Puttalam Online
regional-news

தசாப்தத்தைக் காண விளையும் புத்தளம் ஒன்லைனின் பெருநாள் ஒன்றுகூடல்

  • 4 June 2020
  • 194 views

-ரஸ்மா ரஸ்மி-

மண்ணின் மரபை மணம் மாறாமல் பதிவு செய்யும் புத்தளம் மக்களின் ஏக குரலான புத்தளம் ஒன்லைனின் பெருநாள் ஒன்றுகூடல் காசிமிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் இன்று (2020.03) நடைபெற்றது.

காலை பத்து மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு சுவையான அம்சங்களைத் தாங்கி சிறப்பாக நடைபெற்றது. ஊடகத்தின் ஆரம்ப உறுப்பினர்களான ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் Z.A. ஸன்ஹிர், சட்டத்தரணி பஸ்லுர் ரஹ்மான் மற்றும் மென்பொறியியலாளர் ருஷ்டி இஸ்மத் ஆகியோரின் ஏற்பாட்டில் ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்பில் புதிய உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடு இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

பிரார்த்தனையின் பின்னரான சுய அறிமுகத்துடன் புத்தளம் ஒன்லைன் கடந்து வந்த பாதை பற்றிய பதிவுகளும் அதன் ஆரம்ப உறுப்பினர்களால் ஆத்மார்த்தமாக பரிமாறப்பட்டமை நிகழ்ச்சியின் சுவையை அதிகரித்தது. இணைய ஊடகமொன்றின் தேவை உருவாக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்ட, புத்தளம் ஒன்லைனுக்கான விதை உருவாகிய அதே வளாகத்தில் வெற்றிகரமாக தசாப்ததை நோக்கி நடைபயிலும் புத்தளம் ஒன்லைனின் இந்நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மண்ணின் வரலாற்றை பதிவு செய்யவேண்டிய தேவை, பண்டைய புத்தளம் எனும் துறைமுக நகரின் கேந்திர முக்கியத்துவத்தையும், தவளம் முறை, வடக்கு வீதி, பெருவழியாறு, சியாரங்களின் வரலாறு என வரலாற்றுத் துணுக்குகளையும் தனக்கேயுரிய பாணியில் சுவைபடக்கூறி நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டிய ஆசிரியர் Z.A.சன்ஹீர், புத்தளத்தின் அயல்கிராமங்கள் பற்றிய பல தகவல்களையும் பரிமாறியமை கரைத்தீவு, புளிச்சாக்குளம் போன்ற பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த உறுப்பினர்களையும் ஏனையோரையும் உற்சாகப்படுத்தியது.

புத்தளம் ஒன்லைன் இணையதளமானது இலாபநோக்கில் இயங்கும் இணையதளமன்று. தனிநபர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஒருசேர இயங்கிவரும் இதனை முகங்கொடுத்துவரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் முன்கொண்டு செல்வது பற்றியும் இணையதளத்தின் தொழிநுட்ப உள்ளீடு குறித்தும் மென்பொறியியலாளர் ருஷ்டி இஸ்மத் தெளிவுபடுத்தினார். புத்தளம் ஒன்லைனால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் குறித்து சட்டத்தரணி பஸ்லுர்ரஹ்மான் பரிமாறினார்.

பகலுணவுடன் கூடிய கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கிடையிலான வேகத்தையும் விவேகத்தையும் பரீட்சிக்கும் விளையாட்டுகளுடன் நிறைவாகக் கழிந்த இம்மாலை வேளையில் புத்தளம் ஒன்லைனின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All