Puttalam Online
education

எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 02

  • 6 June 2020
  • 464 views

எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 02

இஸட். ஏ. ஸன்ஹிர் (1973)

குறிப்பு: இக்கட்டுரைத் தொடர் ஜாமிஆ நளீமிய்யா முதல் தொகுதி மாணவர் whatsapp குழுமத்தில் இடப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர் puttalamonline இணையத்தளம் ஊடாகப் பதிவிடப்படுகின்றது.

 ஜாமிஆ அறிமுகம்

ஜாமிஆ நழீமிய்யா நிறுவப்படும்போது அதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி ஒரு கையேடு வெளியிடப்பட்டது. அதன் சுருக்கம் பின்வருமாறு.

இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம்கள் பெருமைப்படத்தக்க வரலாற்றுப் பாரம்பரியமொன்றைக் கொண்டோராவர். ஏகாதிபத்தியத்தின் ஊடுருவல்களையும் மீறி எமது கலாசார தனித் தன்மையைப் பேண, அக்கால சமுதாயத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று அதனை சரியான பாதையில் வழிநடத்திய உலமாக்களின் பணியே பிரதானமானதாக அமைந்தது.

இன்று முஸ்லிம்கள் மதப்பற்றற்றிருப்பதுடன் சமுதாயக் கட்டுக்கோப்பும் சீர்குலைந்துள்ளது. இஸ்லாமிய வாழ்கை முறைக்கு முற்றிலும் முரணானதும் இஸ்லாமிய சமுதாயக் கட்டுக்கோப்பை முற்றிலும் சீர்குலைக்கக்கூடியதுமான கொள்கைகளும் இலட்சியவாதங்களும் எமது இஸ்லாமிய உணர்வுக்கு ஊறுவிளைப்பதை காண்கிறோம். இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கெதிரான சக்திகள் உருவாகியுள்ளன. இம் மாற்றங்களை உணர்ந்து, அதற்கேற்ப எம்மைத் தயார்படுத்தி, ஈமானைப் பாதுகாப்பதன்மூலம் எமது தனித்துவத்தையும் கலாசாரப் பாரம்பரியங்களையும் காப்பாற்றிக்கொள்ளல் அவசியமாகும். இவ்வாறான கலாசார எழுச்சியின்மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் நாம் சிறந்த பணியாற்றலாம். அதேநேரம் இஸ்லாத்துக்கு முரணான நவீன சிந்தனைகளினாலும் தத்துவங்களினாலும் கவரப்பட்ட முஸ்லிம்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி அவர்களை சரியானமுறையில் நெறிப்படுத்தல் சாத்தியமாகும்.

இந் நோக்கங்களுக்காக இஸ்லாத்தை ஆழ்ந்து கற்ற, நல்ல சிந்தனைகளையும் சிறந்த அறிவையும் கொண்ட தலைமைத்துவப் பண்புகொண்ட உலமாக்களை உருவாக்கும் அவசரத் தேவை தோன்றியுள்ளது. இதனைப் பூர்த்தி செய்யும் அடிப்படையிலேயே ஜாமிஆ நழீமிய்யா (நழீமிய்யா இஸ்லாமிய கலா நிலையம்) தாபிக்கப்பட்டுள்ளது.

Beruwala Kechchimale Mosque

இலங்கையில் அரபு முஸ்லிம்கள் முதலில் குடியேறியதாகக் கருதப்படும் வேருவலை (பெர்பரீன்) இல் நிறுவப்பட்டுவரும் ஜாமிஆ இலங்கை வாழ் முஸ்லிம்களின் கலாசார மத்தியமாகவும் சமுதாய எழுச்சிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தூண்டுதலாகவும் அமையும். இந் நாட்டு முஸ்லிம்களுக்கும் உலக முஸ்லிம்களுக்குமிடையில் கலாசார பண்பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்தும் ஓர் இணைப்புச் சக்தியாகவும் விளங்கும்.

ஜாமிஆ வளாகம் பதினாறு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பைக் கொண்டது. வளாகத்தில் அமைக்கப்படும் மஸ்ஜித் கண்ணைக் கவரும் இஸ்லாமியக் கட்டிடக் கலையம்சம் பொருந்தியதாகும். ஜாமிஆவின் சிறப்பம்சம் இப் பள்ளிவாசலாகும். இஸ்லாமிய அறிவை ஊட்டுவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் பள்ளிவாசல் மத்திய நிலையமாகத் திகழும். இஸ்லாமிய அறிவின் சின்னம் ஜாமிஆவாகவும் இஸ்லாமிய வாழ்கைமுறைப் பயிற்சியின் சின்னம் அதன் மஸ்ஜித் ஆகவும் அமையும்.

Jamiah naleemiah Mosque

.ஜாமிஆ வளாகத்தில் மாணவர் ஆசிரியர் விடுதிகள், விரிவுரை மண்டபங்கள்,பரிபாலன நிலையம், மத்திய நூலகம், வெளியீட்டகம், சொற்பொழிவு மண்டபம் போன்றன அமையும். மைதானம், விவசாய பயிற்சி நிலம், மரவேலை, உலோக வேலைக் கூடங்கள் என்பனவும் அங்கு அமைக்கப்படும்.

ஜாமிஆவின் நூலகம் உசாவுதலுக்கும் ஆராய்ச்சிக்காகவும் அமைக்கப்படும். வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இது பயனளிக்கவேண்டும். அரபு உட்பட ஏனைய மொழி இஸ்லாமிய நூல்களும் இங்கு இடம்பெறல் வேண்டும். அரபுத் தமிழ் நூல்கள் கையெழுத்துப் பிரதிகள் இங்கு பாதுகாக்கப்படல் வேண்டும்.

தமிழ் மொழி நூல்களை வெளியிடுவது மட்டுமன்றி சிங்கள மொழி மூலமான நூல்களை வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். உலகின் தலை சிறந்த இஸ்லாமிய சஞ்சிகைகளில் வெளிவரும் முக்கிய கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்ட இஸ்லாமிய சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொண்ட அரையாண்டு சஞ்சிகை ஒன்றும் வெளிவரல் வேண்டும். இக்காலநிலையத்தின் நூல் வெளியீட்டகம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

Jamiah Naleemiah Auditorium

ஜாமிஆவில் பயிற்சி பெற ஆண்டுதோறும் போட்டிப் பரீட்சை மூலம் இருபத்தி ஐந்துக்கும் மேற்படாதோர் தெரிவுசெய்யப்படுவர். 14-16 வயதுக்கு உட்பட்ட இவர்கள் பொதுக் கல்வி அறிவு, புத்திக்கூர்மை,ஒழுக்கப் பின்னணி கொண்டோராக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு சித்தியடைந்திருக்க வேண்டும். பயிற்சிக் காலம் எட்டு வருடங்களாகும். அரச கல்விக் கொள்கைக்கேற்ப கல்வித்தகைமை, வயது, பயிற்சிக் காலம் என்பன மாறலாம். இங்கு பயிற்சி பெற்று வெளியேறும் ஒரு மாணவர் அரபு, தமிழ், ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்குவார்.

இறுதி ஆண்டு போதனா மொழியாக அறபு இருக்கும். ஆங்கிலம் கட்டாயப் பாடமாகும். குர்ஆன் , ஹதீது, பிக்ஹு, என்பனவற்றுடன் இஸ்லாமியப் பண்பாடு, தத்துவம், நாகரீகம், மதங்கள், நவீன சிந்தனைகளின் ஒப்பீட்டு ஆய்வு என்பனவும் பாடத்திட்டத்தில் இடம்பெறும். காலத்துக்குக் காலம் இதில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற ஜாமிஆக்களின் அனுபவங்கள் கருத்தில் கொள்ளப்படும். மாணவர் ஒழுக்கம் கருதி அவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பது கட்டாயமாகும். விடுதி, பாடங்கள், புத்தகங்கள் என்பன இலவசமாகும்.

இன்னும் வரும் …Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All