Puttalam Online
uncategorized

ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் மரிக்கார் – வாழும் மனிதம்

  • 22 November 2020
  • 579 views

ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் மரைக்கார் – வாழும் மனிதம்

— முஹ்ஸி —

புத்தளம் நகரைச் சேர்ந்த செய்யது ரஹ்மத்துல்லாஹ் மரிக்கார் 1942 ஜனவரி 30 ஆம் திகதி நெய்னா லெப்பை மரிக்கார் மற்றும் சவுதா பீவி தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக பிறந்தார். அவரது தந்தையான நெய்னா லெப்பை மரிக்காரும் இளமைக் காலம் முதலே பிறருக்கு உதவுபவராகவும் சமூகப் பணிகளில் பங்கெடுப்பவராகவும் இருந்துள்ளார்.

கல்வி:

ரஹ்மத்துல்லாஹ் மரைக்கார் 5 வயதில் புத்தளம் செட்டிவீதி (மஸ்ஜித் வீதி) 4ஆம் குறுக்குத் தெரு சந்திக்கருகாமையில் அமைந்திருந்த ‘ஆலையடி அப்பா’ குர்ஆன் ஓதும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதே வயதில் புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலையில் (தற்போதைய பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி) முதலாம் வகுப்பு கீழ்ப் பிரிவில் தனது கல்வியை ஆரம்பித்தார். 1948 ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணி புத்தளம் ஊடாக அநுராதபுரம் சென்ற வேளை புத்தளத்தில் வரவேற்பளிக்கப்பட்ட போது சிறுவன் ரஹ்மத்துல்லாஹ் மரிக்கார் சிங்கக் கொடியையும் பிரிட்டிஷ் கொடியையும் கைகளில் ஏந்திக் கொண்டு வரவேற்பவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இவர் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண (தற்போதைய 12 ஆம் ஆண்டு) வகுப்பு வரை அதே பாடசாலையிலே கற்றதோடு அரச பரீட்சையில் சித்தி பெற்றார். இவர் கல்வி கற்ற காலத்தில் பாடசாலை தலைமை ஆசிரியர் உட்பட ஏனைய ஆசிரியர்கள் அனைவரும் தமிழ் ஆசிரியர்களே.  பாடசாலை காலத்திலேயே ஒழுக்கமானவராக ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவராக பொறுப்பேற்கும் விடயங்களைச் சிறப்பாக செய்து முடிப்பவராகத் திகழ்ந்தார்.

ஆசிரியர் நியமனம்:

1961 நவம்பர் 27 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் தனது ஆசிரியர் பணியைப் புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். 1962 மே மாதம் ஆலங்குடா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு இடமாற்றம் கிடைத்து அங்கு 6 மாதங்கள் சேவையாற்றினார். 1964-1965 வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலையகத்தில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். அங்கு தனது துடிப்பான செயற்பாடுகள் மூலம் அதிபர் போதனாசிரியர்கள் சகபயிற்சி ஆசிரியர்கள் அனைவரதும் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார்.

1966 ஆம் ஆண்டு முதல் பயிற்சி பெற்ற ஆசிரியராக அநுராதபுர மாவட்டம் மரதன்கடவல ஸ்ரீராகுல மஹா வித்தியாலயம் (125 ஆசிரியர்களில் ஒரேயொரு முஸ்லிம் ஆசிரியர்) அநுராதபுரம் கிவுலேகட முஸ்லிம் பாடசாலை (மல்வத்து ஓயா ஆற்றிலிருந்து 8 மைல் தூரம் நடந்து செல்லும் காட்டுப்பாதை) ஆகியவற்றில் சேவையாற்றினார். பின்னர் அதே மாவட்டத்தில் நொச்சியாகம முஸ்லிம் பாடசாலையில் பணியாற்றினார்.   1968 ஜூலை 1 முதல் புத்தளம் மாவட்டம் சிராம்பியடி சிங்கள வித்தியாலயத்தின் தமிழ்ப் பிரிவில் கடமையாற்றினார். 1970.01.01 முதல் புத்தளம் சாஹிரா மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் 1978.06.07 வரை சேவையாற்றினார்.

1978.06.08 முதல் கொத்தாந்தீவு முஸ்லிம் வித்தியாலயம் 1980.03.01 ஆனமடுவ சங்கட்டிக்குளம் முஸ்லிம் வித்தியாலயம் என்பவற்றில் சேவையாற்றியதோடு சங்கட்டிக்குளம் பாடசாலையில் அதிபராகவும் பணியாற்றினார். 1981.07.06 முதல் கொழும்பு ஹமீத் அல்ஹூஸைனி மத்திய கல்லூரியில் பணியாற்றினார். 1989.06.09 இல் மீண்டும் புத்தளம் சாஹிரா கல்லூரியில் கடமையாற்றினார். அதன் ஆரம்பப் பிரிவு அதிபராகச் செயற்பட்டார். ஓய்வு பெறும் வரை தனது சேவையை சாஹிராவுக்கே வழங்கிய அவர் 1993.07.31ல் ஆசிரிய சேவையிலிருந்து இளைப்பாறினார்.

1985.03.18 அன்று இலங்கை கல்வித் திணைக்களம் வெளியிட்ட 5 ஆம் ஆண்டு இஸ்லாம் பாடப் புத்தகத்தில் நூலாசிரியர்கள் குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

தொழிற்சங்கம்

ஆசிரியப் பணி காலத்தில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் புத்தளம் கிளை செயலாளராகவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க மத்தியகுழு செயலாளராகவும் செயற்பட்டு ஆசிரியர்களின் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.  1994.10.06 இல் ஆசிரிய சேவை கல்வியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட போது சேவையிலுள்ள ஆசிரியர்களின் சம்பளம் இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டன.  இது ஆசிரிய சேவைக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் பெரும் அநீதியாக அமைந்தது. இதற்கான போராட்டம் புத்தளத்திலிருந்து ஆரம்பித்து நாடு முழுவதும்
பரவியது.

இதற்கான ஆரம்ப கர்த்தாக்களில் அவர் முக்கியத்துவம் பெற்றவர். அன்றைய காலம் பயங்கரவாதம் நாடு முழுவதும் வியாபித்திருந்தது. அதன் போதும் அவர்
துணிச்சலுடன் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலா பக்கங்களுக்கும் களுத்துறை முஹம்மது ஐதுரூஸ் எனும் சிங்கள மொழி மூல விஞ்ஞான பாட ஆசிரியருடன் இணைந்து சென்றார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதிக்கும் சென்று 200 ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரிய ஆசிரியைகள் மத்தியில் போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் கூறி வந்தமை விஷேட அம்சமாகும்.  அந்தப் போராட்டம் பெரு வெற்றியையும் கொடுத்தது.

விளையாட்டு:

இளம் பிராயத்திலேயே கரப்பந்தாட்டம் உதைப்பந்தாட்டம் என்பவற்றில் ஆர்வம் காட்டிய இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.  16 வயதின் கீழ் உதைப்பந்தாட்டப் போட்டி காலி கோட்டையில் இடம் பெற்ற போது மர்ஹூம் என். எம். எம் ஹலீல் ஆசிரியரின் பயிற்சி மூலம் சாஹிரா கல்லூரி அணியினர் 2 ஆம் இடத்தில் வெற்றியீட்டினர். வீரர்கள் அப்போதைய ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவவினால் பதக்கம் அணிவிக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டனர். அன்று மர்ஹூம் ஹலீல் ஆசிரியருக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டவர் ரஹ்மத்துல்லாஹ் ஆசிரியர்.

சாஹிராவின் கறுப்புத் தரவை மீட்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது கறுப்புத் தரவைக்கு இடப்பட்டிருந்த கம்பி வேலிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடுங்கி எறியப்பட்டன. அதை மையமாக வைத்து பொலிசார் 6 பேரை கைது செய்தனர். கறுப்புத் தரவைக்காக நீதிமன்றம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தவர்களில் முதலாம் நபரும் இவரேயாகும்.

புத்தளம் வெம்பிளி கரப்பந்தாட்டக் கழகத்தில் அங்கத்தவரான இவர் பல கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் பங்கு கொண்டு தனது கழகம் சம்பியன் வெற்றிவாகை சூட பெரும் பங்களிப்பு செய்தார். உதைப்பந்தாட்டத்திலும் ஆர்வமுடைய இவர் அகில இலங்கை உதைப்பந்தாட்டச் சங்க அனுமதி பெற்ற நடுவராகவும் செயற்பட்டுள்ளார்.

இருப்போர்: (இடமிருந்து வலம்)
1. சபியுதீன் ஆசிரியர் 2. நாளிர் 3. மார்சோ

நிற்போர்: (இடமிருந்து வலம்)
1. பாச்சா 2. நஜார் 3. ரஹ்மத்துல்லாஹ் ஆசிரியர் 4. ஹுசைன் (முன்னாள் நகரசபைத் தலைவர்) 5. அஸ்லம்


அரசியல்:

1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் தொகுதியில் போட்டியிட்ட லங்கா சமசமாஜக் கட்சி வேட்பாளருக்காக பிரசாரத்திற்கு வருகை தந்த. என். எம். பெரேரா கொல்வின் ஆர். டி. சில்வா தர்மலிங்கம் போன்றவர்களின் கொள்கை விளக்கங்களை விளங்கி தனது ஆரம்ப அரசியலில் தன்னை ஒரு இடதுசாரி ஆதரவாளராக மாற்றிக் கொண்டார். அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடுடைய இவர் 1970 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவாளராக மாறி அக்கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றதுடன் புத்தளம் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1997 இல் புத்தளம் நகர சபைத் தேர்தலிலும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

சமய சமூகப் பணிகள்:

சமய இயக்கங்களுக்கு ஆதரவினை வழங்கிய போதும் அவர் தன்னை முழுமையாக அவற்றில் இணைத்துக் கொள்ளவில்லை. புத்தளம் பெரியபள்ளி மத்திய மீலாத் குழு போட்டிச் செயலாளராகவும் செயற்பட்டுள்ளார். 1961 ஆம் ஆண்டு புத்தளம் வான் வீதியில் அமைந்துள்ள ‘மஸ்ஜிதுல் தக்வா’ முதன் முதலாக ஓலைக் கொட்டிலினால் ஆரம்பிக்கப்பட்ட போது பள்ளிவாசலின் முதலாவது செயலாளர் இவரே. இவரது பிரதிபலன் எதிர்பாராத பொதுநல சேவை சமூகத் தொண்டு என்பவற்றுக்காக 2007 ஒக்டோபரில் ‘தேசகீர்த்தி’ என்ற ஜனாதிபதி விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். புத்தளத்தில் இவ்விருதைப் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் ஆசிரியர் இவர் மட்டுமே ஆவார்.

புத்தளம் காதி நீதிமன்ற ஜூரி குழுவில் முதல்வராக மூன்று வருடங்களுக்கு மேலாக செயற்பட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு உம்ரா கடமையையும் நிறைவேற்றியுள்ளார். இன்றும் அவர் வசிக்கும் கடையாக்குளம் சமகி மாவத்தை ‘மஸ்ஜிதுல் பலாஹ்’ ஜூம்ஆ பள்ளிவாசல் செயலாளராக 22 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருவதுடன் இப்பிரதேச வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார். இவரது தன்னலமற்ற மக்கள் சேவையை மேலும் விரிவுபடுத்த 1996.01.02 அன்று நீதியமைச்சு அகில இலங்கை சமாதான நீதவான் பதவிக்கு இவரை நியமித்தது.

திருமணமும் பிள்ளைகளும்:

1967 ஆம் ஆண்டு புத்தளம் நகரசபை உபதலைவராக இருந்த மர்ஹூம் அப்துல் கபூர் மற்றும் மர்ஹூமா சபுரா பீவி ஆகியோரின் மூன்றாவது புதல்வியான உம்மு சுலைஹாவை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியும் வபாத்தாகி 11 வருடங்களாகின்றன. பிள்ளைகள் ஐவரும் (முஹ்ஸி, இர்சாத், சராபத்துல்லாஹ், ஆசாத், ஜெசீலா) ஆசிரியர்களாக மக்கள் பிரதிநிதிகளின் செயலாளராக கணக்காளராக முகாமைத்துவ உத்தியோகத்தராக சமாதான நீதவான்களாக சமூகத்துக்கும் மக்களுக்கும் பயனுள்ளவர்களாக இருப்பதை இட்டும் அவர் மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்டுள்ளார். அவர்களின் இந்த உயர்வுக்கு தனது மனைவியே முக்கிய காரணம் எனவும் அவர் அடிக்கடி நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
அல்லாஹ்வின் நாட்டப்படி தனது 78 வது வயதில் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதற்கு தனக்கு அல்லாஹ் செய்துள்ள அருளுக்காக நன்றி கூறுவதுடன் தனது தேகாரோக்கியம் மற்றும் ஈருலக வாழ்வின் ஈடேற்றத்துக்காகவும் பிராரத்திக்குமாறும் அன்பாக வேண்டுகிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All