Puttalam Online
health

‘கொரோனா; இது உயிரியல் ஆயுதமா? மருத்துவ பேராசிரியர்களின் கருத்து என்ன?’

  • 7 May 2020

-மர்லின் மரிக்கார்-

இன்றைய காலகட்டத்தில் சூரியன் உதித்தது முதல் அது மறைந்த பின்னரும் கூட நீண்ட நேரம் தினமும் அடிக்கடி கலந்துரையாடப்படுகின்ற ஒரு சொல் கொரோனா என்கிற கொவிட் – 19 ஆகும். அந்தளவுக்கு கொடூரமாகவும் பரயங்கரமாகவும் அதன் தாக்கமும் பாதிப்புக்களும் அமைந்திருப்பதே அதற்கான காரணம். கண்களுக்குப் புலப்படாத இந்நுண்ணுயிர் நவீன அறிவியல் டிஜிட்டல் யுகத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றது.

2019 டிசம்பர் மாதம் பிற்பகுதியில் சீனாவின் உஹான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் – 19 வைரஸ் அண்டாட்டிக்கா தவிர்ந்த அனைத்து கண்டங்களுக்கும் பரவிவிட்டது. மிகக் குருகிய காலப்பகுதிக்குள் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இவ்வரைஸினால் நேற்று முன்தினம் வரையும் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 60 ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துள்ள இவ்வைரஸின் தொற்றுக்கு உள்ளானவர்களில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் இலங்கையில் இவ்வைரஸ் தொற்றுக்கு நேற்று வரையும் 159 பேர் உள்ளாகியுள்ளதோடு ஐவர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் முழுமையாக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.

என்றாலும் இவ்வைரஸின் அச்சுறுத்தலும் பரவுதலும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதனைக் கட்டுப்படுத்தவோ தவிர்த்துக்கொள்ளவோ இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வரவுமில்லை.

இவ்வாறு முழு உலகுக்கும் பெரும் அச்சறுத்தலாக விளங்கி வரும் இவ்வைரஸ் கருப்பன் – வெள்ளையன் என்றோ ஏழை – பணக்காரன் என்றோ, படித்தவன்- பாமரன் என்றோ இன, மத, மொழி, பிரதேச ரீதியிலோ வேறுபாடுகள் பார்ப்பதில்லை. அது முழு மனித சமூகத்திற்குமே பாரிய அச்சுறுத்தலாகவே திகழுகின்றது. இதன் விளைவாக வளர்முக நாடுகள் மாத்திரமல்லாமல் வளர்ச்சியடைந்த நாடுகளும் கூட தினறிக் கொண்டிருக்கின்றன. அதன் காரணத்தினால் முழு உலக மக்களும் கிலி கொண்டுள்ளனர். இவ்வைரஸின் பரவுதலைக் கட்டுப்படுத்த முடியாதா? அதன் தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிகள் தான் என்ன? என்றவாறான வினாக்கள் பரவலாகக் காணப்படுகின்றது.

இது ஆளுக்காள் பரவும் ஒரு தொற்று நோயாகும். இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் வௌிப்படும் சளித்துகள் ஊடாக வௌியாகும் இவ்ரைவஸ் காற்றின் ஊடாகவே பெரும்பாலும் பரவுகின்றது. அதாவது இவ்வாறு வௌியாகும் இவ்வைரஸ் காற்றில் சில மணித்தியாலயங்களும் சுற்றுச்சூழலிலும் குறிப்பாக பிளாஸ்ரிக், உருக்கு, வெண்கலப் பொருட்கள் மற்றும் கடதாசிகளில் சில தினங்கள் வரையிலும் உயிருடன் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவ்வாறான பொருட்களைத் தொடும் போதும் பாவிக்கும் போதும் அவற்றைப்பிடிக்கும் போதும் அவை கைகளில் தொற்றிக் கொள்கின்றது. அவ்வாறு தொற்றிக் கொள்ளும் இவ்ரைவஸ் அதே கைகளால் முகம், வாய், கண், மூக்கு என்பவற்றை தொடும் போது உடலுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை அது இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றது.

அதனால் தான் இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை உச்சளவில் பின்பற்றி சமூக இடைவௌியை பேணியை படி வீடுகளில் இருக்கும் படி பரவலாக வலியுறுத்தப்படுகின்றன. அதற்கான நடவடிக்கைகளும் பரந்தடிப்படையில் முன்னெடுக்கக்கப்பட்டு வருகின்றன. அதுவே இவ்வைரஸ் பரவுதலைக்கட்டுப்படுத்துவதற்கான இப்போதைக்குள்ள சிறந்த மார்க்கம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

இடைநிலை இணைப் பேராசிரியரும் மருத்துவ ஆராய்ச்சியாளருமான நமசிவாயம் பாண்டியன்
கியோட்டோ பல்கலைக்கழகம்
ஜப்பான்.

இந்த சந்தப்பத்தில் ஜப்பான் நாட்டின் கியோட்டோ பல்கலைக்கழக இடைநிலை இணைப் பேராசிரியரும் மருத்துவ ஆராய்ச்சியாளருமான நமசிவாயம் பாண்டியன் இவ்வைரஸ் தொடர்பில் குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் பெரிதும் கவனம் செலுத்தப்பட வேண்டியதொன்றாகும். அதாவது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உலகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் ஒவ்வொருவரும் நோயெதிர்ப்புசக்தியை வலுவான நிலையில் பேணுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக போதியளவு ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். உள அமைதியைப் பேணவென மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். விட்டமின் – டி யைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வெயிலில் நடமாட வேண்டும். விட்டமின் – சி பெற்றுக்கொள்ளும் வகையில் எலுமிச்சைசாறு போன்றவாறானவற்றைப் பருக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

என்றாலும், ‘இது ஆட்களை குறைக்கும் நோக்கிலான உயிரியல் ஆயுதம் என்றும் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் கொரோனா வைரஸ் தொடர்பில் 2006 – 2012 வரை விஷேட ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள கலாநிதி பவித்ரா வெங்கட்கோபாலன் இக்கூற்றுக்களை முற்றாக மறுத்துள்ளார். ‘இது ஆய்வுகூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல. அவ்வாறு உருவாக்கப்படும் வைரஸ் இவ்வாறு பலமாகவும் வீரியமாகவும் இருக்காது. இது முற்றிலும் இயற்கையான வைரஸ். வௌவால் போன்ற விலங்குகளில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டு ஆளுக்கு ஆள் பரவும் நிலையை அடைந்திருக்கின்றது என்பது விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள் மூலம் 80 வீதத்துக்கும் மேல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது’ என்றும் கலாநிதி பவித்ரா குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வைரஸின் தோற்றம் தொடர்பில் இதே கருத்தை இடைநிலை இணைப் பேராசிரியரான மருத்துவ ஆராய்ச்சியாளர் நமசிவவாயம் பாண்டியனும் இலங்கையைச் சேர்ந்த பிரித்தானியாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளவரும் ஐக்கிய இராச்சியத்தின் டொன் காஸ்டர் ரோயல் இன்பேமரியின் அவசர மருத்துவம் தொடர்பான நிபுணரும் இணைப் பேராசிரியருமான நௌஸாத் கானும் தெரிவித்திருக்கின்றனர்.

கலாநிதி பவித்ரா வெங்கட்கோபாலன்
அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் 2006 – 2012 வரை விஷேட ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
தமிழ்நாடு

‘இந்த கொரோனா வைரஸ் குடும்பம் 1950 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. இக்குடும்பதை சேர்ந்த ஆறு வகையான வைரஸ்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொவிட் – 19 இக்குடும்பத்தின் ஏழாவது வைரஸ்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கலாநிதி பவித்ரா.
இதேவளை இவ்வைரஸ் மனித உடலுக்குள் சென்றதும் அது தொழிற்படும் விதம் தொடர்பில் அவசர மருத்துவம் தொடர்பான மருத்துவ நிபுணரும் இணைப் பேராசிரியருமான நௌஸாத் கான் இவ்வாறு விபரித்திருக்கின்றார்.

‘கொரோனா சுவாசத் தொகுதி ஊடாக உடலுக்குள் குறிப்பாக நுரையீரலுக்குள் சென்றடைந்ததும் நோயெதிர்ப்பு சக்தியுடன் மோதல் நிலை ஏற்படும். இம்மோதலின் போது நோயெதிர்ப்பு சக்தி இவ்வைரஸை மிகைக்கும் நிலை ஏற்படும் போது இவ்வைரஸுக்கு எதிரான சக்தி உடலில் உருவாவதோடு வைரஸின் பெரும்பகுதியும் அழிவடைந்துவிடும். இவ்வைரஸுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புச்சக்தி உடலில் சில காலத்திற்கு காணப்படும். அதனால் இவ்வைரஸ் தாக்கம் மீண்டும் ஏற்பட்டாலும் அது பெரிய தாக்கமாக இருக்காது’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மோதல் நிலை நிலவும் போது தான் தொண்டை நோ, காய்ச்சல், வரண்ட இருமல் போன்றவாறான அறிகுறிகள் வௌிப்படும். ஏனெனில் நுரையீரலில் தான் வாயு பரிமாற்றம் இடம்பெறுகின்றது. அதாவது ஒட்சிசன் உடலின் உள்ளே சென்று காபனீரொட்சைட்டு வௌியேற்றப்படுகின்றது. இச்செயற்பாட்டில் இவ்வைரஸின் செயற்பாடுகள் அதிகம் தாக்கம் செலுத்துமாயின் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் போதியளவு ஒட்சிசன் சீராகக் கிடைக்கப்பெறாது. அதனால் அவற்றின் செயற்பாடுகள் பலவீன நிலையை அடையும். இதன் விளைவாகவே செயற்கை சுவாசம் அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

அவசர மருத்துவம் தொடர்பான நிபுணரும் இணைப் பேராசிரியருமான நௌஸாத் கான்
டொன் காஸ்டர் ரோயல் இன்பேமரி
ஐக்கிய இராச்சியம்.

இது தொடர்பில் பேராசரியர் நௌஸாத் கான், ‘இவவைரஸுக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் இடையிலான மோதல் நிலையின் போது நோயெதிர்ப்பு சக்தியை இவ்வைரஸ் மிகைக்குமாயின் செயற்கை சுவாசம் கட்டாயம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுவே உயிராபத்து நிலைக்கும் இட்டுச்செல்லக்கூடியதாக அமைகிறது. ஏனெனில் இவ்வைரஸுக்கு எதிராகப் போராட உடலில் எவ்வித எதிர்ப்பு சக்தியும் இல்லாதிருப்பதே இதற்கு காரணமாக அமைகின்றது’ என்றும் கூறியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்தின்படி, ‘இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 வீதமானோருக்கு காய்ச்சல், இருமல் சிலருக்கு மிதமான போன்ற நிமோனியா ஏற்படலாம். 14 வீதமானோருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதோடு 06 வீதமானோருக்கு நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புக்கள் செயலிழக்கலாம் .

ஆனாலும் இவ்வைரஸின் ஆக்கிரமிப்பு உடலில் அதிகரிக்கும் போது தான் மரணம் ஏற்படுகின்றது. அத்தோடு அவ்வுடலில் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் இவ்வைரஸ் பலகிப்பெரும் தன்மையைக் கொண்டிருப்பதோடு உடலின் சகல அவயவங்களிலும் அதாவது தோல், வாய், மூக்கு, மூச்சுவிடும் தூவாரங்கள் என்றபடி எல்லா இடங்களிலும் காணப்படும். அதுவும் தீவிர தொற்று நிலையில் தான் இவ்வைரஸ் உடலில் காணப்படும். அத்தோடு இவ்வைரஸின் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவரின் உடலில் தன் உடல் கட்டமைப்பை மாற்றி கொள்ளும் மிகப்பயங்கர பண்பையும் கொண்டிருக்கின்றது இவ்வைரஸ். இதனால் தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறப்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை’ என்று குறிப்பிட்டிருக்கின்றார் போராசிரியர் நௌஸாத் கான்.

ஆகவே மிகப் பயங்கரமான இந்த வைரஸின் சவாலை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் சகலரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அதுவே இன்றைய அவசரத் தேவையாகும். அத்தோடு அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை உச்ச மட்டத்தில் பேணியபடி தம் நோயெதிப்பு சக்தியைப் பலமிக்கதாகப் பேணிக்கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்தவும் தவறக்கூடாது. இந்த இருபக்க நடவடிக்கைகளின் ஊடாக இவ்வைரஸை எதிர்கொள்ளும் போது அதன் பரவுதலையும் தாக்கத்தையும் பாதிப்பையும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுவடிக்கூடம்View All