Puttalam Online
regional-news

ஆசிரியர் அப்துல் பாரி காலமானார்

  • 1 June 2020
  • 315 views

ஆசிரியர் அப்துல் பாரி காலமானார்

 

 

 

 

 

 

 

 

 

புத்தளம் நகரின் விரல்விட்டு எண்ணக்கக்கூடிய பழம்பெரும் ஆசிரியர்களுள் ஒருவரான அப்துல் பாரி அவர்கள் கடந்த 30.05.2020 சனிக்கிழமையன்று காலமானார். கல்விப்புலத்தில் ஆசிரியராக, அதிபராக மட்டுமன்றி கல்வி அதிகாரிகளுடன் இணைந்து காரியாலயப் பணிகளில் பணியாற்றிய அனுபவமிக்க ஓர் ஆசானை புத்தளம் சமூகம் இழந்துள்ளது.

அப்துல் ரகுமான் அப்துல் பாரி அவர்கள் 1938 சித்திரை 21 ஆம் திகதியன்று அவதரித்தார். புத்தளத்தில் போல்ஸ் வீதியில் 1921 இல் அரசினர் ஆண்கள் பாடசாலையாகத் தொடங்கப்பட்டு 1955 இல் சிரேஷ்ட ஆண்கள் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட கல்விக்கூடத்தில் சிரேஷ்டப் பாடசாலை தராதரப் பத்திரப் பரீட்சையில் (SSC) ஆரம்பகாலத்தில் தோற்றி சித்தியடைந்தவர்களில் அப்துல் பாரி ஆசிரியர் அவர்களும் ஒருவராவார்.

ஆசிரியர் பயிற்சிக்காக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவுசெய்யப்பட்டு அங்கு 1957 தை 1 ஆம் திகதி தொடக்கம் 1959 மார்கழி 31 ஆம் திகதி வரை பயிற்றப்பட்டு திறமை சித்தியுடன் தனது பயிற்சியை நிறைவுசெய்தார். அவரின் முதல் நியமனம் கொழும்பு ஹமீதியா வித்தியாலயமாகும். அதன் பின்னர் சுமார் நான்கு வருடங்கள் கொழும்பு கொம்பனித்தெரு முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் ஆசிரியப் பணியாற்றினார். அதன் பின்னர் புத்தளம் நகரிலும் கிராமங்களிலும் ஆசிரியராகக் கடமையாற்றிய பாரி ஆசிரியர் அவர்கள் 10.02.1978 அன்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் வித்தியாலயம் தொடங்கப்பட்டபோது அதே தினத்தில் அங்கு முதல் அதிபராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்தில் 31.12.1990 வரை கடமையாற்றி தமது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் இப்பாடசாலையில் பணியாற்றிய காலப்பகுதியில் வகுப்புக்கள் தரம் அதிகரிப்பு, பொதுப் பரீட்சிகளில் மாணவர் சித்தி, பெளதிக வள அதிகரிப்பு என தில்லையடி முஸ்லிம் வித்தியாலயம் கல்வியில் பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி கண்டமையை கல்விச் சமூகம் இன்றும் நன்றியுடன் நினைவுகூருகின்றது.

அன்னாரின் நற்பணிகளை எல்லாம் வல்ல இறைவன் ஏற்றுக்கொள்ள puttalamonline பிரார்த்திக்கின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All