Puttalam Online
star-person

சிறுகதை துறையில் சிறகடிக்கும் – புத்தளம் நியாஸ்

  • 28 June 2020
  • 490 views

நமது ஆளுமைகள்

துறைசார் சேவைகளினூடாக நாட்டுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்தவர்கள்  பற்றியதோர் பார்வை …!!!

சிறுகதை துறையில் சிறகடிக்கும் – புத்தளம் நியாஸ்

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான ஏ.என்.எஸ்.நியாஸ் , சிறு கதைகள் எழுதுவதில் சமத்தர்.மார்க்க சீலரான இவர் சிறு கதைகள் , துணுக்குகள் எழுதுதல் முதலான எழுத்துப்பணிகளில் ஈடுபடுபவர்.

புத்தளம் – மன்னார் வீதி இல்லத்தில் குடும்பத்தினராய் வசிக்கும் இவர் 1946 .03 .23  இல் மர்ஹூம்களான கல்வி வரவு உத்தியோகத்தர் , சமூக சேவையாளரான அசன் நெய்னாப்  பிள்ளை – ஆசியா பீவி தம்பதியருக்கு மூத்த புதல்வராக பிறந்தார் . புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலை , கற்பிட்டி அல் அக்ஸா ம.வி , யாழ்.நெல்லியடி ம.ம வித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் கற்று, இலங்கை வங்கியில் 1968  முதல் 2001  வரையான 33  வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். அக்காலப் பகுதியில் இவர் கொழும்பு , கற்பிட்டி , கஹட்டகஸ்திகிலிய, புத்தளம் , மதுரங்குளி முதலான இலங்கை வங்கிக் கிளைகளில்  பல்வேறு தரங்களில் பதவிகள் வகித்து வந்துள்ளார்.

மும்மொழிகளிலும் ஆற்றல் படைத்த இவர் தான் கற்ற மற்றும் தொழில்கள் புரிந்த பல்வேறு பிரதேச சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களுடனும் நெருங்கிப் பழகி , அவர்களின் வாழ்க்கை முறைகள் , பழக்க வழக்கங்கள் , மொழி மற்றும் பேச்சு , உச்சரிப்பு , சூழல் சுற்றாடல் ,தொழில் ,போக்குவரத்து முதலானவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து மனதில் இருத்தி , தற்போது ஓய்வான நிலையில் அவற்றை மீள் நினைவிலாகிப் பரிசீலித்து நமக்குத் தரமான கதைகளை தேசிய தமிழ் ஊடகங்கள் மூலம் கடந்த சில வருடங்களாகத் தந்து கொண்டிருக்கிறார்.

வங்கித் தொழிலில் ஈடுபட்டதால் அப்போதைய சூழ் நிலையில் கதைகளை எழுத முடியாமல் போனதாகவும் , தற்போது ஓய்வான நிலையில் அவற்றை மீட்டெடுத்து தந்துகொண்டிருப்பதாகவும் கூறும் இவர் , வங்கியில் இணைவதற்கு முன்னர், 1967 இல் இன்ஸான் பத்திரிகையில் ‘கலீல் சாச்சா’ என்ற முதலாவது கதை வெளியான பின்பு ஏனைய 19 கதைகளும் 2001 ஆம் ஆண்டு முதலாக இன்று வரையும் வெளிவந்து  கொண்டிருப்பதாகவும் கூறினார். தினக்குரல் பத்திரிகையில் ஐந்து கதைகளும் , தினகரன் பத்திரிகையில் மூன்று கதைகளும் , மித்திரன் வாரமலரில் இரண்டு கதைகளும்,  விடிவெள்ளி பத்திரிகையில் மூன்று கதைகளும் , சுடர் ஒளி பத்திரிகையில் மூன்று கதைகளும், வீரகேசரி பத்திரிகையில் ஒரு கதையும், மல்லிகை இதழில் ஒரு கதையும் , வெளி வந்துள்ளதுடன் கையிருப்பில் ஒரு கதையும் இருப்பதாகக் கூறினார்.

பொதுவாகக் கதையாசிரியார்கள் தங்கள் இனம் சார்ந்த , மதம் சார்ந்த , ஊர் சார்ந்த கதைகளையும் , அதே போன்று கதா பாத்திரங்களையும் தேர்வு செய்தே பெரும்பாலும் எழுதுவார்கள். ஆனால் நியாஸின் கதைகள் , நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அவர் முன்பு படித்த , தொழில் பார்த்த ஊர்களையும் , அவ்வப்பிரதேச  மூவின சமூகத்தாரையும் இணைத்து தமது கதைகளைத் தந்திருப்பதுடன் , தனது ஊர் சமூகத்தையும் கலாசாரத்தையும் மறந்து எழுதிவிடவில்லை. இவ்வாறு இவரது கதைகள் பல்லினம், பல்சமூகம் சார்ந்தவை. தற்கால அரசியல் , சமூக இணக்கப்பாடு முதலான அரசாங்கத்தின் நோக்கம் முயற்சி என்பவற்றைப்  பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளன. இதன் அடிப்படையில், இவர் தந்துள்ள அறுவடைக்காலம் , செல்போன் , கண்ணீர், இரண்டு ரோஜாக்கள், திரிவேணி சங்கமம், சொத்து , விலைக்கு வாங்கிய விபரீதங்கள், உள்ளங்கள் ஊமையல்ல , கண்ணெதிரே  தோன்றினாள், தேவி, நோட்டுக்கட்டு, பத்து ரூபா , நேசக்கரம், சன்மானம் ,அவர்கள் ஏணிகள் , மாமாவின் பதில் , ஐம்பத்தோராம் இரவு , கணவன் ஒரு கயவன், விடிந்தால் பெருநாள், கலீல் சாச்சா முதலான கதைகள் அமைந்துள்ளன.

இவை மொழி பெயர்க்கப்பட வேண்டிய கதைகள் , மாற்று சமூகத்தாரின் வாசிப்புக்கும் உள்வாங்கப்பட வேண்டியவை, தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டியவை என்று துணியலாம். இவரது பணி தொடர வாழ்த்துவோம்.

எம்.ஐ.எம். அப்துல் லத்தீப்

விடிவெள்ளி – 2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All