Puttalam Online
uncategorized

தமிழ் மொழி ஆசான் ஹாலிது மாஸ்டர்

தமிழ் மொழி ஆசான் ஹாலிது மாஸ்டர்

ஆக்கம் : மகள் திருமதி H . முஜீபா (சகோதரர்கள் உதவியுடன்) 

புத்தளம் மண்ணில் தமிழ் மொழிக்கு உரமூட்டி வளர்த்தவர்கள் பலருளர். அவர்களுள் மதிப்பிற்குரிய M .I .M . ஹாலிது மாஸ்டரும் ஒருவர் என்பதை இவ்வூர் மக்கள் மறக்கமாட்டார்கள். அந்த வகையில் அகவை 83 ஐக் கடந்து, இன்னும் இன்றும் தமிழ் செய்யுள்களை பொருள் விளக்கத்துடன் வருபவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஹாலிது ஆசிரியர் பற்றிய வரலாற்று சிறுகுறிப்பொன்றை முன்வைக்கின்றோம்.

ஹாலிது அவர்கள் புத்தளம் கங்காணிக்குளம் வீதியில் 1937 .04 .05 ஆம் திகதி மொஹிதீன் இப்ராஹிம் மரைக்கார் , தங்கச்சி பிள்ளை தம்பதிகளின் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார்கள். இவர்களின் அப்பாவுக்கு – ஆனைப் பிள்ளைக்கு 18 பிள்ளைகள். அவர்களுள் ஒருவரே இவரின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

வறிய குடும்பத்தில் பிறந்து, விறகு வெட்டியான வாப்பாவின் குறைந்த வருமானத்திலும், கடையப்பம் செய்து வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கும் தாயின் உழைப்பிலும் வளர்ந்த இவர் சுமார் 10 வயது வரை பாடசாலைக்குச் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் ஒருநாள் இவர் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவரின் மச்சான் மர்ஹூம் ஹபீப் முஹம்மத் ஆலிம்சாஹிப் அவர்கள் இவரை அணுகி ஆலோசனைவழங்கி சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டு கல்வி வாழ்க்கையை ஆரம்பிக்கச் செய்திருக்கிறார் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூர வேண்டும்.

Habeeb Mohamed Aalim Sahib

வகுப்பில் வயது கூடிய மாணவராகக் காணப்பட்டபோதும் வயதுக்கேற்ற திறமை இவரிடம் காணப்பட்டது. எனவே ‘இரட்டைச் சித்தி’ முறையில் வகுப்பேற்றப்பட்டார்கள். 1954ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் (சா/த) பரீட்சையில் சித்தியடைந்ததோடு , இரண்டாம் பிரிவில் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரமும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 1957 . 01 .01 ல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் கல்வியைத் தொடர பொருளாதார நிலை தடையாய் இருந்தது. இதனையறிந்த மர்ஹூம் வதூத் ஆசிரியர் (சகோதரர் ஜலீஸின் தந்தை) ஹாலித் ஆசிரியர் அவர்களை அழைத்துக் கொண்டு ஊர் தனவந்தர் ஒருவரிடம் பண உதவிக்காக படியேறினார். அவரோ , தன்னால் மட்டும் முழுத்தொகையையும் ( அப்போது ரூபா 30 /=) தர முடியாது; தனது உறவுக்கார தனவந்தர்கள் மூவரிடமும் தலா 7 .50 சதம் பெற்றுக்கொண்டால் தானும் ஒரு பங்கு தருவதாகக் கூறினார். இதனை விரும்பாத இவர், “எனக்கு இந்த பங்கு வியாபாரத்தில் உடன் பாடில்லை என்னை விட்டுவிடுங்கள் Sir” என வதூத் ஆசிரியரிடம் கூறிவிட்டார்.

இவ்விடயத்தைக் கேள்விப்பட்ட அவர்களின் தாயார், உறவினர்களான மாமா, செல்லப்பா போன்றோரின் உதவியுடன் பண ஏற்பாடுகளை செய்து, தனது மகனின் கனவை நனவாக்க பயிற்சிக் கலாசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். இப்பணம் தொடர்ச்சியாக அனுப்பபட்ட நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக கல்விக்காக வழங்கப்பட்ட காசும் தடைப்பட்டது. இந்நிலையில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த , யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகம்மா ஆசிரியர், தன் கழுத்துச் சங்கிலியை அடகு வைத்து , இவரின் ஓரிரண்டு மாத பயிற்சிக்காலத்துக்கான மீதித் தொகையை ஏற்பாடு செய்து கொடுத்தமை இன்றும் ஹாலித் Sir இன் மனதில் நன்றியுணர்வோடு பசுமரத்தாணியாய் இருக்கின்றது .

இருப்போர் இடமிருந்து வலம்

1. இவுஜின் பெரேரா (தங்கொட்டுவ) 2. ஹெலன் மிரேண்டா (பொலவத்த) 3. மெகிலின் பெரேரா (தங்கொட்டுவ, முதலாமவரின் சகோதரி)

நிற்போர் இடமிருந்து வலம்

1. கனகம்மா (யாழ்ப்பாணம், ஹாலித் ஆசிரியருக்கு உதவியவர்) 2. நாகம்மா (யாழ்ப்பாணம்) 3. பெயர் நினைவில்லை. பிரிட்டோ ஐயாவின் மகள். இவர் தவிர ஏனையோர் ஹாலித் ஆசிரியர் வீட்டுக்கும் அருகில் வாடகை வீட்டில் வசித்தவர்களாவர். இவர்கள் 1950 களில் புத்தளம் பெண்கள் பாடசாலையில் (தற்போதைய ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை) ஆசிரியர்களாகப் பணியாற்றியோராவர்.

கற்பித்தல் கால காலடித் தடங்கள்

1959 .01 .05 ல் தனது கற்பித்தல் தொழிலை கனமூலை அ.மு.வி. ல் ஆரம்பித்த இவர்கள் , 32 வருட கால ஆசிரிய சேவையில் புத்தளம், ஆனமடுவ தேர்தல் தொகுதிகளிலுள்ள சுமார் 10 பாடசாலைகளுக்கு , 11 தடவைகள் இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

பணியாற்றிய பாடசாலைகளும் காலப்பிரிவும்
1. பு/ கணமூலை அ.மு.வி                        59.01.05      64.12.31 –         (05 வரு  11 மாத  26 நாட்)
2. பு/ ஸாஹிரா ம.வி                                    65.01.01      69.06.14 –        04 05 13
3. பு/ முசல்பிட்டி அ.மு.வி                        69.06.15       70.07.23 –          01 – 08
4. பு/ ஸாஹிரா க.மு.வி                             70.07.24       71.01.30 –             06 06         (6 மாதங்கள்)
5. பு/ ஸாஹிரா ம.வி                                    71.01.31        77.10.27 –        06 08 26
6. பு /டச்பே ரோ.க.வி                                  77.10.28        78.01.17 –              02 16         (2 மாதங்கள்)
7. பு/ முகத்துவாரம் மு.வி                        78.01.18        78.06.30 –            05 15          (5 மாதங்கள்)
8. பு/ மதவாக்குளம் மு.வி                        78.07.01       86.01.31 –        07 06 30
9. பு/ கொந்தாந்தீவு மு.வி                        86.02.01       86.03.14 –             01 13          (1 மாதம்)
10. பு/ கடையாமோட்டை அ.மு.வி    86.03.15       86.06.14 –             02 29         (3 மாதங்கள்)
11. சி/ முந்தல் த.மு.வி                                 86.06.15        90.04.30 –        03 10 15
12. பு/ தில்லையடி அ.மு.வி                     90.05.01        90.12.31 –              07 30         (7 மாதங்கள்)

மேற்குறித்த பாடசாலைகளில் இவர்கள் கற்பித்த காலங்களில் ஆற்றிய பணிகள் பலவிருப்பின்னும் அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். பு/கணமூலை அ.மு.வி ல் ஆசிரியராக, பதிலதிபராக பணியாற்றிய இவர்கள் , அதன் ஆரம்ப பாடசாலை கீதத்தையும் இயற்றியுள்ளார்கள். இப்பாடசாலைக்கு முதன் முதல் நியமனம் பெற்று சென்றபோது , பாடசாலை நலன் விரும்பி ஒருவர், இவரை அணுகி, “வந்துட்டீங்க! எப்பப் போவீங்க?” எனக் கேட்டிருக்கிறார். அதற்கு இவர் “பாடசாலை விட்டுப் போவேன்” எனப் பதிலளித்திருக்கிறார். “அப்படிக் கேட்கவில்லை; இப்பாடசாலையை விட்டு எப்ப மாறிப் போப்பறீங்க?” , என்று தான் கேட்டேன் என அந்நலன் விரும்பி கேட்டதற்கு, “ஒரு பிள்ளையையாவது ஓர் உத்தியோகத்துக்கு அனுப்பாமல் போகமாட்டேன்” எனக் கூறியுள்ளார். அதன்படியே அல்லாஹ்வின் உதவியுடன் , ஒரு மாணவனை கிராம உத்தியோத்தராக்குவதற்கான அடிப்படைக் கல்விக்கு தாம் உதவியதையும் அவர் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

புத்தளம் ஸாஹிரா மத்திய வித்தியாலத்தில் அன்னார் ஆற்றிய அரும்பணிகள் மகத்தானவை . பாடசாலை தரிசு நிலத்தைப் புரட்டி, நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது வெட்டுகுளம் மையவாடியின் பின்புறமாக உள்ள ஸாஹிரா கல்லூரியின் காணியில் வேளாண்மை செய்தமை, தற்போது அஸ்வர் மண்டபம் அமைந்திருக்கின்ற பகுதியில் பெரிய நாற்று மேடை ஒன்று அமைத்து அதில் மரக்கறிகளும் , ஏனைய சில பயிர்களும் உற்பத்தி செய்தமை போன்றன அவர்களுடைய பசுமையான நினைவுகளாகும். ஹாலித் ஆசிரியர் விவசாயத்தில் அதிக ஈடுபாடுடையவராக இருந்தபடியால் அப்போது விவசாய அமைச்சராக இருந்த “ஹெக்டர் கொப்பேகடுவ” என்பவரின் பெயரைச் சொல்லி இவர்களை அழைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். தனது ஓய்வு நேரங்களிலும் ஒரு சில ஏக்கர் தனது சொந்த வயல் நிலத்தில் வேளாண்மையில் ஈடுபடுவதை மிகவும் விரும்பினார். இது விவசாயத்தில் நல்ல அனுபவத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.

ஆசிரியர் அவர்கள் பாடசாலையின் பொருட்காட்சி , இல்ல விளையாட்டுப் போட்டி போன்ற இணைப் பாடவிதான நிகழ்வுகளுக்காக முழு நேரத்தையும் பாடசாலையிலே கழித்து, தன்னை அதற்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்களாக காணப்பட்டார்கள். இச்சந்தர்ப்பங்களில் சாப்பாடு கூட வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுக்கப்படும் என்பதை அவர்களின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களைக் கேட்டால் தெரியும். ஸாஹிராக் கல்லூரியில் கற்பித்த காலத்தில் தான் பொறுப்பாக இருந்த ‘கமால் இல்லத்தை’ என்றுமே வெற்றிப் பாதையில் வைத்திருந்ததை மிக மகிழ்வுடன் கூறிக் கொள்வார்கள்.

Kamal House – 1967

மதவாக்குளம் மு.வி. ல் கடமையாற்றிய போது அங்கிருந்த வெற்று நிலத்தில் கௌபி, பயறு போன்ற சிறு தானியப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தமை அவர்களுக்கு இருந்த விவசாய வேட்கையையே வெளிப்படுத்துகிறது. புத்தளத்திலிருந்து சுமார் 30  மைல் பஸ்ஸில் சென்று, 4  மைல் நடந்து செல்ல வேண்டிய மதவாக்குளம் பாடசாலையில் 8 வருடங்கள் சேவையாற்றியபோதும் அதில் அதிக நாட்கள் சம்பளமற்ற விடுமுறையாகக் கழிந்தது. தன் நிலைமை இவ்வாறிருக்கின்றபடியால், அங்கு கற்றுக் கொண்டிருந்த திறமைமிக்க மாணவர்கள் சிலரின் பெற்றோரை அணுகி, அப்பிள்ளைகளை சிலாபம் நஸ்ரியாவில் சேர்த்து விடும்படியும் தன்னால் அப்பிள்ளைகளுக்குத் துரோகம் இழைக்க முடியாது என்றும் கூறி, அவர்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டிக்கொடுத்தமை அன்னாரின் பெருந்தன்மைக்கு ஓர் உதாரணமாகும்.

கடையாமோட்டை மு. வித்தியாலயத்தில் கற்பித்த காலங்களில், பருவ வயதையடைந்த பெண் பிள்ளைகள் பாடசாலையை விட்டும் இடைவிலகிக் கொள்ளும் பழைமை வழமை இருந்தது. இந்த சவால்களை சக இள ஆசிரியர்களின் துணையுடன் எதிர்கொண்டு அம்மாணவிகளும் கல்வியைத் தொடர பங்களிப்புச் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  அவ்வாறே முந்தல் த.ம.வித்தியாலயத்தில் கற்பித்த காலப்பகுதியில் சரஸ்வதி பூசை போன்ற சமய நிகழ்வுகளில் வேற்றுமை பாராது தான் தனது தமிழ்ப் புலமையும் பிரயோகித்து  ஒத்துழைப்பு நல்கியதை சுவாரஷ்யமாகக் கூறுவார்கள்.  தில்லையடி முஸ்லிம் வித்தியாலத்தில் கற்பித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாடசாலைக்குச் சொந்தமான மைதானத்தை அபகரிக்கும் எண்ணத்தோடு வெளியாரால் கட்டப்பட்டிருந்த ஓலைக்கொட்டில்களை பிடுங்கி எறிந்து தற்துணிவுடன் செயற்பட்டதை அன்றைய ஆசிரியர் குழாம் மறந்திருக்காது.

1977ல் வீசிய புயலில் சிக்குண்டு …

இலங்கையில் 1977 ம் ஆண்டு வீசிய அரசியல் புயலால் S .L .F .P எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. அந்தப் புயலில் ஸாஹிராக்கல்லூரியும் பாதிக்கப்பட்டது. அர்ப்பணத்துடன் அறப்பணி புரிந்த ஆசிரியர் பலர் இடமாற்றஞ்செய்யப்பட்டனர். அவர்களுள் ஹாலித் ஆசிரியரும் ஒருவர்.

புத்தளத்திலிருந்து 36 மைல் பேருந்திலும் 6 மைல் கடல்வழியாகவும் பயணிக்க வேண்டிய டச்பே ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்துக்கு, ஆரம்பத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட இவர்கள் , 2 மாதம் 16 நாட்களில் முகத்துவாரம் முஸ்லிம் பாடசாலைக்கு மீண்டும் மாற்றம் பெற நிர்பந்திக்கப்பட்டார்கள். இப்பாடசாலையும் புத்தளத்திலிருந்து 32 மைல் பேருந்திலும் 2 மைல் நடந்தும் செல்ல வேண்டிய ஒன்றாகும். இதன்போது எந்தவித பிரயாணக் கொடுப்பனவுகளும் இருக்கவில்லை. இரு பாடசாலைகளிலும் முறையே 3 , 7 மாதங்களவில் சேவையாற்றியுள்ளார்கள். இவ்வாறு அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காயாக இருந்த ஹாலித் ஆசிரியரை பொருளாதாரம் நெருக்கியது. இருந்த போதும் ஆசிரியத் தொழிலை விடாமல் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டார்கள். டச்பேயில் இருந்து கருவாட்டைக் கொண்டு வந்தும் , முகத்துவாரத்தில் முட்டைப் பெட்டியை சுமந்து வந்தும் பொருளாதாரச் சிக்கலைச் சமாளித்தார்கள்.

இவ்வேளையில் மர்ஹூம் புஹாரி ( பீராவுத்தர் நியாஸின் தந்தை) ஐயா – புகாரி) , இவரை அணுகி “மாஸ்டர், இப்படித்தான் இவங்க உங்கள மாத்திக்கிட்டே இருப்பாங்க. நான் பணம் 18000 /= தாரேன். வெளிநாட்டுக்கு போங்க; குடும்பக் கஷ்டம் தீரும்” என்று கேட்டுக்கொண்டார் (அன்னாரின் நாள் எண்ணத்திற்கு அல்லாஹ் கூலி கொடுப்பானாக!) ஆனால் தனது முதல் மூன்று ஆண்பிள்ளைகளும் 10 ,11 ,12 வயது மட்டங்களில் இருப்பதால் அவர்களின் கல்வி , ஒழுக்க விடயங்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்பதைக் காரணங்காட்டி அவ்வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்கள்.

தொடர்ந்தும் இடமாற்றப் புயல் இவரை நோக்கி வீசிக்கொண்டிருந்தது. புத்தளம் தொகுதியிலேயே இவர் இருக்கக்கூடாது என்ற காரணத்தால் 1978 .07 .01 ந் திகதி மதவாக்குளம் மு. விற்கு இடமாற்றப்பட்டு , எட்டு வருடம் கடந்து கொத்தான்தீவு மு .வி (01 மாதம் 13 நாட்கள்), கடையாமோட்டை மு.வி. (3 மாதங்கள்), முந்தல் த. ம. வி. (3 வருடங்கள் 10 மாதங்கள்) , தில்லையடி மு. வி. என பந்தாடப்பட்டார்கள். இறை நாட்டப்படி ஓய்வு பெற ஒரு வருடம் இருக்கும் நிலையில் 32 வருட ஆசிரிய சேவையுடன் 1991 .01 .01 தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்கள். தனது ஆசிரிய சேவைக்காலத்தில் தொலைக்கல்வி ஆசிரியர்களுக்கு வளவாளராகவும் பணியாற்றியுள்ளார். அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஆசிரிய சேவையில் இருந்து அவர் ஓய்வு பெறவில்லை. ஆம் ‘சைதா’ தனியார் கல்வி நிறுவனத்தில் (Saidha E.C.) தமிழ்மொழி கற்பிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

S .E .C Tuition யுகம் 

புத்தளத்தின் மூத்த, தமிழ்ப் பழங்களுள் ஒருவர் மர்ஹூம் தெளபீக் ஆசிரியர் ஆவார். ஹாலித் ஆசிரியரின் உற்ற நண்பர். மர்ஹூம் ரஷீத் ஆசிரியரின் SEC தனியார் கல்வி நிறுவனத்தில் தமிழ் மொழி கற்பித்து கொண்டிருந்த காலத்தில் அகால மரணமானார். அதன் பின்னர் அவ்விடைவெளியை நிரப்பியவர் ஹாலித் ஆசிரியரே. கிட்டத்தட்ட 26 வருடங்கள் அங்கு தமிழ் மொழி கற்பித்து, திடீரென ஏற்பட்ட சுகவீனங்காரணமாக 2017 ஜனவரியுடன் அதிலிருந்து விலகிக்கொண்டார்கள்.

தெளபீக் ஆசிரியர்

அங்கு கற்பித்த காலங்களில் அவரிடம் காணப்பட்ட விஷேட அம்சங்களை குறிப்பிட வேண்டும்.

* தரம் 6 இல் இருந்து திட்டமிட்டு குறிப்பிட்ட செய்யுள்களை மாணவருக்குப் பாடிக்காட்டி மனனமிடச்செய்தல்.

* பயிற்சிக் கொப்பிகளை , வகுப்பு வாரியாக அழகாக அடுக்கிக்கட்டி , தன் துவிச்சக்கரவண்டி கூடையில் வைத்து , வீட்டுக்குக்கொண்டு வந்து திருத்துதல்.

* மாதா மாதம் மாணவர்களுக்கு கட்டுரைகளை வழங்கி எழுதுவித்தல் , திருத்துதல்.

* இடையிடையே பயிற்சிப் பத்திரங்களைப் பிரதி செய்து வழங்குதல்.

என இவர்களின் செயற்பாடுகள் கட்டுக் கோப்பாகக் காணப்பட்டன. இந்நிறுவனத்தில் கற்பித்த ஆரம்ப காலங்களில் O/L , A/L வகுப்பு மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற சம்பவங்களும் இன்றும் அம்மாணவிகளால் ஞாபகமூட்டப்படுகின்றன. இச்சுற்றுலாவில் தனக்குத் துணையாக அவர், தன் நண்பர் ரஹ்மத்துல்லா ஆசிரியரையே கூட்டிச்செல்வார்.

அரசியல்

1956 தொடக்கம் 2015 வரை சுமார் 59 வருடங்கள் தீவிர அரசியலில் ஈடுபட்ட பெருமையும் இவருக்குண்டு. SLFP யின் தீவிர ஆதரவாளர். சமாசமாஜக் கட்சியில் புத்தளத்தில் போட்டியிட்ட மன்சூர் என்பவரின் அரசியல் பிரவேசத்தோடு இணைந்து முதலாளித்துவத்திற்கு எதிரான கொள்கையோடு அரசியலில் ஈடுபட்டார்கள். SEM அஸன் குத்தூஸைத் தொடர்ந்து SLFP யின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் மர்ஹூம் A .A .லத்தீப் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்கள். பின்னர் இக்கட்சியை ஆதரித்த M .H .M .நவவி அவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள்.

இடைத் தேர்தல் பிரசாரம்

மேடைப் பேச்சின் மூலமும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் தான் சார்ந்த கட்சிக் கொள்கைகளை அழகாக விளக்கும் ஆற்றல் இவர்களுக்குண்டு.பாராளுமன்ற முந்நாள் உறுப்பினர் அல்ஹாஜ் M .H .M . நவவியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் 1998 ம் ஆண்டு நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் , சுயேச்சைக் குழு ஒன்றை அமைத்து அதில் 18 வேட்பாளர்களை களமிறக்கி பிரதான கட்சிகளை எதிர்த்துப் போட்டியிட்டு பிரசாரம் செய்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியல் காடையர்களின் அடாவடித்தனத்துக்கும் முகம் கொடுத்தமை மறக்க முடியாததாகும்.

1997 ஆம் ஆண்டு நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையுமாறு சுயேச்சையாக போட்டியிட்டு நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்கள். நம்பிக்கை வைத்த அவரது மாணவர்களின் வாக்குப்பலமே அவ்வெற்றிக்குக் காரணம் எனலாம்.
பின்னர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனது நோயையும் பொருட்படுத்தாது, வாக்களிக்கச் சென்றார்கள். 3 தசாப்தங்களுக்குப் பின்னர் எமது ஊர் இன்று ஒரு MP யைப் பெற்றுள்ளதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததை, அவர்களை சந்திக்கச் சென்ற நமது MP யின் சந்திப்பு நிகழ்வில் அறிய முடிந்தது. குறிப்பாக, மர்ஹூம் M .I .B .ஹாபி, நகரசபைத் தலைவராக இருந்த போது கட்டப்பட்ட Town Hall  க்கு, ” H .S . இஸ்மாயில் மண்டபம் ” எனப் பெயரிடுங்கள் எனக் கோரிக்கை விட்டு வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் H .S .இஸ்மாயில் பற்றிய முக்கிய தகவல்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கை வந்த கலை …

தனது மனதில் தோன்றிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்துவதற்காக தன் கை வந்த கலையாக இவர்கள் கையாள்கின்ற ஓர் உத்தியே துண்டுப் பிரசுரமாகும். அது அரசியல் விடயமாகவோ சமூகம் சார்ந்ததாகவோ இருக்கும். அதில் தனது பெயரை அழகாக உண்மையுள்ள ஹாலிது மாஸ்டர் எனத் தெளிவாக பெயர் இட்டே வெளியிடுவார். இவரது துண்டுப் பிரசுரங்களில் அநேகமானவை ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி Z .A .Zanhir sir இடம் சேகரிக்கப்பட்டிருக்கும்.

இன்னும் இன்னும் …

பொதுச்சொத்துக்கள் விவகாரம்

சமூகத்துக்குச் சேரவேண்டிய பொதுச் சொத்துக்களை தனிப்பட்ட முறையில் யாராவது தமதாக்கிக் கொள்ள நினைத்தால், அது இவர்களின் பார்வைக்கு ஏதோ ஒருவகையில் எட்டிவிடும். பின்னர் அதை மீட்டு எடுக்கும் வரை அயாராதுழைப்பார். அந்த வகையில்,

*புத்தளம் மாவட்டடத்தின் அப்போதைய அரசியல் பெரும்புள்ளி ஒருவரின் கழுகுப் பார்வைக்குள் ‘ரேஸ் தரவை’ என அழைக்கப்படும் I . B .M வளாகம் அகப்பட்டுக் கொண்டதை அறிந்தார் இவர். அடுத்த கணமே சிலரின் உதவியுடன் அவ்வளாகத்தைச் சுற்றி கம்பி வேலி எல்லையிட்டார். அதன் விளைவு இன்று எம்மூர் மக்களுக்கு ஒரு பள்ளிவாசலையும் , பொது மண்டபம் ஒன்றையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

* இன்று ஸாஹிராக் கல்லூரி மைதானமாகப் பயன்பட்டுக்கொண்டிருக்கும் கறுப்புத் தரவை மீட்பு வரலாற்றில் இவருக்கும் கணிசமான பங்குண்டு. இக்காணி மீட்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக ஒரு நாள் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தார். கறுப்புத் தரவை ஆக்கிரமிப்பாளர்களால் கட்டப்பட்ட குடிசைக்கு தீ வைத்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பலருடன் சேர்த்து இவரும் இவரது மூன்றாவது மகனும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள்.

அத்தோடு இத்தரவையின் பூர்வீக வரலாறு தொடர்பாக இவரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் , தனது பெயர் குறிப்பிடப்பட்டது தவறு எனக் கூறி ஊர் பிரமுகர் ஒருவர் 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். அதற்காக தானும் ஓர் இலட்சத்து ஏழாயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார். அப்பணம் அவரின் நகரசபை உறுப்பினர் பதவிக்காக மாதாந்தம் கிடைத்த 3090 /= இலிருந்தே செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய முன்னணி இயக்கம் (I.F.M.)

இஸ்லாமிய முன்னணி இயக்க உறுப்பினராக இருந்து இயக்கத்தின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்களுள் இவர்களும் ஒருவர். அக்காலத்தில் பாட நூல்களும் பயிற்சிக் கொப்பிகளும் பெரும் விலைக்கு விற்கப்பட்டதை அறிந்து மலிவு விலையில் அவற்றை வழங்குவதற்காக IFM புத்தக சாலை ஒன்றை ஆரம்பித்து நடத்தியமையை அதிலிருந்து பயன் பெற்றவர்கள் இதை வாசித்து உறுதிப்படுத்துவார்கள். இஸ்லாமிய முன்னணி இயக்கத்தின் தற்போதைய நிலையை எண்ணி இன்றும் கவலைப்படுபவராகவே உள்ளார்கள். இயக்கத் தளபாடங்கள் , இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றி பேசத் தொடங்கினார்கள் என்றால் முடிவு இருக்காது.

இந்த இடத்தில் கவலைதரும் விடயம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.சமூக நலன் கருதி தூய நோக்குடன் செயற்படுகின்ற இவர்களை IFM அபகரிப்புக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தமைக்காக சகோதரர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். வயது 80 ஐ தொட்ட நிலையில் தள்ளாடும் வயதிலும் , பொலிஸ் நிலையம் சென்று விசாரணைக்கு முகம் கொடுத்து வந்தமை பலருக்குத் தெரிந்திருக்காது. இவரின் கொள்கை பற்றி ஊரே அறியும். எந்தப் பொதுச்சொத்துக்கும் ஆசைப்படாதவர். ஆனால் IFM நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எவ்வித ஆலோசனைகளையும் பெறாது , அறிவித்தல்களும் வழங்காது இயக்கத்தை தம் வசப்படுத்தியவர்கள் யார் என்பதை ஊர் அறியட்டும்.

 IFM முன் பள்ளி நடந்த இடம். மவ்லாமக்காம் பள்ளிக்கு பின்னாலுள்ள முஸ்லிம் வாலிபர் சங்க கட்டடம். முன் பள்ளி ஆசிரியைகள் இடமிருந்து வலம் ரூபி மிஸ், ஜாரியா உம்மா (ஹாலித் ஆசிரியரின் உறவினர்)  – 1970 கள்

பெருநாள் ரேஸ்

புத்தளத்து பெருநாள் என்றால் அது ஸ்பெஷல். அதில் பெருநாள் ரேஸ் இன்னும் விஷேடம். அந்த நாட்களில் எமது பெருநாட்கள் இரண்டையும் சந்தோஷப்படுத்துவதற்கு , புத்தளத்து முன்னோர்கள் செய்த ஏற்பாடே பெருநாள் தின விளையாட்டுப் போட்டியாகும் . அந்த முன்னோர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஜலால்தீன் மரைக்கார் அவர்கள். அவரின் தலைமையில் இன்னும் சிலரும் இணைந்து இவ்விளையாட்டுப் போட்டியை நடாத்துவார்கள். இந்த பெருநாள் ரேஸிலும் ஹாலித் ஆசிரியர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பஜாரில் பரிச பொருட்கள் சேகரிப்பதற்காக ஒவ்வொரு கடைக்கும் ஏறி இறங்குவார். கடைக்காரர்களும் தம்மால் முடிந்ததை மனமுவந்து வழங்குவர். தற்போதைய IBM மண்டபம் அமைந்திருக்கும் மைதானத்தில்தான் மேடை அமைக்கப்பட்டிருக்கும். ஒலி வாங்கி இவரின் கையிலிருக்கும். ஹாலித் மாஸ்டரின் சுவாரஷ்யமான அறிவிப்புக்களுடன் , Member ஹுசைன் அவர்களின் வீர விசில் கம்பீரமாக ஒலிக்க மக்கள் குதூகலத்தில் விளையாட்டைக் கண்டு களித்த வரலாறுகள் இவரின் பக்கத்திலும் பதியப்பட வேண்டிய ஒன்றாகும்.

எழுத்து வீச்சு

இவர்களுக்கு இறைவன் கொடுத்த வரங்களுள் எழுத்தாற்றலும் ஒன்று. அந்த வகையில் மீலாத்தினம்,தமிழ்மொழித்தினம் போன்ற இன்னோரன்ன போட்டி நிகழ்ச்சிகளுக்காக பேச்சு, பாடல், நாடகம், இசைச்சித்திரம் என்று பல படைப்புக்களை எழுதிப் பயிற்றுவித்து , வெற்றிபெற வைத்தவர்களுள் இவருக்கு தனியிடம் உண்டு. மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு தன்னால் முடிந்தளவு உதவும் மனப்பாங்கை இவரிடம் காணலாம்.இதற்கு மாணவர் பலர் சான்று பகர்வர்.

இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் (YMGA)

புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் க.பொ.த , உ/த மாணவர்களுக்கான உயர்கல்விப் பாடங்கள் கற்பிக்கப்பட்ட போது ,தமிழ் மொழி கற்பிக்க யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் மாணவிகள் நான்குபேர் தமிழ்ப் பாடம் கற்க பேராசைப்பட்டு நின்றனர். அம்மாணவிகளின் அன்பு வேண்டுகோளுக்காக தற்துணிவுடன் அவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். தான் பட்டதாரி இல்லை; நான் ‘மொட்டதாரி’ என்று நகைச்சுவையாக அவைக்கு அடங்கி , தான் எடுத்த பணியைச் சிறப்பாக செய்து இறையுதவியால் அந்நால்வருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். அதில் ஒருவர் இன்று பல்கலைக்கழக விரிவுரையாளர். ஏனைய மூவரும் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களாவர். மேலும் மாணவர்களை வீட்டுக்கு அழைத்தும் பாடம் சொல்லிக் கொடுப்பதும், பாடம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதும் கூட இவரின் பண்பாகும்.

மேலும் 1980 களில் YMGA யின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பலவகையிலும் ஆதரவளித்ததோடு வகுப்புக்கள் பராமரிப்பிலும் நேரடியாக ஒத்துழைப்பை வழங்கியவர்களுள் பிரதானமானவர் ஹாலித் ஆசிரியராவார். மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளையும் அவர் வழங்கினார்.  அத்துடன் சங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டபோது உயர்கல்வி வகுப்புக்களை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. அந்தவேளை இடம்பெற்ற பெருநாள் ‘ரேஸ் தரவையில்’ டொபி விற்பனை மூலம் பணம் திரட்டப்பட்டது. இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கியவர் M.I. ஹாலித் ஆசிரியரே.

தொழில் முயற்சிக்கு ஊக்கமளித்தல்

படித்துவிட்டு வேலையற்றிருக்கும் மாணவர்களை வீடு தேடிச் சென்று அரசு தொழிகளுக்கு விண்ணப்பிக்குமாறு தூண்டுவதும் இவரின் பாராட்டப்பட வேண்டிய செயற்பாடாகும். விண்ணப்பங்களைக் கூட தானே எடுத்து வீடு தேடிக் கொண்டு போய்க் கொடுத்து விண்ணப்பிக்கச் செய்வார். ஹுதாப் பள்ளிக்கு அருகில் உள்ள காணியில் பெண்களுக்கான தையல் தொழில்பயிற்சி நிலையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஊர் தனவந்தர் சிலரிடம் தான் விட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதை இடைக்கிடை நினைவூட்டுவார்.

விளையாட்டு வீரம்

இவர் சிறந்த ஓட்ட வீரர் . பாடசாலைக் காலங்களில் 200 , 400 M களில் பங்குபற்றி மாகாண மட்டம் வரை சென்றவர். இந்நிகழ்வைக் கூறும்போது தம்மை அழைத்துச் சென்ற A .M .S .இபுறாஹிம் (வதூத் Sir – ஜரீஸ் தந்தை) அவர்களைத்தான் நினைவு கூர்வார். க. பொ. த (சா/த) எழுதிவிட்டு , இடைக்காலத்தில் சென் அன்றூஸ் கல்லூரியில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்தார். அவ்வேளை இடம்பெற்ற பெருநாள் ரேஸில் ஓட்டப்போட்டியில் இவர் பங்குபற்றி வெற்றிபெற்றதை அப்போதைய சென் அன்றூஸ் அதிபர் அவதானித்திருந்து, தனது பாடசாலை பங்குபற்றும் ஓட்டப்போட்டிக்காக இவரை நீர்கொழும்புக்கு அழைத்துச் சென்றாராம். அங்கே தோற்றத்தில் ஆகச்சிறியவராக இவர்தான் இருந்திருக்கிறார். இருப்பினும் நான்காம் இடம் பெற்றதை அந்த அதிபர் பாராட்டியுள்ளார்.

இதைவிட இவருக்கு கரப்பந்தாட்டத்திலும் அதிக நாட்டமுண்டு. முன்னைய அசோகா தியேட்டருக்கு முன்னாலிருந்த ‘வெம்பிளி’ விளையாட்டு மைதானத்தில், வெம்பிளி கழகத்தில் இணைந்து கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இடமிருந்து வலம்: M.S.A. ரசூல் ஆசிரியர் (சித்திரம் – சிலாபத்தில் திருமணம் செய்தவர்), வதூத் ஆசிரியர் (Father of Jalees), ஹாலித் ஆசிரியர்

கற்றல் காலம் பற்றி …

10 வயதில் பாடசாலை சேர்க்கப்பட்டவர். பாடசாலைக்கு செல்லாதவேளை, தன் சகோதரனை வழக்குக்கு அனுப்பி விடுவார். பண்டிதர் முருகேசிடமிருந்து தமிழ்ச் செய்யுள் மனனத்தைக் கற்றுக் கொண்டவர். மர்ஹூம் ஷாஜஹான் Sir (கல்வியதிகாரி, Zanhir Sir இன் மாமா) ,  A .K அபூஹனீபா போன்றோரிடமும் தமிழ் கற்றவர். வாசிப்பதில் தீவிர ஆர்வம் காரணமாக ‘கற்கண்டு’ புத்தகம் வாங்க, தாயின் கடையப்பக் காசுக்கு போலிக் கணக்குக் காட்டியவர்.

இன்னும் பல விரிவஞ்சி விடப்படுகிறது.

தலைப்பிட முடியாத சில…

* சவீவபுர பகுதியில் ஸைனப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாக சில ஆவணங்களை வைத்து ஊரவர்களோடு ஆலோசனைகளில் ஈடுபட்டமை

* ஊர்ப்பாடசாலை அதிபர் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வுகளுக்கு வழிகாட்டியமை

* குடும்ப, சமூக இன்ப துன்பங்களின் போது மூத்த மனிதராக இவரை நாடிவந்து அழைத்துச் செல்வது .(திருமண பேச்சு, விவாகரத்து போன்றன)

* போட்டிகளின் போது நடுவராகப் பணியாற்றியமை

* தர்ம சிந்தையும் தயாளப் பண்பும்

* வறிய மாணவர்களின் கற்றலுக்குத் தன்னால் முடிந்தளவு உதவுபவர்.

* க.பொ.த. உ/த மாணவர்கள் தமக்கு தமிழ் மொழி கற்பிக்க ஆசிரியர்கள் இன்றி தவித்தபோது புத்தளம் ஸாஹிரா கல்லூரி, மணல்குன்று மு.ம.வி. போன்ற பாடாசாலைகளில் அவ்விடத்தை  நிரப்ப மாணவர்களுக்கு உதவிகாரம் நீட்டியுள்ளார்.

ஒருமுறை ஆசிரிய நண்பரின் (மாற்று மதத்தைச் சேர்ந்தவர்) வீடும் அவரது அண்ணன் வீடும் தீப்பற்றி எரிந்த போது , இரண்டு குடும்பங்களுக்கும் மாதக் கணக்கில் தனது வீட்டிலே தஞ்சம் கொடுத்து உதவினார்கள்.

என்று இவர்களின் சேவைப் பக்கங்கள் நீண்டு செல்லும் …

வாழ்க்கை ஒழுங்கும் குடும்பமும்

நடமாடித் திரிந்த வரைக்கும், சுபுஹுக்கும், மஃரிபுக்கும் பின்னர் குர்ஆன் ஓதுவது இவரின் வழக்கமாகும். இவரின் ஓதல் சத்தம் ஒரு நிம்மதி என்று அயல் வீட்டார் கூறுவர்.

தான் வாழ்ந்த வீடுகள் எல்லாவற்றிலும் தண்ணீர் தொட்டி கட்டுவார். தனக்கிருந்த நோய்க்காக நீரில் அமிழ்ந்திருந்து குளிப்பதை வழக்கமாக கொண்டவர். சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுதல், தலைக்கு தினந்தோறும் எண்ணெய் பூசுதல், நொறுங்கத் தின்னுதல் (நொறுங்கத் தின்றால் நோயில்லை என்பார்) கண்ணாடியின்றியே (இதுவரை 83 வயதிலும்) வாசித்தல், ஓதுதல், கைமருந்தை விரும்புதல் என்பன இவரிடம் காணப்படும் தனித்துவமான பண்புகளாகும்.
நடமாடும் காலங்களில், மாதாந்த போயா விடுமுறையை குடும்ப உறவுகளைத் தரிசிப்பதற்காக ஒதுக்கிக்கொள்வார்.

தன் பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் அதிக பங்களிப்புச் செய்தவர்.இப்படிப்பட்ட மனிதர் இன்று, உடல் இயலாத நிலையில் கட்டிலோடு இருக்கிறார். ஆனால் அவர்களின் உள்ளம் ,கற்றலை விரும்பிய நிலையிலேயே இருக்கிறது. உறவுகள், தெரிந்தவர்கள் , மாணவர்கள் என இவரை நலம் விசாரிக்க நாள் தவறாது வந்து போகும் நபர்களுக்கு இறைவன் கூலி கொடுக்கப் போதுமானவன். இன்னும் பார்க்க வராவிட்டாலும் சுகம் விசாரிக்கும் உள்ளங்களுக்கும் நிச்சயம் கூலியுண்டு.

அவர்களின் மனைவி சராப் நாச்சிய ,ஹாலித் ஆசிரியரின் கற்பித்தல் பணிக்கும், பிள்ளைகள் வளர்ப்பிலும் உறுதுணைபுரிந்தவர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் 4 ஆண்கள், 3 பெண்கள். இவர்கள் விபரம் ஊர் அறியும்.

இத்தகைய மனிதர்களின் வரலாறுகள் சாதாரணமானவையா , சாதித்த வரலாறுகள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். *மனிதன் என்றவகையில் பலத்துடன் பலவீனமும் இணைந்தேயிருக்கும் இவர்களின் பலத்தை அங்கீகரித்து ,பலவீனத்தை மன்னிக்கும்படி பிரார்த்திப்போம்.

 

 


One thought on “தமிழ் மொழி ஆசான் ஹாலிது மாஸ்டர்

  1. ஏ.என.எம்.பௌமி says:

    சிறந்த ஆக்கம்.வாசிப்பவர்களுக்கு உறுத்தாத மொழியான்மை. என்றாலும் இதனை பதிவிட்டவர்கள் மூன்று தொடர்க ளாக பதிவிட்டிறுக்கலாம். இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All