Puttalam Online
social

‘வைரஸ்’ ஆல் ‘ஸ்ட்ரஸ்’ ஆகாமல் தனிமையில் ஒரு பெருநாள்…

  • 17 May 2020
  • 340 views

-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்-

 இரகசியமாக நோன்பு நோற்று பகிரங்கமாக பெருநாள் கொண்டாடுவதுதான் வழக்கம். இம்முறை தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அனைத்தும் வந்து செல்கின்றன. வைரஸ் பிரச்சினையால் வந்த வினையாக இருந்தபோதிலும் ‘வை ஸ்ட்ரஸ்?’ என்று யாரும் பார்த்துக் கேட்காமல் இன்ஷா அல்லாஹ் எமது பெருநாளை நாம் கொண்டாடலாம். எப்படி என்கிறீர்களா? சிறிது சிந்திப்போம்… வாருங்கள்.

நோன்புப் பெருநாளின் நோக்கங்கள்தாம் எமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவையாகும். அவற்றில் ஓர் அவதானத்தை செலுத்திவிட்டு வருவோம்.

அத்தகைய நோக்கங்களுள் ஒன்று குளித்து, புத்தாடைகளணிந்து, நறுமணம் பூசி, சுவையான உணவுகளை உட்கொண்டு, மகிழ்ச்சியோடு இருப்பதாகும். அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவர்.

இவற்றுக்கு முன்பதாக பெருநாள் இரவை ரமழானின் இரவுகள் போன்றே முடியுமானவரை நற்செயல்களால் அலங்கரித்து, விடியும்போது நோன்பு மாதத்தில் நாம் செய்த நற்கருமங்கள் அனைத்திற்குமான வெகுமதிகளையும் சன்மானங்களையும் அல்லாஹ்விடமிருந்து கைநிறைய வாங்கி, எமது நிலையான வைப்பில் இட்டுவைப்பது இரண்டாவது நோக்கமாகும்.

அத்தகைய சன்மானங்களை அதிகரித்துக் கொள்வதற்காக வசதி படைத்தவர்கள் கூடவே ஸகாத் மற்றும் ஸகாதுல் பித்ர், ஸதகாக்கள் என்பவற்றையும் கொடுத்து, ஏழை எளியவர்களின் பெருநாளையும் மகிழ்சிச்சிக்குரியதாக ஆக்கியிருப்பார்கள். அப்போது பெருநாள் மகிழ்ச்சியை இழந்தவர்களாக சமூகத்தில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

மூன்றாவது நோக்கம் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவருமாக அதிகாலையிலேயே மைதானம் ஒன்றில் கூடி, தக்பீர் முழங்கி, பெருநாள் தொழுகையையும் நிறைவேற்றி, உறவினர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என, முடியுமான அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறி, குசலம் விசாரித்து, முஆனகாவும் செய்து, விடைபெற்றுக் கொள்வதாகும். இதன் மூலம் சகோதரத்துவ வாஞ்சை அதிகரித்து, உறவுகள் மலர்ந்து, ஒரு புத்துணர்வு பிறக்கிறது.

இந்தப் புத்துணர்வை மற்றுமொரு உணர்வோடு இணைத்துப் பாருங்கள் நான்காவது நோக்கமும் புரியவரும்.

ரமழான் அள்ளித் தந்த ரஹ்தமத்துக்களை தமதாக்கி, அது சுமந்து வந்த மஃபிரத்தை (பாவ மன்னிப்பை) இறைஞ்சிப் பெற்று, அது பரிசளித்த நரக விடுதலைக்குரியவர்களாகி, நாளை மறுமையில் ரய்யான் என்ற வாசலால் சுவனம் நுழைந்து, அங்கே ஒருவரை ஒருவர் ஆரத்தழுவுகின்ற பாக்கியமும் கிடைக்கப் பெறுமாயின் பெருநாளின் புத்துயிர்ப்பு பன்மடங்காதா? எனக்கும் எமக்கும் எல்லோருக்கும் அந்தப் பாக்கியம் கிட்டுமாக!

இதுதான் உண்மையில் எம்மனைவருக்குமான ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

இத்தகைய வாழ்த்துக்களுக்கும் பாக்கியங்களுக்கும் வழிவகுக்கும் பாதையை அல்குர்ஆன் காட்டித் தருகின்றது. அது ஐந்தாவது நோக்கத்தையும் புரியவைக்கிறது.

 ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون

 “நீங்கள் ரமழானின் பிறைகளைக் கணக்கிட்டு, நோன்பை பூர்த்தி செய்து, அல்லாஹ் உங்களுக்கு (அல்குர்ஆனை இறக்கி) நேர்வழி காட்டியதற்காக தக்பீர் முழங்குங்கள். நீங்கள் நன்றி செலுத்தியவர்களாகலாம்.”

பெருநாளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு இஸ்லாம் காட்டித்தந்த வழி, தக்பீர் சொல்வதுதான் (பட்டாசு கொழுத்துவதல்ல). அந்தத் தக்பீரை எத்தகைய மகிழ்ச்சிகளோடு முழங்க வேண்டும் என்ற பாடத்தை மேலே உள்ள திரு வசனம் கற்றுத் தருகிறது. அதன் சாராம்சம் வருமாறு:

அல்குர்ஆனை இறக்கி, அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டினான். அந்த மகிழ்ச்சியில் ஒரு மாத காலம் நோன்பு நோற்று (இறையுணர்வான தக்வாவையும் பெற்று) இறை வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டீர்கள் என்ற மகிழ்ச்சியில் தக்பீர் கூறுங்கள்.

நறுமணம், புத்தாடை, அறுசுவை உண்டிகள், நண்பர்கள், உறவினர்களின் ஆகர்ஷிப்புகள் என்பவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு மேலால், அல்குர்ஆன் கிடைத்தது; அதன் வழிகாட்டல் கிடைத்தது; அதிலிருந்து பயன் பெறுவதற்கு உதவியாக அமையும் தக்வா கிடைத்தது; அந்தத் தக்வாவைப் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சி நோன்பினால் கிடைத்தது; அந்த நோன்பு வெறும் பயிற்சி மட்டுமல்ல, அது உணர்வு பூர்வமான ஒரு வணக்கமும்கூட என்பதனால் அல்லாஹ்வின் நெருக்கமும் கிடைத்தது… போன்ற மகிழ்ச்சிகளுடன் தக்பீர் கூறுங்கள் என்ற பாடத்தையே முந்தைய வசனம் கற்றுத் தருகிறது.

ஆக, பெருநாளின் நோக்கங்கள் அற்புதமானவை; உன்னதமானவை; மனிதனை புனிதனாக்குபவை; எல்லையற்ற மகிழ்ச்சிகளை உலகிலும் மறுமையிலும் தந்து மனிதனை வாழ வைப்பவை.

ரமழான் பற்றியும் நோன்பு பற்றியும் அல்குர்ஆன் பற்றியும் தக்வா பற்றியும் விபரிக்கின்ற பகரா அத்தியாயத்தின் வசனங்கள ஓர் அற்புதமான செய்தியை இடையில் சொல்லிச் செல்கின்றன.

“(நோன்பு மற்றும் அதனுடன் சார்ந்த கடமைகள் மூலமாக) அல்லாஹ் உங்களுக்கு இலேசானதையே விரும்புகின்றான். உங்களை சிரமத்திற்குள்ளாக்குவதை அவன் விரும்பவில்லை.”

அதே போன்று மேலே கூறப்பட்ட கடமைகளை நிறைவேற்றி அவற்றின் பெறுபேறுகளை பெறும் நோக்கிலோ அல்லது அவற்றுக்கான உதவியைப் பெறும் நோக்கிலோ அல்லாஹ்வை அழைப்போருக்கு, அல்லாஹ் மிக நெருக்கமானவனாக இருக்கிறான் என்ற நற்செய்தியையும் அதே வசனங்கள் சுட்டிக்காட்டியும் இருக்கின்றன.

தனிமைப்படுத்தப்பட்டதொரு சூழலில் இம்முறை பெருநாள் கொண்டாடப் போகிறோம் என்பதனால் மேலே கூறப்பட்ட பாக்கியங்களுள் எதுதான் குறைந்துவிடப் போகிறது? அப்படி ஒரு குறை ஏற்பட்டால் பெருநாளின் 3ஆவது நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட மகிழ்ச்சிகள் சிலவே குறையப் போகின்றன.

அதாவது, சாரி சாரியாக மைதானத்திற்குச் செல்வதும் பெருநாள் தொழுவதும் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதும்தான் இம்முறை எமது பெருநாளில் ஏற்படப் போகின்ற குறையாகும்.

அது உண்மையில் ஏற்கனவே விபரிக்கப்பட்ட பாக்கியங்களை இல்லாமல் செய்துவிடும் குறையல்ல. மாறாக 90% பாக்கியங்கள் கிடைக்க இருக்கும் தறுவாயில் ஒரு 10% இழப்பையே அதனால் ஏற்படுத்த முடியும். தொடர்பு சாதனங்கள் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பங்கள் அதி உச்சமாக இருக்கும் ஒரு காலப் பகுதியில் அந்தப் 10 இலும் ஒரு 8 வீதத்தை நிவர்த்தி செய்து விடலாம்.

எனவே, வைரஸால் ஸ்ட்ரஸ் ஆகாமல் தனிமையில் ஒரு பெருநாளை கொண்டாடிப் பார்ப்போம். பாக்கியங்களும் மகிழ்ச்சிகளும் எங்களைப் பார்க்காமல் திரும்பிவிட மாட்டா.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All