவர்களுக்கு தீவிர கண்காணிப்பு சிகிச்சையும் செயற்கை சுவாசமும் மிக அவசியம் பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தற்போதைய சூழலில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கவென எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் ஊடாக சிகரெட்டுகளோ மதுபானமோ வழங்க இடமளிக்க வேண்டாம்’ என்று அவர் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இவ்வாறு சுவாசத் தொகுதிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் நோயாக கொரோனா தொற்று காணப்படுவதால் தான் புகைப்பிடித்தலில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றது. ஏனெனில் இலங்கையில் 15 வயதுக்கு மேற்பட்ட 16 இலட்சத்து 60 ஆயிரத்து 900 பேர் புகைப்பிடித்தல் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான மத்திய நிலையம் (அடிக்) குறிப்பிட்டிக்கின்றது. இது சாதாரணதொரு எண்ணிக்கை அல்ல. அதன் காரணத்தினால் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படுவது மிக அவசியமான விடயமாகும்.

ஏனெனில் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ஏற்கனவே இந்நாட்டில் வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இது நாளொன்றுக்கு 55 பேர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான மத்திய நிலையம் மதிப்பிட்டிருக்கின்றது. இம்மரணங்களுக்கு புகைப்பிடித்தல் பழக்கம் காரணமாக ஏற்படும் தொற்றா நோய்கள் தான் முக்கிய காரணமாக அமைந்து வருகின்றன.

ஆனால் கொவிட் – 19 தொற்று சுவாசத் தொகுதியோடு சம்பந்தப்பட்ட நோயாக இருப்பதால் அதன் அச்சுறுத்தல் புகைபிடிக்கும் பழக்கமற்றவர்களை விடவும் இப்பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு தான் மிக அதிகம். அத்தோடு அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பரகளும் கூட இதன் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே நேரிடும். அதனால் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் மத்தியில் கொரோனா தொற்று தீவிரமடையக் கூடிய அபாயமும் காணப்படவே செய்கின்றது.

ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகின்ற இந்த சூழலில் புகைப்பிடித்தல் பழக்கத்தைக் கைவிடுவதிலும் அப்பழக்கத்திருந்து தவிர்ந்து கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது நாட்டுக்கும் மக்களுக்கும் அளிக்கும் பாரிய சேவையாகவும் பங்களிப்பாகவும் அமையும்.

நன்றி – தினகரன் (2.4.2020)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All