Puttalam Online
social

ஜனாஸா எரிப்பு – 1

  • 25 November 2020
  • 284 views

ஜனாஸா எரிப்பு – 1

(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்)

Prof. M.S.M. Anas

ஜனாஸாவை, பூத உடலை எரிப்பது பற்றித் தேடிப்பார்த்தவரை இலங்கையில் மட்டுமே நடைபெறும் தீய சம்பவம். இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதலாவது அலையின் போது கொரரோனா தொற்றினால் இறந்த நபர்களின் சடலங்களை இனமத வேறுபாடுகள் பாராது எரிப்பது என்று இலங்கை அரசாங்கம் முடிவெடுத்தது. முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது உடல் தீயில் எரிக்கப்படுவதை ஒரு முஸ்லிம் எந்த நிலையிலும் ஏற்கப் போவதில்லை. மார்க்கம், பண்பாடு என்ற இரண்டு வழிகளாலும் மண்ணில் புதைப்பதை மட்டும் தான் அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மரணம் அதன் இறுதி நடவடிக்கைகள் பற்றி ஒரு முஸ்லிமுக்கு ஒரு இறுக்கமான உளவியல் உள்ளது. அவனது இலட்சியம், எதிர் பார்ப்பு ,மார்க்க விதிகளின் பூர்த்தி வாழ்வின் முடிவின் இறுதி நிலைமைகள், மறு உலக வாழ்வு எல்லாவற்றையும் தீவிரமாக உட்படுத்திய உளப்பண்பாட்டியல் வரையறை அது.

இறந்த உடலை எரித்து அழிக்காதுவிட்டால் இறந்த சடலத்திலிருந்து கோவிட் 19 பரவும் என்பது அறிவு ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விதியாக இருந்தால் அதை ஏற்க இலங்கை முஸ்லிம்கள் தயாராகவே இருந்தார்கள். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைக் கையாள்வது பற்றிய விதிகள், ஆலோசனைகள் பற்றிய அறிக்கைகள், மற்றைய நாடுகளின் செயல் பாடுகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். இறந்தவர்களின் சடலங்களை அவரவரின் நம்பிக்கைகளின்படி புதைக்க அல்லது எரிக்க தடைகள் எதுவும் இருக்கவில்லை.

ஆனால் நிலக்கீழ்நீர் இலங்கையில் 5, 6 அடியில் மிகக் குறைந்த ஆழத்தில் இருப்பதால் தேவை யான 8, 9 அடி ஆழத்தில் புதைக்க வாய்ப்பு இல்லை. கிருமிகள் தண்ணீரில் கலந்து நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று கூறப் பட்டது. 10, 20, 30 அடி ஆழத்திலும் தண்ணீர் இல்லாத இடங்கள் இங்கு எவ்வளவோ உண்டு. இது பற்றித் தெளிவான கருத்துக்கள் எதுவும் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படவில்லை.

இதை அரசாங்கத்துடன் பேசித்தீர்க்க முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், சமய அமைப்புகள் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன .அரச சுகாதார உயர்மட்ட அதிகாரிகளுடன் மூத்த முஸ்லிம் வைத்தியர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றின் சந்திப்பும் பயனற்றதாகியது.

அரசாங்கம் தான் போட் ட சட்டத்தை மாற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தது . முஸ்லிம் எதிர்ப்பும் முஸ்லிம் வெறுப்பும் உச்சியில் வேலை செய்த நேரம் அது . அரசியல் இலாபத்திற்காக பெரும் பான்மை மக்களை ஓரணியில் திரட்ட அரசில் இருந்த சில இனவாத சக்திகள் இதையும் ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தின.

அரசியல் மற்றும் இனவாத முஸ்லிம் எதிர்ப்பினாலேயே ஆட்சியைப் பிடிக்கலாம் . இதேசாக்கில் முஸ்லிம்களை மேலும் புண்படுத்தலாம் என்ற எண்ணங்களும் வளர்க்கப்பட்டன. விமல் வீரவங்ச, கம்மம்பில போன்ற சில அரசாங்கத் தரப்பு பா. மன்ற உறுப்பினர்கள் இரவு பகலாக இனவாதத்தை நாடு முழுவதும் பரப்பினர். அவர்களுக்கு ஆதரவாகச் சில பிக்குகளும் ஒன்றுசேர சாதாரண , நடு நிலை சிங்கள மக்களும் முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். பேரினவாதிகளின் இனவாத ஊடகங்களின் முஸ்லிம்களுக்கு எதிரான அழிவுப் பிரசாரங்கள் ஆங்காங்கே எஞ்சி இருந்த நல்லெண்ணங்களையும் மூழ்கடித்தன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட தீவினைக்கான பொறுப்புதாரிகள் குறிப்பிட்ட சிறு குழுவினராக இருந்தபோதும் முழு முஸ்லிம் சமூகத்தினையும் அது பாதித்தது. சந்தேகமும் வெறுப்பும் உதாசீனப் படுத்தல்களும் முஸ்லிம் சமூகத்தை நிலை குலையச்செய்தது. சிங்கள சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே இருந்த நீண்ட காலப் பிணைப்புக்களும் நம்பிக்கைகளும் தூக்கி எறியப்பட்ட நிலை அது.
குண்டுதாரிகளால் தாக்கப்பட்டவை சிங்கள, தமிழ் கிறிஸ்தவ தேவாலயங்கள். 300 க்கும் அதிகமானோர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 500 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் மாவனல்லை முஸ்லிம் நகரிற்கு அண்மையில் இருந்த 4, 5 புத்தரின் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப் பட்டிருந்தன. ஆரம்பத்தில் யார் செய்தது என்பதில் குழப்பம் இருந்தாலும் சில வாரங்களில் அதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் முஸ்லிம்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதோடு பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இப்போது நடந்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைய அறிவிப்புகளின்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது அல்லது அதன் பின்னர் பௌத்த தலங்களைத் தாக்கும் திட்டம் சஹரான் குழுவினரிடம் இருந்துள்ளது. இது ஒரு சிக்கலான நிலைமை . சஹரான் குழுவில் பாரத்தைப் போட்டு விட்டு சமூகம் மௌனமாக இருக்கமுடியாது.
மீண்டும் நல்லெண்ண உறவுகளையும் பரஸ்பர நம்பிக்கை களையும் வளர்க்கும் பாரிய பொறுப்பினை செயல்படுத்துவதற்கு முஸ்லிம் சமூகம் முன் வந்தது. சமயவாதிகள் , புத்திஜீவிகள், சாதாரண மக்கள் எனப் பல்வேறு பிரிவினர் இதற்காக அயராது உழைத்து வந்த நேரத்தில்தான் கொரோனா ஊடக ஜனாஸா எரிப்புப் படலம் ஆரம்பமாகியது.

பாகம் இரண்டு பின்னர் …

/Zan


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All