Puttalam Online
star-person

புத்தளத்தின் முன்னோடி அதிபர் A K அபூஹனிபா

  • 21 September 2020
  • 508 views

புத்தளத்தின் முன்னோடி அதிபர் A K அபூஹனிபா

ஆக்கம்: A.H.M. நவுசாத் (மகன்)

A.K. Aboohanifa

 

மர்ஹூம் A K அபூஹனிபா அவர்கள் புத்தளம் நகரில் நடுத்தரக் குடும்பமொன்றில் அசன்குத்தூஸ் ஆமினாஉம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாக 07.04.1917 இல் பிறந்தார்கள். அன்று புத்தளம் நகரில்  இருந்த அரசாங்க ஆண்கள் பாடசாலையில் (கால ஸ்கூல்) தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த அன்னார் பின்னர் புத்தளத்தின் ‘ஆசிரியத் தந்தை’ எனப் போற்றப்படும் ஜோசப் அல்பிரட் அவர்களிடம் SSC படித்து சித்தியடைந்து HSC பரீட்சைக்கும் தோற்றினார்கள். இப் பரீட்சைக்குப் பொறுப்பாக இருந்தவர் பேரறிஞர் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி விபுலாந்த அடிகளை நேரில் பார்த்தபோது தனது மேனி சிலிர்த்ததாக அவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். இப் பரீட்சையில் புத்தளம் பிரதேசத்தின் முதல் மாணவராக சித்தியடைந்து தனது மேற்படிப்புக்காக கொழும்பு பல்கலைக் கழகத்துக்குத் தெரிவானார். பல்கலைக்கழகத்தில் இருந்தபோதே ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து அதற்காகத்  தெரிவுசெய்யப்பட்டார். வறுமை நிலை காரணமாக உயர்கல்வியைத் தொடராமல் புனிதமிகு ஆசிரியத் தொழிலில் பிரவேசித்தார்.

 

புத்தளத்தின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவரான A K அபூஹனிபா அவர்கள் புத்தளம் அரசாங்க ஆண்கள் பாடசாலை, புத்தளம் பாலர் பாடசாலை போன்றவற்றிலும் முதலைப்பாளி, திகளி, கடையாமோட்டை, கொத்தாந்தீவு, விருதோடை, கரைத்தீவு, புளிச்சாக்குளம் போன்ற கிராமங்களிலும் கடமையாற்றியுள்ளதுடன் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. புத்தளத்தின் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் இவரே. புத்தளத்துக்கு வெளியே கொழும்பு மிகுந்து மாவத்தை முஸ்லிம் வித்தியாலயம், கண்டி கட்டுகஸ்தோட்டை,  என்டெர்தென்னை போன்ற இடங்களிலும் ஆசிரியர் தொழில் புரிந்துள்ளார்.  மிகுந்து மாவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றியபோது அக்காலத்தில் கொழும்பு மேயராகப் பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச மூலம் பல உதவிகளை அப்பாடசாலைக்குப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

 

ஆசிரியப் பெருந்தகை அபூஹனிபா அவர்கள் ஆற்றிய கல்விப்பணி அளப்பெரியது. இப் பிரதேசத்தின் வறிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரும்பாடுபட்டார்கள். அக்காலப்பகுதியில் முஸ்லிம் பெற்றோர் தமது பெண்பிள்ளைகளை படிக்கவைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சமூகக் கட்டுப்பாடுகளும் இருந்தன. எனினும் அவற்றை மீறி சமூகத்துக்கு உணர்த்தும் வகையில்  தனது மூத்தமகளைப் படிக்கவைத்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி புத்தளம் பிரதேசத்தின் முதல் முஸ்லிம்  பெண் பட்டதாரியை உருவாக்கினார்கள். எனவே இப்பிரதேசத்தின் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியின் முன்னோடிகளில் ஒருவராகவும் இவரைக் கருதலாம். மின்ஹாஜ் மெளலவியின் தந்தை ஹாலித் ஆசிரியர் உட்பட புத்தளத்தில் பழம்பெரும் ஆசிரியர்கள் துறைசார் நிபுணர்கள் பலர் இவரின் மாணாக்கர்களே.

 

அபூஹனிபா அதிபர் அவர்கள் தமிழ் மொழியில் திறமை மிகுந்தவராவார். அன்று இந்த நகரில் வாழ்ந்த அதிபர் ஏ. எம். ஐ. நெய்னாமரைக்காரும் அவ்வாறான ஒருவரே. அக்காலத்தவர்கள் இவர்களின்  தமிழ் மொழிப்பாண்டித்தியம்  பற்றி புகழ்ந்து குறிப்பிம்போது இவ்விருவரும் தமக்கு இயன்றவரை  ‘தமிழ் மொழியை மென்று விழுங்கியவர்கள்’ என்று கூறுவார்களாம். இன்றுகூட புத்தளம் நகரில் இவர்களை ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனலாம். இன்றுகூட புத்தளம் நகரில் இவர்களை ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனலாம். அவர் மாணவராக இருந்தபோது 10.05.1938 இல் மீலாத் விழாவுக்காக வெளியிடப்பட்ட ‘திரு நபி சரிதையின் நறுமலர் உரைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கள் அடங்கிய பிரசுரம் ஒன்றில் ‘திரு நபி அவர்களின் அவதார மகிமை’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.  இலங்கையின் தேசிய நாளிதழ் தினகரனில் என்.எம் அமீன் தயாரித்தளித்த ஆலமுல்  இஸ்லாம் பகுதியில் 1990 இல் ‘தற்கால இஸ்லாமிய எழுச்சியில் இமாம் கஸ்ஸாலியின் பங்களிப்பு’ என்ற நீண்ட தொடர் கட்டுரையை அவர் எழுதியுள்ளார். அன்னாரின் வேறு கட்டுரைகளும் தேசிய நாளிதல்களில் வெளிவந்துள்ளன.

 

நான்காவது அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கையில் 1979 ஜூன் 29, 30, ஜூலை 1 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில்  இடம்பெற்றது. இம்மாநாட்டின் இரண்டாவது நாளில் பி.ப. 4.00 மணிக்கு அதிபர் ஏ.கே. அபூஹனிபா அவர்களால் ‘அறபும் தமிழும்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்று சமர்ப்பித்து, சொற்பொழிவாற்றப்பட்டது. இது தொடர்பாக 02.11.1978 திகதியிடப்பட்ட கடிதம்  ஒன்றை மாநாட்டின் தலைவர் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள் அபூஹனிபா அதிபருக்கு அனுப்பிவைத்திருந்தார். இம்மாநாட்டில் புத்தளத்தை சேர்ந்த விரிவுரையாளர் எம்.எஸ்.எம். அனஸ் சொற்பொழிவாற்றியதுடன் சிறப்புரை ஒன்றை பிரதி நிதி திட்டமிடல் அமைச்சர் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள் அபூஹனிபா அதிபர் அவர்களுக்கு எழுதிய கடிதம்

 

 

நான்காவது அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு அழைப்பிதழ்

 

கலை இலக்கித்துறைகளில் மிகுந்த ஆர்வமிக்க அபூஹனிபா ஆசிரியர் அவர்கள் செய்யுள், வெண்பா, கவிதைகள் எழுதுவதில் பிரபலமானவர்.  புத்தளம் பிரதேசத்தின் புகழ்மிக்க புலவர்களுள் ஒருவரான கரைத்தீவு அந்தகக் கவி  செய்கு அலாவுதீன் அவர்களுடன் தனது இளமைக்காலத்தில் மிகுந்த நட்புறவைப் பேணிவந்துள்ளார்கள். புத்தளம் பள்ளிவாசல்துறையை பிறப்பிடமாகக்கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அனஸ் அவர்கள் தனது  ‘வரகவி செய்கு அலாவுதீன்’ பற்றிய நூலை எழுதும்போது அன்னாரை சந்தித்து தகவல்களைப் பெற்றதும் இங்கு நினைவுகூறத்தக்கது.

 

கலைத்துறையில் ஆர்வமிக்க இவர் சிறந்த பாடகருமாவார். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஆர்வமிக்கவர். இவரின்  குடும்பமும் ஒரு கலைக்குடும்பமாகும். வைத்தியர் அப்துற்  றஹீம் (அழுத்தகமயில் திருமணம் முடித்தவர்), புத்தளம் ஸாஹிரா கல்லூரி அதிபர் தாஹா ஆகியோரின் தந்தை அப்துல் கனி, அமைச்சர் எம் எச் எம் நைனா மரைக்கார் ஆகியோர் இணைந்து சங்கீத நிகழ்வுகளை நடத்தினர். இதில் இவருக்கும் பங்குண்டு. கீழைத்தேய சங்கீதக் கருவிகளை கையாள்வதில்  இவர்கள் அனைவரும் நன்கு பரீட்சயமிக்கவர்கள். பாடகர்களும் கூட.

 

அக்காலத்தில் வானொலி இஸ்லாமிய  நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களைப் பயிற்றுவித்து பங்கேற்கவைப்பதிலும் ஈடுபாடு காட்டியுள்ளார். இஸ்லாமியக் கீதங்கள், நாடகங்கள்  போன்றவற்றை எழுதி தனது  மாணவர்களைப் பயிற்றுவித்து அவர்களைக் கூட்டிச்சென்று கலந்துகொள்ளச்செய்து நிகழ்ச்சிகளை மெருகூட்டியுள்ளார்.

 

இலங்கையின் புகழ்பூத்த அறிஞர்கள் பலருடன் இவர் நெருக்கமான உறவை நட்புடன் பேணிவந்துள்ளார்.  பேராசிரியர் சு. வித்தியானந்தன், ஜாமிஆ நளீமியாவின் தாபக அதிபர் மெளலவி யூ எம் தாஸீன்,  பேராசிரியர் ம. மு. உவைஸ், மெளலவி ஏ.ஆர்.எம். ரூஹுல் ஹக், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் புத்தளம் மத்ரஸதுல் காஸிமிய்யாவின் அதிபர் மதிப்புக்குரிய மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸரத்), மெளலவி ஏ.ஆர்.எம். புஆத் போன்றோரும் இவர்களுள் அடங்குவர். பேராசிரியர் சு. வித்தியானந்தன் இவரின் தமிழ் புலமையை மெச்சி நெருக்கமான உறவை வைத்திருந்ததாக இவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

 

புத்தளத்தின் முன்னோடி அதிபர் A K அபூஹனிபா அவர்களுக்கு பல்வேறு அமைப்புக்களால்  ‘மாவட்ட முதலாசான்’, ‘வித்தகப் பேராசான்’, ‘ஆசிரிய மாமணி’  போன்ற பட்டங்கள் வழங்கி  கெளரவிக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் எதனையும் அவர் தனது கரங்களால் பெற்றுக்கொள்ளவில்லை என்பது சத்தியமான உண்மையாகும். காரணம் அவர் ஆசிரிய சேவையில் இருந்து இளைப்பாறியபின் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் முழு நேரமும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பட்டங்கள் வழங்கப்படும் போது உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ மார்க்கப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தாரை  வேண்டிக்கொள்வார். புத்தளம் கல்விப்பணிமனை தமிழ்ப் பிரிவினால் 2018 இல் வெளியிடப்பட்ட வித்தியாலயம் சஞ்சிகையில் அன்னாருக்கு பிரதான இடமொன்று அளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அன்னார் தனது  ஓய்வுக்குப் பின்னர் தன்னை முற்றாக அர்ப்பணித்து தப்லீக் அழைப்புப் பணியில் ஈடுபட்டு கொழும்பு மர்கஸில் 28 வருடங்கள் பொறுப்புதாரிகளில் ஒருவராக பணியாற்றினார்கள். இறுதி மூன்றரை வருடங்கள் வயோதிபம் காரணமாக அங்கு அதான் (தொழுகைக்கான அழைப்பு) மட்டும் சொல்வதற்கு நியமிக்கப்பட்டார்கள். அவரின் கணீரென்ற குரல் காரணமாக ‘மர்கஸ் பிலால்’ என்ற செல்லப்பெயரும் அவருக்கு உண்டு. மர்கஸில் இருக்கும்போது மர்ஹூம் இஸ்மாயில் ஹஸரத்  மர்ஹூம் உவைஸ் ஹாஜியார் யூசுப் சேர் ஆகிய மூவரும் இவரின் நெருங்கிய நண்பர்களாவர்.

 

கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த சித்தி குறைஷா என்பவரை திருமணம் செய்து சித்தி நபீலா, ஐனுல் பெரோஸா, முஹம்மது நவுசாத் ஆகிய மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானார்கள். அதிபர் அபூஹனிபா அவர்கள் தனது 92 ஆவது வயதில் 10.01.2010 இல் இறையடி சேர்ந்தார்கள்.

 

வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

 

தமிழ்த் தாயின் புலமை சாகரத்தில்

என் தந்தையும் ஓர் ஓரம் நின்று தன்னை நனைத்துக்கொண்டார்

 

புத்தளத்தின் தமிழ் புலமை வரிசையிலோ …

தலைமைகளில் ஒருவராக வீற்றிருந்தார்

 

கலை சார்ந்த அறிவியலில், உளவியலில், சங்கீத ஞானப்

பேரறிவில் விளக்கம் கண்ட “வித்தகப் பேராசான்”

 

சன்மார்க்கம் – சங்கீதம் முரண்படவே

அக்கலையை தன் அகத்திலிருந்து அகற்றிக்கொண்டார்

 

“அறிவுக்கடல்” கஸ்ஸாலி இமாம் நூல்கள்

இயன்றவரை இதயத்துள் இறுத்திக்கொண்டு

மெய்ஞானப் பாதை நின்ற

சூபித்துவமல்லாத “பத்திய” குடும்பஸ்தர்

 

பெண்களைப் பூட்டிவைத்த புத்தளத்தின்

அடக்குமுறைக்கு எதிராக – தன்மகளை

படிக்கவைத்து, பல்கலைக்கழகமனுப்பி, பட்டதாரியாக்கி

அக்கால நம் ஊர் நங்கையர்கள் விளங்கிக்கொள்ள வித்திட்டார்

 

எதிர்மறை சிந்தனைசார் தன் மைந்தனையும்

“ஏகனை” துதி செய்ய வேண்டி வென்றார்

 

ஆசிரியப்பணியில் நேரந்தவராமை

தனமில்லா பள்ளிச் சிரார்க்கு தைரியம் தந்தமை

இத்தலைமை ஆசிரியரின் தனிச்சிறப்பாகும்

 

பரிசில்கள் பட்டங்கள் கிடைத்தபோதும்

ஒன்றையேனும்  தம்கரத்தால் வாங்காமல்

“தஃவத்து தப்லீஃக்கு” தன்னை அர்ப்பணித்து

அடக்கமாக வாழ்ந்த அடியார் ஆவார்

 

பெருமை செருக்குடனே பேருலகம் உருண்டபோதும்

“முதகப்பிர்” அதன் மூலம் புரிந்து

புரியாத புதிர்போல ஒரு “முஸாபிர்”போல

இப்புவி வாழ்வுதனை பூர்த்தி செய்தார்

 

வல்லோன் “ரஹ்மான்” இவர்கள் மீது இரக்கம்கொள்ள

இறைஞ்சுகிறான் இவன்தனயன் அவனின் இறுதிவரை

 

(முதகப்பிர் – பெருமைக்குரிய ஒரே இறைவன்)

(முஸாபிர் – பயணி)

 

“தந்தைக்கு என் இதய சமர்ப்பணம்”

ஆக்கம்:

A.H.M. நவுசாத் (மகன்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All