Puttalam Online
education

எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 01

  • 31 May 2020
  • 935 views

எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 01

இஸட். ஏ. ஸன்ஹிர் (1973)

குறிப்பு: இக்கட்டுரைத் தொடர் ஜாமிஆ நளீமிய்யா முதல் தொகுதி மாணவர் whatsapp குழுமத்தில் இடப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர் puttalamonline இணையத்தளம் ஊடாகப் பதிவிடப்படுகின்றது.

ஜாமிஆவின் தோற்றம்

இலங்கையில் மத்ரஸாக்கள் இஸ்லாமியக் கல்வியை மட்டும் போதித்த காலம் அது. ‘உலகக் கல்வியை இணைத்து போதிப்பது கூடாது’ என்ற சிந்தனைப் போக்கும் அப்போது இருந்தது. சீனன் கோட்டையில் மிக வறிய குடும்பமொன்றில் பிறந்த நளீம், செல்வந்தனாகி ஹலாலாக மட்டும் சம்பாதித்து அல்லாஹுக்கு உகந்த வகையில் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்ற நோக்கில் இலங்கை முழுதும் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் என தனது செல்வத்தை செலவழித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தான் சம்பாதிப்பது தனது சமூகத்துக்குப் பயன்

இளைஞன் நளீம்
(புகைப்பட உதவி : நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் –
கலாநிதி எம் ஏ எம் சுக்ரி)

மிக்கதாக சென்றடைவதற்கான வழியை அவர் அப்போது தேடிக்கொண்டிருந்தார்.

நவீன சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய, பிரச்சினைகளை அறிவுபூர்வமாகவும் ஆய்வுரீதியாகவும் அணுகும், சமூகத்தை சரியாக வழிநடத்தக்கூடிய மார்க்க அறிஞர்களை உருவாக்கும் சிந்தனை நளீம் ஹாஜியாரின் மனத்தில் எழுந்தது. இதற்காக ஓர் இஸ்லாமிய கலாநிலையம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற எண்ணமும் அவருக்குத் தோன்றியது.

ஜாமிஆவை உருவாக்குவதில் அறிஞர் எ எம் எ அஸீஸ் அவர்களின் பங்கும் அளப்பரியது. 1941ல் அறிஞர் அஸீஸ் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். மருதானை முஸ்லிம் சங்கத்தினரின் ‘முஸ்லிம் மித்திரன்’ என்ற  வெளியீட்டில்  ‘மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை’ என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியாகியது. 1963ல் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற நூலில் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தலைப்பில் இக் கட்டுரை மீண்டும் இடம்பெற்றது.

அக் கட்டுரையில் அவர் அன்றைய மார்க்கக் கல்வி நிலையங்கள் பற்றியும் அதில் பயில்வோர் பற்றியும் விளக்கி ஒரு ‘ஜாமிஆ’ எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார். “மொழி, கணிதம், விஞ்ஞானம் உள்ளடங்கிய பாடங்களில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியும் போதிக்கப்படல் வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதியுடையோராயிருப்பதுடன் அவர்களில் சிலர் வெளிநாட்டவராகவும் இருக்க வேண்டும். நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரக்கூடியவர்களை உருவாக்கும் இத்தகைய கலாநிலையம் ஒன்று நிறுவப்படும்வரை வெளி நாடுகளிலுள்ள இவ்வாறான கலாநிலையங்களுக்கு எமது மாணவர்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளையாவது நாம் மேற்கொள்ளவேண்டும்”, என அவர் அதில் குறிப்பிட்டார்.

அக் கட்டுரையை அவர் பின்வருமாறு நிறைவுசெய்கின்றார். ” மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை ஒரு யோசனையாக மாத்திரம் முடிந்துவிடாமல் ஒரு நல்ல காலம் அதை எதிர்பார்த்து நிற்கின்றது என நம்பிப் பிரார்த்திப்போமாக !

அறிஞர் A.M.A. Azees

இலங்கையில் செல்வந்தராக மட்டுமன்றி கொடை வள்ளலாகவும் அனைவராலும் அப்போது அறியப்பெற்ற நளீம் ஹாஜியாருக்கு அக் காலத்தில் படித்த, பட்டம் பெற்ற அறிஞர்களினதும் சிந்தனையாளர்களினதும் தொடர்பும் இருந்தது. இப் பின்னணியே ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது.

அறிஞர் எ எம் எ அஸீஸ், மசூத் ஆலிம் சாஹிப், மெளலவி யூ எம் தாஸீன், அல்ஹாஜ் ஏ சீ ஏ வதூத், எம் எச் ஷாகுல் ஹமீத் பஹ்ஜி, நீதிபதி ஏ எம் அமீன், கலாநிதி எம் ஏ எம் சுக்ரி, மெளலவி ஏ எல் எம் இப்ராஹிம், எம் எச் எம்  ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார் போன்றோரினதும் மற்றும் பலரினதும் ஆலோசனைகள் வழிகாட்டல்களுடனும் பேருவளை சீனங்கோட்டை பிரமுகர்களின் ஒத்துழைப்புடனும் எமது கல்வித் தந்தை நளீம் ஹாஜியார் அவர்கள் ஜாமிஆவை உருவாக்கினார்கள்.

 

புகைப்பட உதவி : நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் –
கலாநிதி எம் ஏ எம் சுக்ரி

L-R: எ எம் எ அஸீஸ், நீதிபதி ஏ எம் அமீன், நளீம் ஹாஜியார் (புகைப்பட உதவி : நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் –
கலாநிதி எம் ஏ எம் சுக்ரி)

ஜாமிஆ முதல் தொகுதி மாணவர்கள் சேர்க்கப்பட்ட காலப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் 

Seated  L-R

  1. M.H.M. Nooman Hajiar 2. M.A.M. Mukthar Hajiar 3. M.H.M. Hibathullah Hajiar 4. C.L.M. Abul Hasan Hajiar (Abul Hasan master) 5. Dr. M.A.M. Shukri 6. M.H. Shahul Hameed Bahji 7. A.M.A. Azees 8. Kaleefa Abdul Azees (Egyptian Ambassador) 9. Al HAj M.I.M. Naleem (Founder, Jamiah Naleemiah) 10. Moulavi U.M. Thaseen (Nadhvi, Al-Azhari, Founder Principal)  11. Moulavi A.M.C.M. Buhari (Founder Vice Principal) 12. Y.L.M. Razik (Jamiah Teacher) 13. Justice A.M. Ameen 14. A.C.A. Wadood Hajiar (Wadood master, Sec. Ceylon Muslim Missionary Society) ) 15. …..…. 16. A.M.M. Rauff Hajiar 17. Lion A.R.M. Hamza Hajiar (Car race)

Standing  L-R

  1. ……. 2. A.R.M. Sulaiman Hajiar (Sulaiman master) 3. Mohamed Hanifa Hajiar (Mannanifa) 4. Kaleel Hajiar 5. A.T.M. Faiz Hajiar 6. M.H.M. Hamza Hajiar 7. M.S. Fazi Hajiar 8. Dr. U.L.M. Basheer 9. M.S. Mohamed Hashim Hajiar 10. M.S.M. Yakooth Hajiar 11. Marzook Hajiar 12. Salman Hajiar 13. A.A.M. Haroon Hajiar 14. A.I.M. Anver Hajiar 15. A.C.M. Cassim Hajiar  (Cassim Master, V.P. Al Humaizara M.V.) 16. U.L.M. Ameer Hajiar 17. Sanoon Hajiar 18. W.M. Hanafi Hajiari 19. I.L.M. Nilam Hajiar (Jamiah staff)

(Special Thanks to M.H.M. Althaf (1973) and A.H.A. Kahhar (Chaina fort, Beruwala)

 

இன்னும் வரும்…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All