Puttalam Online
social

வாக்கின்றிய சுவாசம்.! புத்தளம் மரிக்காரின் வரிகளில்

  • 29 June 2020
  • 421 views

காற்றின்றிய
சுவாசமல்ல… இது
ஒரு சமூகத்தின்
வாக்கின்றிய சுவாசம்….!

நீங்கள் இதுவரை தேர்தலில் வாக்களிக்காத ஒருவரா..?
“எனது ஒரே ஒரு வாக்கினால் என்ன மாற்றம்தான் நிகழ்ந்துவிடப்போகிறது…!?” என்ற சிந்தனையில் சிரிப்பவரா..?

உங்களுடன்தான் இந்த உரையாடல்…!

ஒரு ஆச்சரியமான உண்மையை சொல்கிறேன்…
நீங்கள் மட்டுமல்ல… புத்தளத்தில் உங்களைப்போல் 55,000 பேர் இருக்கிறீர்கள்…!

வாக்களிக்காதவர்கள்…
தேர்தல் தினத்தில் காணாமல் போபவர்கள்… தன் உரிமையையும் கடமையையும் வெறும் மாய்ச்சலுக்கு விற்றவர்கள்…!
சோம்பேறித்தனத்தால் பல வெற்றிகளை தடுத்தவர்கள்…! பொறுப்புணர்வில் செத்தவர்கள்…!!

கேவலம் பதிவகூட செய்யாமல் 15,000 பேர் இருக்கிறீர்கள்…!

“விரலில் ‘மை’ படாத சுத்தமான மனிதன் நான்…”என நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ….
“எனக்கு மட்டும்தான் இன்று ‘வுழூ’ சேர்ந்ததிருக்கும்…” என்ற எண்ணத்தில் மிதப்பவரோ…
“என்னைத்தவிர எவனுக்கும் வாக்கில்லை..” என்று வாய்விட்டு கர்ஜிப்பவரோ….
என்ன Philosophy யோ… எனக்குத்தெரியாது…!!

மன்னித்துக்கொள்ளுங்கள்…!
போதைப்பொருளைப்போல, சிறுவர் துஷ்பிரயோகம் போல, இனவாதிகள் போல…
நீங்களும் இந்த சமூகத்தின் இன்னொரு புற்றுநோய் என்பது எனது கருத்து…!!

வாக்களிக்க மாட்டீர்கள்…
வாக்கு அட்டை வராவிட்டால் தேடக்கூட மாட்டீர்கள்….
“Election ஆ ஆளைவிடு என்பீர்கள்…”

உங்களைப் பொறுத்தவரை வாக்குகள் வெறும் கோடுகள்…!
உங்களோடு சம்பந்தமேயில்லாத அடுத்த கிரகத்தின் சேதிகள்…. just optional அம்சங்கள்…!!

30 வருட கண்ணீருக்கான காரணங்களில்
உங்கள் கறைகளும் கையொப்பங்களுமே அதிகம் காணப்படுகின்றன…!

சகோதரிகள்… தாய்மார்கள்…. வெட்கத்தைவிட்டு கொஞ்சம் வெளியே வந்திருந்தால்…

வீட்டுக்குமறுகளை, சமூகக் கடமையென்று சொல்லி தந்தைகள் அழைத்துவந்திருந்தால்…

கடை ஊழியர்கள் வாக்களிக்க, அந்த முதலாளி 5 நிமிடம் மனது வைத்திருந்தால்…

இந்த ஊரில் அனைவரும் அன்று வீட்டைவிட்டு வெளியில் வந்திருந்தால்…

பல முறை….
பல முறை நாம், வெறும் 1000, 2000 வாக்குகளால், சின்னாபின்னமாய் போயிருக்க மாட்டோம்…!
இத்தனை வருடம், இப்படித் தோற்றிருக்க மாட்டோம்….!

உங்களால்….

எமது ஊர் நிறைய இழந்து நிற்கிறது… வளங்களால் சுரண்டப்பட்டிருக்கிறது…
வசந்தங்கள் சூறையாடப்பட்டிருக்கிறது… ஒதுக்கீடுகளால் பிடறிபிடித்து தள்ளப்பட்டிருக்கிறது…
இன்னும் இழந்து இழந்து… அடுத்த சந்ததிக்குமாக அநியாயங்கள் இங்கே குவிக்கப்பட்டிருக்கிறது…!!

இது உங்களால் என்று உங்களுக்குத் தெரியாது…!
உங்கள் பிழையின் உருவம் உங்களுக்கு விளங்காது…!!
விரல்களை மடக்கிக்கொண்டு, உங்களின்… உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை
நீங்களே கொலை செய்கிறீர்கள் என்ற உண்மை உங்களுக்குப் புரியாது…!!!

மாறுங்கள்….!
தயவுசெய்து வாருங்கள்…!

வாக்களியுங்கள்…!!

விழிகளை வைத்துக்கொண்டு விழிக்காதிருக்கும் மடமையை… இம்முறையேனும் இல்லாது செய்யுங்கள்…!

இல்லையேல்… இந்தத் தேர்தலிலும் நாம் சில வாக்குகளால் தோற்கலாம்..
அதற்கு காரணமாக
மீண்டும் நீங்களே இருக்கலாம்….!!

—-
புத்தளம் மரிக்கார்
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All